மலையக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட வேண்டும் என்று சட்டமாக்கியும் போதிலும், தோட்டக் கம்பனிகள் இன்னும் கூட ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில செல்வந்தர்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களிலேயே பிறந்து தற்போது தொழிற்சங்கத் தலைவர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் உள்ள சிலரும் உடந்தையாக இருப்பதாக அறியப்படுகின்றது.
ஆயிரம் ரூபா நாட்சம்பளம் வழங்குவதில் நிபந்தனை எதுவும் விதிக்கப்படக் கூடாதென்று தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், தோட்ட நிர்வாகங்கள் பலவிதமான நிபந்தனைகளை விதித்து வருவதாக மலையக தோட்டத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த தடைகளை உடைப்பதற்கு மலையகத் தொழிற் சங்கங்கள் எதுவும் முயற்சியெடுக்கவில்லை என்றும் அறியப்படுகின்றது.
குறிப்பிட்ட நாட்களுக்கு மாத்திரமே வேலை வழங்கப்படும் என்றும், அதேசமயம் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நிறைக்குக் குறையாமல் தேயிலைக் கொழுந்து பறிக்க வேண்டும் என்றும் தோட்ட நிர்வாகங்களால் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருவதாக பரவலாக தகவல்கள் வருகின்றன.
இவ்வாறு நிபந்தனைகள் விதிப்பது உடன்பாட்டை மீறுகின்ற செயலாகும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக ஆயிரம் ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களால் முழுமையாக பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த குறைந்த தொகைச் சம்பளத்தையே பெற்று வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அண்மையில் தெரிவித்திருந்தார். இவ்வாறு தோட்ட கம்பனி நிர்வாகங்கள் நிபந்தனை விதித்து வருவது குறித்து விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் இவ்விடயமானது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தொழில்திணைக்கள ஆணையாளர் கூறியிருக்கின்றார்.
வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது ஒருபுறமிருக்க மிகக் குறைந்த சம்பளமே கிடைப்பதனால் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையானது அவலம் மிக்கதாகவே தொடர்கின்றது. இந்நிலையில் தங்களுக்குரிய நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாயாவது வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் பல வருடங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இவர்கள் ஆயிரம் ரூபா நாட்சம்பளம் கோரி போராட்டம் நடத்தி வந்த வேளையில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது அவசரம் அவசரமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் அந்த கூட்டு ஒப்பந்தமானது தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாட்சம்பள கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைந்திருக்கவில்லை. இதன் காரணமாக அவர்களது தொடர்ச்சியான போராட்டம் மழுங்கடிக்கப்பட்டுப் போனது.
இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாட்சம்பள விவகாரத்தில் நம்பிக்கை அறிகுறி தோன்றியது. அத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது மாத்திரமன்றி, அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான காத்திரமான முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தார்.
ஆயிரம் ரூபா தினச்சம்பளத்தை எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது. அத்துடன் ஆயிரம் ரூபாவை வங்குவது என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.
இத்தீர்மானத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் நிம்மதி அடைந்தனர். இன்றைய வாழ்க்கைச் செலவைப் பொறுத்தவரை ஆயிரம் ரூபா நாட்சம்பளம் என்பது போதுமானதாக இல்லாத போதிலும், தங்களது வறுமை நிலைமையை ஓரளவாவது குறைக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டனர்.
இவ்வாறிருக்கையில், தோட்ட நிர்வாகங்கள் பலவிதமான நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களின் அச்சம்பளத்தை குறைக்கும் வகையிலேயே செயற்பட்டு வருவதாக தெரிய வருகின்றது. இந்நடவடிக்கையானது பொதுஉடன்பாட்டை மீறுகின்ற செயல் என்பது ஒருபுறம் இருக்கையில், தொழிலாளர்களை ஏமாற்றும் செயலாக உள்ளதாக மலையக தோட்ட தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குகின்ற தீர்மானமானது உண்மையிலேயே தொழிலாளர்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்தவில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த விடயத்தில் மலையக தோட்டத்தொழிற்சங்கங்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபா வழங்குவதென்ற அரசாங்கத்தின் முடிவுக்கு மாறான விதத்தில் செயற்படுவதற்கு தோட்டக் கம்பனிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இன்றைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை தோட்டக் கம்பனிகள் முதலில் கவனத்தில் கொள்வது அவசியம். அதேசமயம் அம்மக்களின் வறுமை நிலைமையையும் வாழ்க்கை அவலத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாட்டின் தேசிய வருமானத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்வி வருகின்ற மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை தொடர்ந்தும் அவல வாழ்வுக்குள் வைத்திருப்பது நீதியும் நியாயமும் அல்ல.
தற்போது நிலவுகின்ற கொரோனா பெருந்தொற்று காலத்தில் போராட்டங்களை மேற்கொள்வது முறையல்ல. அவ்வாறு போராட்டம் நடத்துவது சட்டவிரோதமான காரியமும் ஆகும். எனவே தோட்டக் கம்பனிகளுக்கு அனைத்து தரப்பினரும் அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான முடிவை காண வேண்டும் என்று சில மலையகத் தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளன.