(மன்னார் நிருபர்)
(22-07-2021)
இசாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம் பெற்ற வேண்டும் எனவும், நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கண்டித்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை (22) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ, சட்டத்தரணி,பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக வித்தியாவை அடுத்து இசாலினியா?,சிறுவர் பெண்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்போம்,பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு விரைவாக நீதி வழங்குங்கள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தை தடுப்போம்,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.