மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்
மன்னார் நிருபர்)
(26-07-2021)
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 46 ஆயிரத்து 440 பேருக்கு பைசல் தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை (26) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சமூக தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சமூக தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ளது.
அதன் அடிப்படையில் இது வரையில் 52 ஆயிரத்து 144 பேருக்கு சமூக தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 46 ஆயிரத்து 440 பேருக்கு பைசல் தடுப்பூசியின் முதலாவது ஊசியினை பெற்றுக் கொண்டுள்ளனர்.550 பேருக்கு 2 ஆவது ஊசி வழங்கப்பட்டுள்ளது.
666 பல்கலைக்கழக மற்றும் கல்வியல் கல்லூரி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி ‘பைசல்’ வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் 68 சதவீதம் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான 2ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதியில் இருந்து மேற்கொள்ளப்படும்.
இந்த மாதம் தற்போது வரை 148 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் மொத்தம் 940 தொற்றாளர்களும் , தற்போது வரை 957 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 600 பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில் 14 பேருக்கு தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்களில் இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் தற்போது வரை 2 ஆயிரத்து 341 பீ.சி.ஆர். பரிசோதனைகளும், அது வரை 24 ஆயிரத்து 617 பீ.சி.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசிகள் வழங்கப்படுவது பாரதூரமான கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க அன்றி தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அவர்களுக்கு அந்த நோய் பாரதூரமாக அமையாவிட்டாலும்,தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு அவர்கள் மூலம் நோய் ஏற்படுகின்ற போது அவர்களுக்கு பாரதூரமான விளைவுகள் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது.
இதை அனைவரும் புரிந்து கொண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும்,சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்ட அனைவரும் 2வது தடுப்பூசியினை உரிய நேரத்தில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதன் மூலம் முழுமையான பாதுகாப்பை கொரோனா தொற்றில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.