பார்த்தீபன்
அண்மைய நாட்களில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஒரு அரச நியமனம் தொடர்பில் பெரும் அதிருப்தி எழுந்து வருகின்றது. இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்டு வந்த, சமன் பந்துலசேன, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் இலங்கையில் எட்டு மாகாணங்களிலும் சிங்கள பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்ப் பிரதம செயலாளர் ஒருவரைக் கொண்டிருந்த வடக்கு மாகாணமும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. அதாவது சிங்களவர் ஒருவரை பதவியில் இருத்தியதன் வாயிலாக ஒன்பது மாகாணங்களின் பிரதம செயலாளர் பதவிகளிலும் சிங்களவர்கள் நிரப்பப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளராக ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டிருப்பதனால்தான் வடக்கு கிழக்கு மக்களுக்கு பெரும் பிரச்சினை என்றோ, அல்லது தமிழர் ஒருவரை நியமித்துவிட்டால் தமிழர்களின் அத்தனை பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்றோ இப் பத்தி வலியுறுத்தவில்லை. இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சி விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு அரசியலுக்கு மத்தியில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் என்பது ஒருபோதும் தீர்வல்ல என்பதையும் அச் சட்டம் வாயிலாகவும் பௌத்த சிங்களப் பேரினவாதம் நன்கு விரிவுபடுத்தப்படுகின்றது என்பதையுமே இக் கட்டுரை ஆழமாக வலியுறுத்த எண்ணுகின்றது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் மிக ஆட்சி அதிகாரத்தை இழுத்துப் பிடிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் சிங்களவர்களாக நியமிக்கப்படுகின்றனர். வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களில் பெரும்பாலும் நான்கிலிருந்து ஐந்துவரையான மாவட்டங்களின் அரச அதிபர்களாக சிங்களவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த நிலைமை அரசியலுக்கு ஏற்ப அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதையும் அவதானிக்கலாம். தற்போது வவுனியா மாவட்டத்தில் சிங்களவர் ஒருவர் அரச அதிபராக பதவி வகித்த நிலையில், திருகோணமலை மாவட்த்தில் சமன் தர்சனவும், அம்பாறை மாவட்டத்தில் டி.எம்.எல்.பண்டாரநாயக்காவும் பதவி வகிக்கின்றனர்.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு கிழக்கு தாயகத்தில் ஏன் சிங்கள அரச அதிகாரிகளை நியமிக்க வேண்டும்? இதேபோல தமிழ் அரச அதிகாரிகள், தென்னிலங்கை நிர்வாகத்தில் ஏன் நியமனம் செய்யப்படுவதில்லை? ஆனால், தமிழ் மக்கள் தமது பிரதேசத்தை தாம் ஆள விரும்புகின்றனரோவொழிய, சிங்களப் பிரதேசத்தை ஆளவிரும்பவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். இலங்கைத் தீவு முழுவதும் தமிழ் மக்கள் வசிக்கின்ற போதும் சிங்களப் பிரதேசங்களில் தமிழ் அதிகாரிகளை நியமிப்பதை காண்பது அரிது. அது தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் இருக்கவில்லை.
ஆனால், தமிழ் பிரதேசங்களில் ஏன் சிங்கள அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்? தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்து, சிங்களக் குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொள்ளவே இவ்வாறு சிங்கள அதிகாரிகள் தமிழர் தாயகத்தில் திணிக்கப்படுகின்றனர். கடந்த காலத்தில் கிழக்கில் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு இப்போது வடக்கையும் ஆக்கிரமித்து வருவதையே சமன் பந்துலசேனவின் நியமனம் உணர்த்தி நிற்கின்றது. கிழக்கு மாகாண பிரதம செயலாளராக துசித பி வணிகசிங்கவும் ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் பதவி வகிக்கின்றனர்.
தமிழ்ப் பண்பாடும் தமிழ் இராசதானிகளும் நிறைந்த கிழக்கு மாகாணம் இன்றைக்கு சிங்கள ஆட்சியாளர்களின் கையில் சிக்கித் தவிக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என் அனைத்து மாவட்டங்களிலும் கிராமங்களாகவும் பிரதேசங்களாவும் ஆக்கிரமிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கு பெருமளவு நிலங்களை தமிழ் மக்கள் இழந்துவிட்டனர். இதற்கு இன்று நேற்றல்ல, கடந்த பல தசாப்தங்களாக சிங்கள அரச அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டமையே காரணமாகும்.
சிங்கள அரசின் ஆட்சியதிகார ஆக்கிரமிப்பு கிழக்கு மாகாணத்தின் பெரும் இடங்களை விழுங்கியதுடன் வடக்கு மாகாணத்தையும் சுற்றி வளைத்துள்ளது. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என வட மாகாணமும் சிங்கள ஆக்கிரமிப்பால் கழுத்து திருகப்படுகின்றது. முல்லைத்தீவின் எல்லைப் பகுதிகளான மணலாறு போன்ற கிராமங்களில் பாரிய சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியாவை பொறுத்தவரை தெற்குப் பகுதி மாத்திரமின்றி, கிழக்கு வடக்குப் பகுதிகளிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன.
மகாவலி எல் வலயத்தின் வாயிலாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை குலைக்க சிங்கள தேசம் முற்படுகின்றது. வடக்கு கிழக்கு எல்லைக் கிராமங்களை சிங்களக் குடியேற்றக் கிராமங்களாக ஆக்கி ஆக்கிரமிப்பதன் வாயிலாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் வரைபடத்தை குலைப்பதே சிங்கள தேசத்தின் திட்டமாகும். இந்த நிலையில் சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதமர செயலாளராக நியமிக்கப்பட்டதன் வாயிலாக மேற்குறித்த ஆக்கிரமிப்புக்களுக்கு சட்ட ரீதியன மற்றும் நிர்வாக ரீதியான சான்றுகளை உருவாக்கும் சதிநோக்கமே காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரச அதிகாரிகள் மத்தியில் சமன் பந்துலசேனவின் நியமனம் பெரும் எதிர்ப்பலையை தோற்றுவித்துள்ள நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் பெரும் மௌனம் காத்து வருகின்றனர். தமிழ் அரசியல் தலைவர்களின் ஒப்புதலுடன்தான் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகமே வலுகின்றது. அல்லது தங்களை தாங்களே ஆளுகின்ற ஆட்சியதிகாரத்தை கோரும் எண்ணத்தை தமிழ் தலைமைகள் துறந்துவிட்டனரா? மத்தியில் சிங்கள ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் வகையில் தமது அரசியலை மேற்கொள்ளுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணங்களையும் சிங்கள நிர்வாகிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்க துணிந்துவிட்டனரா?
பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் மிகவும் பலவீனமான ஒன்றாகும். இந்தியாவில் மாநில ஆட்சிகளை அதிக காலம் முடக்கி வைப்பதற்கு அரசியல் அமைப்பில் இடமில்லை. ஆனால் இலங்கையில் மாகாண சபை ஆட்சி முடிவுற்று மூன்று வருடங்கள் ஆகின்ற போதும் இன்னமும் தேர்தல் நடத்தாமல் இலங்கை அரசு இழுத்தடித்து வருகின்றது. 2009இல் போர் முடிந்த சமயத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருந்தவேளையில் ஐக்கியநாடுகள் சபையின் அழுத்தத்தில் 2013இல் மாகாண சபைத் தேர்தலை ஸ்ரீலங்கா அரசு நடத்தியது.
இவ்வாறான நிலையில் அதிகாரமற்ற மாகாண சபைகளின் சிறியளவிலான அதிகாரங்களும் பிரதம செயலாளர் வழியாகவும் ஆளுநர் வழியாகவும் ஸ்ரீலங்கா அரசினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தம் வழியாக ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு துளியளவு அதிகாரத்தையும் துளியளவு நன்மையையும் தராது என்பதற்கு தற்போதைய மாகாண சபைகளின் நிலமை மாத்திரமின்றி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனமும் உணர்த்தி நிற்கின்றது.
இன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் சூடு சுறணையற்றவர்களாக, உறக்க நிலையில் இருப்பவர்களாக இருக்கலாம். தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற கொள்கையை மறந்துபோயிருக்கலாம். ஆனால், தமிழர்கள் அரச நிர்வாகத்தில் புறக்கணிப்பட்டமை, தமிழ் மக்களின் நிர்வாகத்தில் சிங்களத் தலையீடுகள் நடைபெற்றமை போன்ற காரணங்களினாலும் தான் தமிழர்கள் தங்களை தாங்களே ஆள்வதற்காக இலங்கைத் தீவில் தனிநாடு கோரிய போராட்டத்தை துவங்கினர் என்பதையும் அதற்காகவும்தான் ஆயுதம் ஏந்தப்பட்டது என்ற வரலாற்றையும் சிங்கள அரசுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் நினைவுபடுத்துகிறோம்.