கடந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தால் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் மீண்டும் போர்க்கொடிகளை உயர்த்தியுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையில் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக ஜனாதிபதியுடனும் செவ்வாய்கிழமை கல்வி அமைச்சருடனும், பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் நேற்று தெரிவித்ததாக அண்மையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை காலை தெரிவித்தார்.
அதேவேளை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என்ற போதிலும், எங்களது பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு வழங்கப்படும் வரை பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லையென்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தொலைபேசியூடாக கலந்துரையாடினார். எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை காணப்படுகிறது. அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கள் தொடர்பான வழக்கு தீர்ப்பு, அமைச்சரவை பத்திரம், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் என்பனவும் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் திங்களன்று அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.