30-07-2021 கதிரோட்டம்
எமது ஊடகப் பயணத்தின் இருபத்தைந்தாவது ஆண்டை நாம் கடந்துள்ளோம். இத்தனை ஆண்டுகள் எம் இதழியல் பங்களிப்பு இதயங்களோடு இணைந்தாகவே நகர்ந்துள்ளது. இந்த நீண்ட காலப் பகுதியில் எமது தாயகம், தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள், எமது தாய்த் தமிழகமான தென்னிந்தியா ஆகிய தளங்களிலும் நாம் பயணித்துள்ளோம்.
இன்றைய முகப்புப் பக்கத்தில் நாம் காட்சிப்படுத்தியிருக்கின்ற எமது ‘உதயன்’ முதலாவது இதழின் முகப்புப் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக 03-05-1996 அன்று வெள்ளிக்கிழமை நாம் பதித்த எழுத்துக்கள் இன்னும் அழியாமல் உள்ளன.
”வடபகுதி மக்கள் மிருகங்கள் போல நடாத்தப்படுகின்றார்கள்;” அமைச்சர் தொடண்டமான் பாராளுமன்றத்தில் கண்டனம். என்ற செய்திக்கான தலையங்கம் சொல்லுகின்ற செய்தியே இன்னும் இன்றைய நாளுக்குரிய செய்தியாகவே காணப்படுகின்றது. தொண்டமான் என்னும் மலையக மக்களின் தலைவர் மறைந்தாலும் அவர் காலத்தில் அவர் நேரடியாகக் கண்டு பாராளுமன்றத்தில் முழங்கிய அந்த தமிழர் விரோதச் செயற்பாடுகள் இன்று மிகவும் மோசமடைந்துள்ளதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதற்கு மேலாக பேரினவாதத்தின் இறுக்கமான பிடிகள் முன்னைய காலங்களிலும் பார்க்க கோரமானவையாகத் தென்படுவது வேதனையை தந்தவண்ணம் உள்ளன.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் எம் மக்கள் அனுபவித்த துன்பியல் படலங்களின் பரிதாபக் குரல்கள் அந்த தமிழ் மண்ணில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பது துரதிஸ்டமானதே.
இவ்வாறான அவலக் குரல்கள் அந்த பிரதேசங்களில் தொடர்ந்து செல்வதற்குக் காரணம் எவை என்று ஆராய்ந்தாலும், அங்கு ஆட்சியில் உள்ளவர்களின் இனவாத மற்றும் தமிழர் விரோதப் போக்கு, இராணுவத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள சிவில் அதிகாரங்கள் போன்ற விடயங்கள் ‘தலையை’ நீட்டுகின்றன.
தற்போது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழர் பிரதேசங்களின் தொடரும் பேரினவாத பின்னணி கொண்ட வன்முறைகளுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களின் அதிகார வெறி மற்றும் அங்கு தோன்றியுள்ள பொருளாதாரப் பிரச்சனைகளை மறைப்பதற்காய் கிளறிவிடப்படும் இனத்திற்கு எதிரான கோசங்கள் ஆகியன இவைக்கு காரணமாக உள்ளன.
எமது ஊடகப் பயணம் தொடரும் இந்த நீண்ட கால ஓட்டத்தில் தாயகத்திலிருந்து கிடைக்கும் பல செய்திகள் எமது பாரம்பரிய பிரதேசங்களின் வளங்கள் சூறையாடப்படுவதும், மீன்பிடி தொடக்கம், விவசாயம் முதலான தொழிற்துறைகளில் தென்னிலங்கை மக்களை வடக்கு நோக்கி ‘இழுத்து’ வந்து அவர்கள் கைகளில் ஆயுதங்களையம் அதிகாரங்களையும் மேலதிகமாகக் கொடுத்து எமது மக்களின் பிரதேச நிலப்பரப்புக்கள் சார்ந்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக பறித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெறுவதைக் காண்கின்றோம்.
அன்றை அழுகுரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. பொருளாதார மற்றும் வேலை வழங்கும் நிகழ்ச்சிட்டங்களில் திடீரென ஒதுக்கப்படுகின்ற சமூகமாகவே உள்ள தமிழர்களின் அவலத்தை மட்டுமே அன்றாடம் கண்டு பின்னர் நொடிந்து போகின்றவர்களாக நாம் இருப்பது கூட எமக்கு ஓரளவு தானே தெரிந்திருக்கின்றது என்பதை எண்ணும் போது, நாம் இனம் என்ற தளத்தில் உறுதியாக இல்லை என்பதையே காட்டுகின்றது.