சிவா பரமேஸ்வரன் –மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
இலங்கை ஆட்சியாளர்கள் சொல்லுவது ஒன்று செய்வது வேறு என்பது புதிய விஷயம் அல்ல. அதை எதிர்பார்ப்பவர்கள் கனவுலகில் மட்டுமே சஞ்சரிக்க முடியும்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் போர் என்ற ஒற்றை சொல்லைப் பயன்படுத்தி அனைத்திலிருந்தும் தப்பித்துக் கொண்டது இலங்கை. ஆசியாவில் அண்டை நாடான இந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தது `முத்து தீவு`. போர் அனைத்தையும் புரட்டிப் போட்டது, பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றது. போர்க்கால பொருளாதாரம் காரணமாக வேலை வாய்ப்புகள் சுருங்கின. இராணுவத்தின் அகோரப் பசிக்கு தீனி போடவே அரசு சிரமப்பட்டது.
கடந்த சுமார் 40 ஆண்டுகளாக `நீறுபூத்த நெருப்பாக` இருந்த பல பிரச்சனைகள் இப்போது பூதாகாரமாக உருவெடுத்து பல்துறைகளின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இதில் பல தசாப்தங்களாகவே இலங்கையில் இருந்த பாரிய பிரச்சனைகளில் ஒன்று சிறார் துஷ்பிரயோகம். வெளிநாடுகளிலிருந்து `பாலியல் சுற்றுலாவுக்காகவே` இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது பரவலாக அறியப்பட்ட ஒன்றாகவே இருந்தது. மேலும் பன்னாட்டு பொலிஸ் அமைப்பான இண்டர்போல் மற்றும் மனித உரிமை அமைப்புகள், சர்வதேச தொழிலாளர் நல அமைப்பு ஆகியவை இலங்கை ஒரு சிறார் பாலியல் சொர்கமாகவே திகழ்கிறது என்றெல்லாம் கவலை வெளியிட்டு அரசுக்கும் தெரிவித்தன.
தொடர்ச்சியாக வந்த அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன ஆனால் அவை போதுமானதாக இருக்கவில்லை. சட்டத்திலிருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி சிறார்கள் துஷ்பிரயோகம் தொடர்ந்தது. துஷ்பிரயோகம் என்று சொல்லும் போது சிறார்களை வேலைக்கு அமர்த்துவது, பாலியல் தொழில் பயன்படுத்துவது ஆகியவை முக்கியமானவை. இளம் வயதில் சிறார்களும் துறவறத்தில் தள்ளப்படுவதும் சிறார் துஷ்பிரயோகம் என்கிற வரையறைக்குள் வருகிறது.
இதற்கு சமூகப் பொருளாதார ரீதியாகப் பல காரணிகள் மற்றும் காரணங்கள் இருந்தாலும் எதையுமே நியாயப்படுத்த முடியாது. வயதை மாற்றிக் காட்டுவது, சிறார்கள் உதவி மட்டுமே செய்கிறார்கள் வேலை செய்வதில்லை என்று கூறுவது, அதிகார பலத்தைப் பயன்படுத்து வீட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களை அடிமையாக நடத்துவது போன்ற கண்டிக்கத்தக்கச் செயல்கள் எல்லாமே போர் என்ற போர்வையினால் மூடப்பட்டது.
பல வகையில் சர்வதேச அழுத்தங்கள் வர ஆரம்பித்ததை அடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் வீட்டு வேலைக்குச் செல்பவர்களின் குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்த அரசு முன்வந்துள்ளது.
ஒரு மரணம் இந்த மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஹிஷாலியின் மரணம் ஏற்படாமலேயே இந்த மாற்றம் வந்திருக்க வேண்டும். ஆனால் இந்த மரணம் துரதிஷ்டவசமாக சம்பவித்தது என்னமோ ஜூலை மாதம் 15 திகதிதான். ஆனால் அதற்கு முன்னதாகவே அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆணைக் குழுவொன்று பல பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி இந்தாண்டு பிப்ரவரி மாதம் அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்தது.
அந்த அறிக்கையில் “சிறார் பாதுகாப்பு கொள்ளை நாட்டில் 21 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது“ என்று கூறியுள்ளது. அதாவது மறைமுகமாக கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் சிறார் துஷ்பிரயோகம் ஏதோவொரு வகையில் நடைபெற்று வந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச அரசுகளும் பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்க போன்றவர்களும் பொறுப்பேற்க வேண்டும், மக்களுக்கு பதில் கூற வேண்டும்.
ஐ நா அறிக்கை, அமெரிக்கா அறிக்கை, ஐரோப்பிய நாடாளுமன்ற அறிக்கை ஆகியவற்றைப் போன்று இந்த அறிக்கையை அரசு புறந்தள்ள முடியாது அதைச் செய்யவும் கூடாது. கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சிறார் தொழிலாளர் குறித்து சுமார் 100 புகார் அரசுக்கு கிடைத்துள்ளன என்று கூறும் அந்த அறிக்கை, இதில் சிறார்கள் கடத்தப்படுவதும் அடங்கும் என்று கூறியுள்ளது.
இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் நாட்டிலுள்ள பெரும்பாலான சிறார் தொழிலாளர்கள் மலையகப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். பல ஆண்டுகளாகவே யாழ்ப்பாணம் தொடங்கி கொழும்பிலுள்ள வசதி படைத்தவர்கள் வீட்டில் மலையகத்தை சேர்ந்த பெண்களே வீட்டுப் பணியாளர்களாக இருந்துள்ளனர். வடக்கு தொடங்கி தெற்கு வரை இந்த சிறார் தொழிலாளர்கள் அனுபவித்த சாதிய பாகுபாடுகள், கொடுமைகள், உடல் மற்றும் உளரீதியான துஷ்பிரயோகங்கள், மரணங்கள் என்பவை காலத்தில் கசந்த பக்கங்கள். இது புதிய விஷயமில்லை என்றாலும், இலங்கையின் மலையகத்தில் சமூகப் பொருளாதார நிலை இன்னும் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இப்போது `கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்` என்பது போல் வேலை செய்வதற்கு குறைந்தபட்ச வயதை 18ஆக உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது எந்தளவுக்குப் பலனை அளிக்கும் என்பதில் பல கேள்விகள் உள்ளன. மேலும் சில தொழில்களை வேலை செய்வதற்கு ஆபத்தான தொழிலாகவும் அரசு அறிவித்துள்ளது. ஏதோ நாமும் ஏதாவது சொல்லி வைப்போமே என்பது போலச் சிறார் பாதுகாப்பு அதிகார சபையும், “ சிறார்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை“ என்று ஒப்புக்குத் தெரிவித்துள்ளது.
கடந்த 21 ஆண்டுகளாக சிறார் பாதுகாப்புக் கொள்கை நாட்டில் நடைமுறைபடுத்தமால் இருந்தது இந்த `முதலைக் கண்ணீர்` அதிகார சபைக்கு தெரியாமல் போனது எப்படி? என்ற கேள்வியை தவிர்க்க இயலவில்லை.
சிறார் நலன்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கணக்கெடுப்பு சிறார்கள் நலன்கள் குறித்த கொள்கைகளை வகுத்து அவர்கள் சுரண்டப்படாமல் இருப்பதைத் தடுப்பதற்காகவே நடத்தப்படுகிறது. அவ்வகையில் கடைசியாக 2016ல் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி நாட்டில் 5-17 வயதினரில் குறைந்தது 1% சிறார்கள்-43,000க்கும் அதிகமானவர்கள்- குழந்தை தொழிலாளர்களாக இருந்துள்ளனர் என்றும், அதிலும் 39,000 பேர் அபாயகரமான தொழிலில் வேலை செய்கின்றனர். ஆனால் அதிகாரபூர்வமற்ற முறையில் நடத்தப்பட்ட மதிப்பீடு ஒன்று 2021 இந்த எண்ணிக்கை 15% அளவுக்கு உயர்ந்திருக்கலாம் என்று கூறுகிறது.
சிறார் தொழிலாளர் என்ற வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அதை இலங்கையிலுள்ள முதலாளிமார் தமக்குச் சாதகமாக தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். மலையகப் பகுதியில் நவகாலனித்துவ அடிமை முறை இன்றளவும் திகழ்கிறது. குடும்பத்தை நிரந்தரமாகக் கடனில் தள்ளி அதிலிருந்து மீளமுடியாத சூழலை ஏற்படுத்தி, மேலும் கடன் வாங்க வைத்து அதற்கு ஈடாகப் பிள்ளைகளைக் கொத்தடிமைகளாக வேலைக்கு வலிந்து சேர்த்து, தொடர்ந்தும் அந்த புதைகுழியிலிருந்து மீள முடியாமல் முதலாளிமார்கள் வைத்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சேவ் தி சில்ரன் இலங்கையின் 6 மாவட்டங்களில் பாலியல் தொழிலில் சிறார்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று கவலை வெளியிட்டுள்ளது. இதற்காக குழந்தைகள் கடத்தப்பட்டு மோசமான சூழல்களுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்கிறது அவர்களின் அறிக்கை. பாலியல் சுரண்டல் மற்றும் வர்த்தக இலாபத்திற்காகச் சிறார்கள் கடத்தப்படுவது மிகவும் மோசமான நடவடிக்கைகள் என்கிறது அந்த அமைப்பு.
இப்படியான செயல்பாடு இலங்கையில் தண்டிக்கப்படக் கூடிய குற்றங்களாக இருந்தும் சிறார் கடத்தல், வேலையில் ஈடுபடுத்தல், பாலியல் தொழிலில் தள்ளப்படுதல் ஆகியவை எவ்வகையிலும் குறையவில்லை.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் வேலைக்குச் செல்வது ஒரு சாபக்கேடு என்று கூறியுள்ள சேவ் தி சில்ரன், இதன் காரணமாக அவர்கள் சமூகத்திற்குள் உள்வாங்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டு பின்னாளில் குடும்ப பற்றற்று, குற்றச் செயல்களைச் செய்வதற்கு வழிவகுக்கிறது என்று வாதிடுகிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை.
இலங்கையில் இப்போது ஹிஷாலினிக்கு நீதி வேண்டும் என்று போராடும் அரசியல்வாதிகள் அனைவரும் ஏதோவொரு காலகட்டத்தில் ஆட்சியின் அங்கமாக இருந்தவர்கள். அவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்? மௌனமே பதில். அந்த மலையகப் பெண்ணின் அகால மாரணம் ஒரு பெரும் பிரச்சனையின் சிறு துளியே. கடந்த வாரம் இலங்கையின் சட்ட மா அதிபரின் திணைக்களம் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டது. “ வசதியானவர்களின் வீடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்வதற்குதோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கடத்தப்படுகிறார்கள், இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஆட்கடத்தல்“ என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நாட்டிலுள்ள சிறார்களைப் பாதுகாப்பதற்கு பொறுப்பான சிறார் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் விதித விதானபதிரண தமது “அலுவலகத்தில் சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன, அதுவே பிரச்சனைகளுக்கு காரணம்“ என்று நகைப்புக்குரிய வகையில் தெரிவித்துள்ளார். தமது அதிகார சபை சிறார் தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு ஐந்தாண்டு திட்டம் ஒன்று தீட்டப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் விதானபதிரன கூறுகிறார்.
இலங்கையில் ஒப்பீட்டளவில் சிறார் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன. அலரி மாளிகை தொடங்கி அரசில் அங்கம் வகிக்ப்பவர்களும் அவர்களை பணிக்கு அமர்த்தும் வசதி படைத்தவர்களும் தமது பிள்ளைகளைச் சிறார் தொழிலாளரியாகவோ அல்லது பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்ட ஒரு நபராகவோ சிந்தித்துப் பார்த்தால் அதை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது கடினமானதாக இருக்காது.
நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து உடனடியாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கொத்தடிமை முறை ஒழிக்கப்பட வேண்டும். வறுமை காரணமாக மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்வது அல்லது அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் “ஆசியாவின் அதிசயம்“ என்று கூறிக் கொள்ளும் இலங்கை பன்னாட்டரங்கில் மேலும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்.