“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி” என்பது வெறும் சொல்லாடல் அல்ல. நிஜம் நிஜம்… இதை நிரூபிக்கும் வகையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வுகளில் ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமுடி, அழகன்குளம்..இவையெல்லாம் தொல்லியல்துறை அகா£ய்வு நடத்தும் இடங்களில் சில.
அவற்றில், மதுரைக்கு அருகில் (15 கி.மீ. தூரம்) சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியும், நெல்லைக்கு அருகில் (20 கி.மீ. தூரம்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரும் புதைந்து கிடக்கும் பழந்தமிழர் நாகரிகத்தை வெளிக்கொணர்வதில் பெரும் பங்காற்றி வருகின்றன.
கீழடி, வைகை நதிக்கரையின் நாகரிகத்தையும், ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றங்கரையின் நாகரிகத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டி வருகின்றன.
பெயரே சொல்கிறது, சேதி
கீழடி..இந்தப்பெயரே நமக்கு எதையோ சொல்ல வருகிறது. பூமிக்கு கீழே… பூமிக்கு அடியில்… என்பதை சுட்டிக்காட்டித்தான் இப்பெயரே இயற்கையாக அமைந்து விட்டது என்றே தோன்றுகிறது.
கீழடியில் இதுவரை 6 கட்ட அகழாய்வுகள் முடிவடைந்து தற்போது 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
இங்கு கிடைத்துள்ள பொருட்களும், சான்றுகளும் சுமார் 2,350 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நகர நாகரிக வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்பதை அடையாளம் காட்டியுள்ளன.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு தடைகளையும் தாண்டி தற்போது 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வரும் கீழடியில் 6 கட்ட அகழாய்வில் மண் ஓடுகள், ஆபரணங்கள், விளையாட்டுப்பொருட்கள், மண்பானைகள், உறைகிணறுகள், முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள் என ஆயிரக்கணக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டு ‘கார்பன் டேட்டிங்’ எனப்படும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, எல்லாமே 2,350 ஆண்டுகளுக்கு முந்தியவை என நிரூபணம் ஆகியிருக்கிறது. அவற்றில் பெரும்பாலான பொருட்கள் தற்போது மதுரையில் உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த பொருட்களை கீழடியிலேயே வைத்துப்பாதுகாத்து சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் அங்கு ரூ.21 கோடி செலவில் அங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.
சூரியமுத்திரையுடன் வெள்ளி நாணயம்
இந்தநிலையில் 7-ம் கட்ட அகழாய்வில் இப்போது சூரியமுத்திரையுடன் கூடிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்து, தொல்லியல் ஆர்வலர்களை பிரமிக்க வைத்துள்ளது. அப்படியானால் கிமு மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் நாணயம் மூலம் வணிகம்செய்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. அந்த நாணயத்தில் சூரிய முத்திரையுடன் நிலவு, விலங்குகள் ஆகியவற்றின் வடிவமும் இடம் பெற்றுள்ளது.
கீழடியை ஒட்டிய அகரத்தில் பழங்கால செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 3 அடி ஆழத்தில் தோண்டிய பின் இது இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதன் அருகில் செங்கல் குவியல் இருந்தது. இது இங்கு ஒரு கட்டிடம் இருந்ததற்கான ஆதாரம் தான் என்கின்றனர், தொல்லியல் ஆய்வாளர்கள்.
இதேபோல எடைக்கற்கள் பல அளவுகளில் கிடைத்துள்ளன. இதன்மூலம் பண்டைய தமிழர்கள் எண்ணியல், அளவிடுதல் முறைகளை நன்கு கற்றவர்களாக இருந்திருக்கலாம் என தெரிகிறது.
சுடுமண் ஆபரணம் செய்து அந்த காலத்தில் அணிந்ததற்கான சான்றுகள் இங்கு கிடைத்துள்ளன. நாணய வடிவில் காதணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அகழாய்வில் 6 தாயக்கட்டைகள் கிடைத்து உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு எண்ணை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல அக்காலத்தில் விளையாட பயன்படுத்திய சுடுமண் வட்டச் சில்லுகளும் கிடைத்துள்ளன. இவை கருப்பு, மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் உள்ளன.
தங்க ஆபரணம்
முக்கியமாக, இந்த அகழாய்வில் தங்க ஆபரணம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 6-ம் கட்ட அகழாய்வில் ஒரு தங்க ஆபரணம் இருந்தது. இப்போது கிடைத்துள்ள ஆபரணம், காதில் அணியும் வளையம் போல இருக்கிறது. இந்த வளையத்தை நீட்டினால் 4.5 சென்டி மீட்டர் நீளம் இருக்கிறது. இதை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். முடிவு வந்த பின் அதுபற்றிய தகவல் கிடைக்கும் என தெரிகிறது.
விதவிதமான பாசிமணிகள் பல கட்ட ஆய்வின்போதும் கிடைக்கின்றன. ஆனால் இப்போது கிடைத்த பாசிமணிகள், முற்றிலும் வித்தியாசமானவை. அதாவது 3 பச்சை நிற பாசிமணிகள், ஒன்று சிவப்பு நிறத்தில் உள்ளது. இதுதவிர வெள்ளை நிற பாசிமணிகளும் உள்ளன.
குறியீடுகளுடன் பானை ஓடுகள், சிறிய வடிவிலான செப்பு பாத்திரங்கள், சுடுமண் சக்கரங்கள், இரும்பிலான பொருட்கள், கத்தி, ஆட்டக்காய்கள், மண்பாண்ட பொருட்கள், சிறிய மண்பானைகள், கிண்ணங்கள், தானியம் சேகரித்து வைக்கும் தாழிகள் போன்றவையும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
அதோடு, கல்லால் ஆன கோடாரி ஒன்று கிடைத்துள்ளது. கல்லின் இருமுனையை கூர் தீட்டி, ஆயுதமாகவும், பல்வேறு பயன்பாட்டுக்கும் வைத்திருக்கலாம் என அகழாய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். சிதிலமடைந்த அறுவடை அரிவாள், இரும்பு ஆணி ஆகியவையும் இங்கு கிடைத்து உள்ளன.
நூல் நூற்கும் தக்களி
தக்களி என்பது நூல் நூற்க பயன்படும் சிறு கருவி. தற்போதைய அகழாய்வில் இந்த தக்களியும் கிடைத்துள்ளது. இது களிமண், கல் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளது. இதில் துளையிட்டு அதில் ஒரு கம்பி அல்லது குச்சியை செருகி நூல் நூற்கலாம். இதன்மூலம் பண்டைய தமிழர்கள் நெசவுத் தொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்து இருக்கிறார்கள். ஆடைகளை அவர்களே தயார் செய்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் நடந்த அகழாய்வு பணிகளில் இதுபோன்ற தக்களி கிடைத்து இருந்தாலும் இங்கு அதிக எண்ணிக்கையில் இவை கிடைத்துள்ளன.
கீழடி அகழாய்வு குறித்து அங்கு பணியில் இருக்கும் தொல்லியல் அதிகாரிகள் கூறியதாவது:–
கீழடி ஒரு தொழில் நகரம்
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை இங்கு கிடைத்துள்ள பொருட்களையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இங்கு நகர நாகரிக வாழ்க்கையை மக்கள் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. பிராமி தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரம் இருந்து உள்ளது. இது தொழில்நகரமாக விளங்கியிருக்கிறது. அதற்கான சான்றுகள் எக்கச்சக்கமாக கிடைத்து உள்ளன. சாயப்பட்டறைகள் இருந்துள்ளன.
தொழிற்சாலைகள் ஏராளமாக செயல்பட்டு உள்ளன. 15 அடிக்கு ஒரு கழிவுநீர் கால்வாய் இருப்பதை கண்டு பிடித்து உள்ளோம். இது முழுக்க முழுக்க நூற்பாலை, சாயப்பட்டறைகள், செங்கல் சூளைகள் போன்றவை இருந்ததற்கான தடயங்களாக உள்ளன. இங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் குடியிருந்துள்ளனர். இந்த பகுதியில் வசித்தவர்களுக்கான மயானமாக கொந்தகை இருந்ததையும் அறிய முடிகிறது. அங்கு முதுமக்கள் தாழி, குழந்தைகள் உள்ளிட்டவர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.
இப்போதும் சிலைமான், புளியங்குளம் உள்ளிட்ட இந்த பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிக அளவில் உள்ளன. அதேபோல மானாமதுரை தான் இப்போதும் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பகுதியாக விளங்கி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது பல நூற்றாண்டுகளாக இந்த பகுதியில் இந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப்படுத்த முடிகிறது.
கீழடியில் விலை மதிக்க முடியாத ஆபரணங்களை பட்டை தீட்டும் தொழிலும் நடந்துள்ளது. அதற்கான சில பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன.
இன்னும் 75 சதவீத அகழாய்வு
இதுவரை 25 சதவீத அகழாய்வு தான் நடந்து உள்ளது. இன்னும் 75 சதவீதம் முடித்தால் தான் முழுமையான தகவல்களை கொடுக்க முடியும்.
இதுவரை கிடைத்த பொருட்கள், தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். பல்வேறு நாடுகளில் இருந்தும் கீழடி அகழாய்வு குறித்த விவரங்களை ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
பிரம்மிக்க வைக்கும் ஆதிச்சநல்லூர்
இதற்கிடையே, கீழடிக்கு இணையாகவே ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளும் பிரம்மிக்க வைக்கின்றன.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்களும் ஏற்கனவே புளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டு அங்குள்ள “பீட்டா அனலிட்டிக் டெஸ்டிங் லேபரட்டரி”யில் கார்பன் டேட்டிங் செய்யப்பட்டதில் அனைத்தும் 2600 ஆண்டு முதல் 2850 ஆண்டுகள் பழமையானவை என்று தெரியவந்தது. மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டின் கபாலத்தில் நெற்றிக்கண்ணுக்குரிய அடையாளம் இருந்தது, ஆய்வாளர்களை அதிசயிக்க வைத்தது. இதனால் ஆதிகால மனிதன் நெற்றிக்கண்ணுடன் வாழ்ந்தானோ என்ற கேள்வியும் எழுந்தது. இதுபற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.
இதனால் ஒன்றிய தொல்லியல் துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆதிச்சநல்லூர் வந்து பார்வையிட்டு அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கும் பணியை முடுக்கி விட்டுச் சென்றுள்ளனர். அதாவது இதை “சைட் மியூசியம்” என்பார்கள். அகழாய்வு நடைபெறும் இடத்தின் மீது கண்ணாடி போர்த்தப்பட்டு அதன் மீது மக்கள் நின்று உட்பகுதியை பார்வையிடுவதுபோன்று அமைப்பார்கள். ஆதிச்சநல்லூரில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஜெர்மனியின் பெர்லின் நகரில் இருக்கும் ஆதிச்சநல்லூர் அதிசயப்பொருட்களையும் மீட்டெடுத்து இங்குகொண்டு வந்துவைக்க இருக்கிறார்கள்.
உலக அதிசயங்கள் பட்டியலில் என்னென்னவோ இடம்பெற்றிருக்கலாம். ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இளமையுடன் நீடித்து நிற்கும் தமிழே நிலையான அதிசயம். அத்தமிழ் பேசும் மண்ணைத் தோண்டத்தோண்ட இன்னும் பல அதிசயங்களை நமக்குத் தந்துகொண்டே இருக்கும்.
—-திருநெல்வேலியில் இருந்து
மணிராஜ்.
கீழடியின் கொடை குறைவதில்லை!
தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி ஆய்வு பற்றி முகநூலில் பெருமிதத்துடன் பின்வருமாறு பதிவிட்டு இருக்கிறார்:
“கீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது.
‘ கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ எனப் பாடிய பாரதியின் வணிகக் கனவினைப் பொது யுகத்துக்கு முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே நனவாக்கிக் காட்டிய கீழடித் தமிழ்ச் சமூகத்தின் வணிகத் தொடர்புகளுக்கான ஆதாரம் அது.
வெள்ளியிலான முத்திரைக் காசு ( றிuஸீநீலீ விணீக்ஷீளீமீபீ சிஷீவீஸீ) ஒன்று சில நாட்களுக்கு முன் கீழடி அகழ்வாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் வழியே இதன் காலம் மௌரியர்களின் காலத்திற்குச் சற்று முன்னதாக பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டின் நடுவிலானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரைவட்டம் மற்றும் ‘ட’ வடிவக் குறியீடுகளும் காணப்படுகின்றன.
2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசு, வட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்றுமொறு சான்று.
கீழடிநம்தாய்மடி.”