(மன்னார் நிருபர்)
(29-07-2021)
மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன் கிழமை மாலை அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களில் 37 வயதுடைய ஒருவர் இறந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன் கிழமை(28) வரை 52 ஆயிரத்து 682 பேருக்கு கோவிட் தடுப்பூசி யின் முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.இதில் 46 ஆயிரத்து 920 பைசல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர 550 பேருக்கு ஏற்கனவே 2 ஆவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.ஏனையவர்களுக்கு 2 ஆவது தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் இது வரை 30 வயதிற்கு மேற்பட்ட 70 சத வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.எஞ்சியவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் ஜூலை மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நேற்று புதன் கிழமை (28) வரை 173 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை மொத்தமாக 982 கொரோனா தொற்றாளர்களும்,இவ்வருடம் 965 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொத்தனியைச் சேர்ந்த 630 தொற்றாளர்களும் அடங்குகின்றனர்.நேற்றைய தினம் புதன் கிழமை (29) மாலை அடையாளம் காணப்பட்ட 5 கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் இறந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மன்னார் கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இளம் குடும்பஸ்தராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவருக்கு ஏற்கனவே இருதய நோய் காணப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இது வரை 9 கொரோனா மரணம் இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 24 ஆயிரத்து 900 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும்,நமது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
இக்காலங்களில் ஆலயங்களில் திருவிழாக்கள் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இடம் பெறுவதால் குறித்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தமது சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடை பிடித்து,திருவிழாவில் பங்கேற்ற வுடன் திருவிழா முடிவடைந்த பின் தேவையற்று நடமாடுவதை தவிர்த்தும்,கூட்டமாக இருப்பதை தவிர்த்து உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.