(03-08-2021)
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்கள் தேவையுடைய மக்களுக்கு உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என உப்புக்குளம் கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அண்மையில் சில அரச,அரச சார்பற்ற நிறுவனங்களினால் உப்புக்குளம் பகுதியில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் தனிநபர் ஒருவருடைய சிபாரிசின் அடிப்படையில் அவரால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ் பெயர் பட்டியலில் குறித்த தனி நபர் உண்மையில் தேவையுடைய பலரை புறக்கணித்து தன்னோடு சேர்ந்தவர்கள் மற்றும் தன்னுடைய உறவினர்களுடைய பெயர்களை இணைத்து நிவாரண பொருட்களை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் வசதிபடைத்த பலர் நிவாரண பொருட்களை பெற்ற சந்தர்பத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் மாற்றாற்றல் உடையவர்கள் பலருக்கு நிவாரண பொருட்கள் கிடைக்காத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே பிரதேச செயலாளர் குறித்த விடயத்தில் தலையிட்டு உரிய முறையில் தேவையுடைய மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் அதே நேரம் முறையற்ற விதமாக வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
அதே நேரம் குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் பாதிக்கப்பட்ட மக்கள் ஒப்பமிட்டு மன்னார் நகர் பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடதக்கது.