பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமியின் புதைகுழியில் மருத்துவர் குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சிறுமி ஹிஷாலினியின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.
அதற்கிணங்க அப்பகுதி தற்போது பொலிசாரின் தீவிர பாதுகாப்புக்கு உட்படு த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி தீக்காயங்களுடன் மரணமடைந்துள்ள சிறுமி ஹிஷாலினியின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக இன்று (30) வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி பிரதேச பரிசோதனையை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பெயரிடப்பட்டு சட்ட மாஅதிபரின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்தினால் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மருத்துவர்கள் குழுவில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நீதிமன்ற மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் திருமதி ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட நீதிமன்ற மருத்துவ விஞ்ஞான பிரிவு தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான டாக்டர் சமீர குணவர்தன மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான விசேட நீதிமன்ற மருத்துவர் பிரபாத் சேரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்
இது இவ்வாறிருக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் வீட்டில் மரணமான டயகம சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும், சிறுவர் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் நேற்று முன்தினம் புதன் கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுமி ஹிஷாலினி, பாடசாலை மாணவி வித்தியா உள்ளிட்ட சிறுமிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.
அமைச்சர் உதய கம்மன்பில, பிவிதுரு ஹெல உருமயவின் செயலாளர் உபுல் விஜேசேகர, பிரதி தேசிய அமைப்பாளர் யசபால கோரளகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சில தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களும் அங்கு காணப்பட்டதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.