(30-07-2021)
மனித உரிமை ஆணைக்குழு தங்களை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுவதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி இம்மானுவேல் உதயச்சந்திரா குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம். இடம் பெற்றது.
-குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி இம்மானுவேல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் உறவுகள் ஆகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டுமெனவும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் நாங்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
12 வருடங்களாக போராடி தனிப்பட்ட விதமாக நான்கு வருடங்கள் போராடி இது வரை அரசாங்கத்தினால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் ஊடக எந்த பொறிமுறையும் கிடைக்காது. எனவே நாங்கள் சர்வதேச சமூகத்திடம் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகிறோம்.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு பலனும்; இன்றி காணப்படுகிறது.
எந்த அமைப்புக்களாக இருந்தாலும் சரி அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்பவராக இருந்தாலும் அனைவரும் எங்களுக்கு பின்னால் நில்லுங்கள் எங்கள் உணர்வுகளை மதியுங்கள்.
மனித உரிமை ஆணைக்குழு இன்று எங்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுகின்றனர்.
அரசாங்கத்துடன் இணைந்து எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதால் தான் நாங்கள் தனித்து போராடுகின்றோம்.
அரசாங்கத்தினால் எந்த நன்மையும் இல்லாமையால் தான் நாங்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றோம்.
எனவே எந்த அமைப்பில் இருந்தாலும் சரி எங்களோடு பின் நின்று எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு தோள் கொடுத்து எங்கள் உணர்வுக்கு மரியாதை கொடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.