(மன்னார் நிருபர்)
(04-08-2021)
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு திரை, மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள்,மற்றும் ஒட்சிசன் செரிவூட்டிகள் (AJWS) அமெரிக்க யூத உலக சேவை நிறுவனத்தின் நிதி அணுசரனையில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம்(MSEDO) மற்றும் (CRF) கிளிநொச்சி அமைப்பினால் இன்று( 4) வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக 20 இலட்சத்து இருபத்து ஐயாயிரம் ரூபாய் (2025000.00) பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் ஒட்சிசன் செரிவூட்டிகள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் மற்றும் அரசாங்க அதிபரிடம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் வைத்தியசாலை தொற்றுநோயியல் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் நிமால், வைத்திய சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதே நேரம் குறித்த நிறுவனத்தினால் கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு என 21 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய இயந்திரங்கள் வழங்கப்பட்டதுடன் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்திற்கு என 19 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது