டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங் ஜியாவோவை 21-13 மற்றும் 21-15 என்ற கணக்கில் வென்ற சிந்து, இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக உருவெடுத்துள்ளார். ரியோ 2016-ல் சிந்து வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் மற்றும் ஒரே மற்றொரு இந்தியர் மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆவார்.
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பிரதமர் திரு நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பி வி சிந்துவின் சாதனைக்காக அவரை பாராட்டி உள்ளனர்.
“இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணியாக பி வி சிந்து உருவெடுத்துள்ளார். தொடர் செயல்திறன், அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பின் புதிய அளவுகோலை சிந்து நிர்ணயித்துள்ளார்,” என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்தி உள்ளார்.
சிந்து இந்தியாவின் பெருமை என்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் அவரும் ஒருவர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “பி வி சிந்துவின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி. டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீராங்கனைகளில் ஒருவர்,” என்று கூறியுள்ளார்.
சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர், “சிறப்பான வெற்றி பி வி சிந்து!!! டோக்கியோ 2020-ல் கட்டுக்கோப்புடன் விளையாடி வரலாற்றை உருவாக்கி இருக்கிறீர்கள் ! இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளீர்கள் ! உங்களால் இந்தியா பெருமை கொள்கிறது & உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நீங்கள் சாதித்து விட்டீர்கள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.