அரசியலைப் பொறுத்தவரை குடும்ப ஆட்சி என்பது அடிப்படையில் நேர்மையற்றுப் போகவும், ஊழல் பெருகுவதற்குமே வாய்ப்பாக அமைகிறது. பெரும்பாலும் மைய ஆட்சியில் இருப்பவர்கள் குடும்ப ஆதிக்கத்தைக் கொண்டுவரும்போது, மிகப்பெரிய வீழ்ச்சிக்குள் அந்த நாடு தள்ளப்படுவதைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம். இலங்கையிலும் ராஜபக்சே குடும்ப ஆட்சி ஏற்படுத்தும் விளைவுகள் மிக மோசமானவையாகவே இருக்கின்றன.
குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம், ஊழல் ஆகிய காரணங்களால் 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வியடைந்த பிறகு, 2019-ம் ஆண்டு கோத்தபய ராஜபக்சே பெற்ற வெற்றி, இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு வழிவகுத்தது. இலங்கை அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே தன் அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இலங்கையின் ஆட்சி மீண்டும் ராஜபக்சே குடும்பத்தின் வசமானது.
சமல் முதல் சசீந்திர வரை…
சிங்கள அரசியல்வாதியான டான் ஆல்வின் ராஜபக்சேவுக்கு ஒன்பது பிள்ளைகள். அவர்களில் நான்கு பிள்ளைகள் இலங்கை அரசின் அதிகாரக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சுகிறார்கள். இரண்டாவது பிள்ளையான சமல் ராஜபக்சே, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் கடந்தகால ராஜபக்சே ஆட்சியில் சபாநாயகராகவும் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மூன்றாவது பிள்ளையான மகிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராகவும், ஐந்தாவது பிள்ளையான கோத்தபய ராஜபக்சே அதிபராகவும் பதவிவகித்து வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் ஆறாவது பிள்ளையான பசில் ராஜபக்சேவும் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
ராஜபக்சே சகோதரர்கள் மட்டுமல்ல, மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும், சமல் ராஜபக்சேவின் மகன் சசீந்திர ராஜபக்சேவும்கூட அமைச்சர் பதவி வகித்துவருகிறார்கள். இப்படி ஒற்றைக் குடும்பம் மட்டுமே இலங்கை அரசியலின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் அனுபவித்து வருகிறது. இது இலங்கை அரசியலில் எப்படியான விளைவுகளைத் தரப்போகிறது என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
தொடரும் சர்வாதிகாரமும்… தமிழர் புறக்கணிப்பும்!
கடந்தகாலத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப் போரில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஒன்றிணைவு பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. அப்போது இன்றைய அதிபர் கோத்தபய ராஜபக்சே, போருக்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சரின் செயலாளராக, அரச அதிகாரியாகப் பணியாற்றினார். மிக மோசமான வகையில், போர் அறங்களை மீறி தமிழர்களுக்கு எதிராகப் பாரிய இனப்படுகொலையைச் செய்வதற்கு ராஜபக்சேவினர் ஒன்றிணைந்து முன்னெடுத்த சர்வாதிகார ஆட்சியும், அதன் வழியிலான போருமே அடிப்படையாக அமைந்தன.
இவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, ஈழத்தமிழர்களின் எதிர்காலம் மென்மேலும் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே, தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் எந்த எண்ணமும் இல்லாமல் ஆட்சி நடத்திவருகிறார். இந்தியா வலியுறுத்தினாலும், ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13-வது திருத்தத்தைக்கூட நடைமுறைப்படுத்த ராஜபக்சேவினருக்கு மனம் இல்லை. இப்படி ராஜபக்சேவினரின் குடும்ப ஆட்சியின் விரிவாக்கமும் சர்வாதிகாரமும் தமிழர்களுக்கு எதிராக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நெருக்கும் சர்வதேச அழுத்தம்!
ஆனாலும், இன்று பன்னாட்டுச் சமூகம் இலங்கையின் சர்வாதிகாரக் கழுத்தை நெரித்துவருகிறது. அமெரிக்க காங்கிரஸ் கட்சி, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறது. கனடாவில் இன அழிப்பு நினைவேந்தலை அனுசரிக்கும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், ஜி.எஸ்.பி வரிச்சலுகையை நீக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக 628 உறுப்பினர்கள் வாக்களித்திருப்பதே பாரிய சர்வதேச அழுத்தத்தின் விளைவைக் காட்டுகிறது. எதிர்வரும் காலத்தில் ஐ.நா அவையிலும்கூட இலங்கை தொடர்பான விவாதங்கள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.
இன்னொரு பக்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போரில் கொல்லப்பட்டவர்களின் நீதிக்காகவும், தமிழர் தாயக உரிமைக்காகவும் ஈழ மக்கள் போராடிவருகிறார்கள். தமிழர் விடுதலையை ஐ.நா அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் தமிழர் தேசம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு நீதி வழங்க வேண்டும் என்பதே எம் மக்களின் வேட்கை. இன அழிப்பைக் குடும்பமாகச் செய்தவர்கள், மீண்டும் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்திவருகிறார்கள்.
ஆனாலும், இன அழிப்பின் நீதிக்கான பொறுப்புக்கூறலிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது!