சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நுவரெலியாவிற்கு விரைந்து சென்று நடவடிக்கை
கொழும்பில் முன்னாள் அமைச்சரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவருமான ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய வேளையில் மர்மமான முறையில் மரணமான மலையக இளம் பெண் ஹிஷாலினி குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்க இலங்கை அரசு நேரடியாக களத்தில் இறங்கியது.
ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வெறும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இராமல் இலங்கையின் அமைச்சரவையின் அங்கீகாரத்தோடு சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா நுவரெலியாவிற்கு விரைந்து சென்று நடவடிக்கைகளை எடுத்துத்துள்ளார் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எமது செய்தியாளர் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில், இராஜாங்க அமைச்சர் நுவரெலியா அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்து ப அரச அதிகாரிகளோடு பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்கு தேவையான உடனடி உதவிகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
வீட்டுவேலைக்கமர்த்தப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் தாய் மற்றும் உறவினர்களை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சந்தித்த போதே இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அபிவிருத்தி அமைச்சு வழங்கும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் , சிறுமியின் குடும்பத்தாருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.
அத்தோடு மூன்று மாதங்களுக்குள் அந்த குடும்பத்திற்கான வீட்டை புனர்நிர்மாணம் செய்வதற்கும் சுயதொழிலை ஆரம்பிப்பதற்கும் தேவையான நிவாரணத்தை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா உறுதியளித்தார்.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா நுவரெலியா மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நுவரெலியா மாவட்ட செயலக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.