23-07-2021 கதிரோட்டம்
இலங்கையில் இடம்பெற்ற இன முரண்பாடுகள் மற்றம் அரசிற்கு எதிரான ஆயுதப்போராட்டம் ஆகியவை காரணமாக, உலகின் பல நாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பெரும்பாலான மேற்குலக நாடுகளில் நிரந்தர வதிவுரிமை அந்தஸ்த்து வழங்கப்பெற்று பின்னர் சில ஆண்டுகளின் பின்னர் குடியுரிமை அந்தஸ்த்து வழங்கப்பெறுகின்றது. இவ்வாறு அகதிகளாகச் சென்றவர்கள் மேற்குலக நாடுகளில் அரசியல் மற்றும் நிர்வாகத் தளங்களில் உயர் நிலைக்குச் சென்றுள்ளார்கள்.
ஆனால் அயல் நாடு என்று எமது இலங்கைத் தமிழர்கள் அன்போடு அழைக்கும் இந்தியாவில் மாத்திரமே எம் மக்களுக்கு குடியுரிமை அந்தஸ்த்து தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்றமை நீண்ட கால வடுக்களாய் அவர்கள் மனங்களில் பதியப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளுக்கு விமானங்கள் மூலமாகப் பறந்து சென்ற எமது இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் தகுந்த முறையில் உள்வாங்கப்பெற்று பின்னர் உரிய விசாரணைகள் முடிவுற்ற பின்னர் அரசியல் அந்தஸ்த்து பெற்ற அகதியாக மேலும் உள்வாங்கப்படுகின்றார்கள். ஆனால் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அந்த இந்திய மண்ணில் தமிழரசு என்ற தமிழ்நாட்டில் வாழந்து வந்தாலும் உரியவர்களால் எமது இலங்கைத் தமிழ் அகதிகளின் வலிகள் தொடர்பான கதைகள் கேட்கப்படவில்லை. வள்ளங்களில் பல ஆபத்துக்களைத் தாண்டி தமிழ்நாட்டுக் கரைகளை அடைந்த எமது மக்கள் இன்னும் அழுகையோடும் துயரங்களோடும் காலங்களைக் கடந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இலங்கையில் போர்ச் சூழலின் நடுவே தங்களது உடைமைகளைக் கைவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவில் கரையேறிய காலகட்டம், தமிழர் வரலாற்றில் துயரம் படிந்த அத்தியாயம். தொண்ணூறுகளை ஒட்டிய ஆண்டுகளில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குச் சென்ற அகதிகள் ஒரே மொழி, ஒரே வாழ்க்கை முறை ஆகியவை அளிக்கும் பாதுகாப்புணர்வின் காரணமாக அங்கேயே தங்கிவிட்டார்கள். இப்போது இலங்கை என்பது அவர்களுக்குப் பெரிதும் இளம் பிராயத்து நினைவுகள் மட்டுமே.
இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறையும் உருவாகிவிட்டது. இந்நிலையில், அவர்கள் இலங்கைக்குத் திரும்பிச்செல்லும் பட்சத்தில், அங்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தை அணுகி, தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பிலும் அகதிகளின் குடியுரிமைக் கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மறுவாழ்வு முகாம்களிலிருந்து பிற ஊர்களுக்குச் சென்று வேலைவாய்ப்புகளை எளிதில் பெற முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
2019-ம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இந்துக்களைப் போலத் தங்களுக்கும் குடியுரிமை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது அவர்களது வருத்தமாகவும் இருக்கிறது.
இலங்கையில் பூர்விகத் தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தத காரணத்தாலேயே, அவர்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழந்தனர். அதுவே போர்ச் சூழலை நோக்கியும் தள்ளியது.
இவ்வாறான சூழ்நிலையில் தங்களுக்கு பிறந்த நாட்டுக்கு செல்வதற்கு போதிய பலமற்றவர்களாக இருப்பதால் இந்திய குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளத் துடிக்கும் எம்மவர்களுக்கு அவசியம் இந்தியாவின் குடியுரிமை அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்பதையே நாமும் வலியுறுத்துகின்றோம்.
இந்தியாவின் 2019-ம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து சென்ற இந்துக்களைப் போலத் தங்களுக்கும் குடியுரிமை வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது இலங்கைத் தமிழர்களின் இதயங்களில் பதிந்த வலியாகவும் வருத்தமாகவும் உள்ளன என்பதே கண்கூடு.