கடந்த வாரம் வட்டுவாகலில் படைத்தரப்பு காணிகளை சுவீகரிக்க முற்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் களத்தில் நின்று எதிர்ப்பை காட்டினார்கள். இலங்கைத் தீவின் முதலாவது திணைக்களம் என்று கூறப்படுவது நிலஅளவைத் திணைக்களம். ஒப்பீட்டளவில் அதிக தொகை தமிழர்கள் அதில் வேலை செய்கிறார்கள். நில அளவைத் திணைக்களம்தான் கடந்த 12 ஆண்டுகளாக அதிகம் சர்ச்சைக்குள்ளாகும் ஒரு நினைக்களமாக காணப்படுகிறது. வட்டுவாகலில் மேற்படி திணைக்களம் காணிகளை முற்பட்டபோது தமிழ் அரசியல்வாதிகள் அங்கே கூடினார்கள். தமது எதிர்ப்பை காட்டினார்கள். அதனால் நிலத்தை அளக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இது வட்டுவாகலில் மட்டும்தான் கடந்த கிழமை மட்டும்தான் நடந்த ஒரு சம்பவம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் படை முகாம்களுக்கு என்று காணிகள் சுவீகரிக்கப்படும் பொழுது அவற்றை தடுப்பதற்காக தமிழ் அரசியல்வாதிகள் அந்த இடங்களுக்கு உடனடியாக வந்து விடுகிறார்கள். நிலஅளவை திணைக்களத்தின் நடவடிக்கைகளை அவர்கள் உடனடிகுத் தடுக்கிறார்கள். ஆனால் அது நிரந்தரமான ஒரு ஏற்பாடா என்பதே இங்குள்ள முக்கியமான கேள்வியாகும்.
ஏனெனில், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் யாரென்று தொகுத்துப் பார்த்தால் முதலாவதாக குறிப்பிட்ட சில தமிழ் அரசியல்வாதிகள் இரண்டாவதாக குறிப்பிட்ட காணியின் உரிமையாளர். இந்த இரண்டு தரப்பும்தான் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் யார் என்று பார்த்தால் அங்கேயும் திரும்பத் திரும்ப ஒரே முகங்களைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பலாம். இந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் அங்கே தனியாக நிற்கிறார்கள் அல்லது அவர்களுடைய மிகச் சில உதவியாளர்களோடு நிற்கிறார்கள். இவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு கட்சியின் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள். இவர்களுக்கு தொண்டர்கள் கிடையாதா? இவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் கிடையாதா? தேர்தல் காலத்தில் ஒவ்வொரு அரசியல்வாதியும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலை செய்கிறார்கள்.தேர்தல் காலங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் புடைசூழ காட்சி தருகிறார்கள். வாகனத் தொடரணிகளாகப்பயணம் செய்கிறார்கள். ஆனால் இவ்வாறான போராட்டங்களுக்கு மட்டும் ஏன் தனித்தனியாக வருகிறார்கள் ?அவர்களுடைய ஆதரவாளர்களும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்கே போனார்கள்?
அண்மையில் டான் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் நான் இதைச் சுட்டிக் காட்டினேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிகரனும் சிவாஜிலிங்கமும் வட்டுவாகலில் நடந்த போராட்டத்தில் தீவிரமாக செயற்பட்டவர்கள். எனவே அவர்களை நோக்கியே நான் குற்றச்சாட்டை முன்வைத்தேன். அந்த நிகழ்ச்சியில் ரவிகரன் சொன்னார் மக்கள் மேற்படி போராட்டத்தில் பங்குபற்றவில்லை என்று. அதற்கு அவரே காரணத்தையும் சொன்னார். புலனாய்வுத்துறையினர் சாதாரண ஜனங்களை அச்சுறுத்துவதாகவும் அச்சம் காரணமாகவே மக்கள் அவ்வாறான போராட்டங்களில் ஈடுபடத் தயங்குவதாகவும் அவர் கூறினார். போராட்டம் மக்கள் பயப்படாததற்கு காரணம் அரச புலனாய்வுத்துறைதான் என்று அவர் கூறினார்.
ஆனால் புலனாய்வுத் துறையும் உட்பட அரசாங்கத்தின் உபகரணங்கள் ஆகிய எல்லா கட்டமைப்புக்களும் போராட்டங்களை தடுக்கவோ நசுக்கவோதான் முயற்சிக்கும். அதற்கு பெயர் தானே ஒடுக்குமுறை ? இங்கே பிரச்சினை என்னவென்றால் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் சக்திகளால் அதை மக்கள் மயப்படுத்த ஏன் முடியவில்லை என்பதுதான். அந்த போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது என்றால் நிறுவனமயப்படுத்த வேண்டும். நிறுவனமயப்படுத்துவது என்றால் எல்லா கட்சிகளையும் ஒன்றாக திரட்டிய ஒரு தமிழ் தேசிய இயக்கம் அல்லது ஏதோ ஒரு அமைப்பு வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஓர் அமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும் தனித்தனியாக போய் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். தனித்தனியாக ஊடகங்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள்.அவர்களைச் சூழ்ந்து நிற்கும் ஊடகவியலாளர்கள் திரும்ப திரும்ப இந்த அரசியல்வாதிகளை சுற்றிச்சுற்றி படம் பிடிக்கிறார்கள்.
இது கடந்த 12 ஆண்டுகளாக இவ்வாறான போராட்டங்கள் மக்கள் மயப்படாதவைகளாகவும் அரசியல்வாதிகள் மயப்பட்டிருப்பதையும்தான் அது காட்டுகிறது. இது விடயத்தில் அரசியல்வாதிகள் என்னசெய்யவேண்டும் ? இரண்டே இரண்டு தெரிவுகள் தான் உண்டு. ஒன்று ஆகக் குறைந்த பட்சம் கட்சிகளாக தங்களுக்கிடையே ஒரு பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்துவது. அல்லது அதைவிட உன்னதமான விடயம் ஒரு தமிழ் தேசிய இயக்கத்தை கட்டியெழுப்புவது. ஆனால் இந்த இரண்டு விடயங்களும் தமிழ்தேசிய பரப்பில் கடந்த 12 ஆண்டுகளாக செயல்வடிவம் பெறாத கற்பனைகளாகவே காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவை, அதன்பின் முல்லைத்தீவு மாவட்டத்தை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்ற தமிழ் மரபுரிமை பேரவை மற்றும் மன்னாரை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கம் போன்ற அமைப்புகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்புக்கள் போன்றன அரங்கில் காணப்படுகின்றன.ஆனால் இந்த அமைப்புகளுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு கிடையாது. இந்த அமைப்புகளிடமும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கத்தக்க கட்டமைப்புகள் இல்லை.
இது ஒரு பாரதூரமான வெற்றிடம்.கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் கட்சி அரசியல் பெருகிய அளவுக்கு செயற்பாட்டு அரசியல் பெருகவில்லை என்பதனை நான் திரும்பத் திரும்ப பேசியும் எழுதியும் வருகிறேன். தமிழ் மக்கள் மத்தியில் இப்போது இருப்பவை எல்லாம் தேர்தல் மையக் கட்சிகள்தான். தேர்தலை நோக்கமாகக் கொண்டு வாக்கு வங்கியை பெரூக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் கட்சிகள்தான். காணிகளுக்கான போராட்டங்களின் போதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களின் போதும் அரசியல் கைதிகளுக்கான போராட்டங்களின்போதும் பெரும் தொற்றுநோய் காலத்தில் குறிப்பாக சமூகம் முடக்கத்தின்போதும் இக்கட்சிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும். அங்கே கட்சி அரசியல்தான் முன்னெடுக்கப்படுகிறது. தேச நிர்மாணம் அல்ல. தமது கட்சிகளை நிர்மாணிப்பதில்தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் கவனமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமது சொந்த வாக்குவங்கியை எப்படி பெருப்பிக்கலாம் என்றுதான் அவர்கள் சிந்திக்கிறார்கள்.
மேற்படி வட்டுவாகல் போராட்டத்தை குறித்து யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு முன்னாள் மாகாண சபை உறுப்பினரிடம் கதைத்தேன். அவர் சொன்னார் சில முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டங்களுக்கு போகும்பொழுது ஒன்றில் தனியாக அல்லது தங்களுக்கு பிரச்சனையில்லாத சில முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை அழைத்து செல்கிறார்கள். ஒரு பெரும் திரளாக போகவேண்டும்; எல்லாரையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும்; அதை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை அவர்களிடம் கிடையாது என்று. அதாவது எல்லாருமே சிங்கிளாக போய் தங்களுடைய வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். அதை மக்கள் மயப்படுத்த முயற்சிப்பதாக தெரியவில்லை.
இதில் குறிப்பாக நினைவுகூர்தல் பொறுத்து சிவாஜிலிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு தனிமனிதனாக அதைத்தான் செய்து வருகிறார். ஆனால் அதற்காக அவரை கடுமையாக விமர்சிக்கவும் முடியாது. ஏனென்றால் முதலாவதாக அவர் ஒரு நோயாளி. இரண்டாவதாக தன்னால் மக்கள் மயப்படுத்தும் செய்முறைகளை முன்னெடுக்க முடியாது என்று அவருக்கு தெரிகிறது. எனவே தன்னுடைய உடல் நிலைக்கும் தன்னுடைய சக்திக்கும் ஏற்றது எதுவோ அதைச் செய்வது என்று முடிவெடுத்து அவர் ஒரு தனி மனித நினைவு கூரு ம் எந்திரமாக கடந்த 12 ஆண்டுகளாக துணிச்சலாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இப்பொழுது சிவாஜிலிங்கத்தின் உதாரணத்தையே மற்றவர்களும் பின்பற்ற முனைவதாக தெரிகிறது.
தமிழ் கட்சிகளிடம் போராட்டங்களில் எப்படி மக்களை அணிதிரட்டுவது என்ற பொறிமுறை குறித்து சரியான தெளிவு கிடையாது. இதுகுறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் கிடையாது. தனிமனித சாகசத்தை முன்னிறுத்தி தனித்தனியாக ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களுடைய வாக்கு வங்கியை பெருக்கிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். மாறாக தமிழ் மக்களை ஒரு திரளாக கூட்டிக் கட்டும் தேச நிர்வாணத்தை குறித்து யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை. அன்றைக்கு டான்டிவி நடத்திய நிகழ்ச்சியில் ரவிகரன் கூறியதுபோல அரச புலனாய்வுத்துறை அச்சுறுத்துகிறது என்று சொன்னால் அதற்கு ஒரு பிரதான காரணம் உண்டு.உதிரிகளாக இருக்கும் வரையில்தான் மக்களே அச்சுறுத்தலாம். ஒரு திரளாக ஒழுங்கமைக்கப்பட்ட மக்களை அவ்வாறு அச்சுறுத்த முடியாது. உதிரிகளாக வீடுகளில் மிகச் சிலர் விளக்கேற்றினால் அவர்களை குறிவைத்து அச்சுறுத்தலாம். ஆனால் எல்லாரும் எல்லாருடைய வீடுகளிலும் விளக்கை ஏற்றினால் எத்தனை பேரை கைது செய்வது? எத்தனை பேரை விசாரிப்பது? எனவே மக்களைத் திரளாக்குவது தான் மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தை போக்குவதற்கான ஒரே வழி.
அரசுகள் போராட்டங்களை இப்படித்தான் அணுகும். பொதுமக்களை எப்படி அச்சுறுத்தலாம் உதிரிகளாக்கலாம் என்றுதான் சிந்திக்கும். அரசு பொதுமக்களை எப்படி உதிரிகள் ஆகலாம் என்று சிந்திக்கும்போது போராடும் தரப்பு தமது மக்களை எப்படி திரளாகக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்.
அவர்கள் திரளாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கலந்துரையாட வேண்டும் ஆனால் அப்படிப்பட்ட கலந்துரையாடல்கள் எதுவும் தமிழ் பரப்பில் நடந்ததாக தெரியவில்லை இவ்வாறான துர்ப்பாக்கியமான ஒரு வெற்றிடத்தில் இப்பொழுது ஒரே ஒரு வழிதான் மிச்சம் இருக்கிறது. அது என்னவென்றால் தமிழ்த் தேசியக் கட்சிகளை எப்படி ஒரு பொது கட்டமைப்பாக திரட்டுவது என்பதே. ஒன்றை முதலில் மிகத்தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ்மக்கள் மத்தியில் இப்பொழுது காணப்படும் அனைத்து கட்சிகளும் தேர்தல்மையக் கட்சிகளே. மக்கள் இயக்கங்கள் கிடையாது. இக்கட்சிகளை தேர்தல் நோக்கு நிலையிலிருந்து ஒரு கூட்டாக மாற்றுவது வேறு. ஒரு போராட்ட நோக்கு நிலையிலிருந்து அதைச் செய்வது வேறு. இக்கட்டுரை தேர்தல்களைப் பற்றி கதைக்கவில்லை. மாறாக ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு பொது கட்டமைப்பை பற்றித்தான் அது பேசுகிறது.
வட்டுவாகலில் கடந்த வாரம் பெரும்பாலான தமிழ் தேசியக் கட்சிகளின் பிரமுகர்களை காணமுடிந்தது. ஒரு போராட்டத்தில் எல்லாருமே காணப்படுகிறார்கள். ஆனால் ஒரு பொது கட்டமைப்பாக அவர்கள் அங்கே இல்லை.அவர்களை எப்படி ஒரு பொது கட்டமைப்பாக மாற்றுவது? குறைந்தபட்சம் போராட்டங்களுக்காவது அவர்களை எப்படி ஒன்றாக திரட்டி கட்டுவது? அதுமட்டுமல்ல அரசாங்கம் கிழமைக்கொரு பிரச்சினையை உருவாக்கி தமிழ் அரசியல்வாதிகளின் கவனத்தைச் சிதறடிக்கிறது.தமது கவனக் குவிப்பு சிதறடிக்கப்படுவது தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தெரிகிறதா? இக்கேள்விக்கு விடை கண்டுபிடித்தால் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக நிகழும் ஆக்கிரமிப்புகளை ஓரளவுக்காவது தடுக்கலாம். ஆனால் தமிழ் கட்சிகள் அதுகுறித்து சிந்திக்கின்றனவா?
கடந்த சில மாதங்களாக மாவை சேனாதிராஜாவும் செல்வம் அடைக்கலநாதனும் அவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவை சேனாதிராஜாவே முதலில் அதைத் தொடங்கினார். எதிர்பார்த்த வேகத்தில் அவரால் ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியவில்லை. இடையில் டெலோ இயக்கம் தானும் அவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுத்தது. அதுவும் இப்பொழுது தேங்கி நிற்பதாக தெரிகிறது.
தமிழ்க் கட்சிகளை கடந்த சில தசாப்தங்களில் பின்வரும் காரணிகள் ஒன்றிணைத்திருக்கின்றன. முதலாவது ஆயுதப் போராட்டம். இரண்டாவது பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள். மூன்றாவது பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும் தேர்தல் அபிலாசைகளற்ற சில அனுசரணையாளர்களும். ஆயுதப் போராட்டத்தின் விளைவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலகட்டத்தில் தமிழ் அரசியலின் மையமாக அப்போராட்டமே இருந்தது.எனவே மிதவாதக் கட்சிகளின் மீது செல்வாக்கை பிரயோகித்து ஓர் ஐக்கியத்தை கட்டியெழுப்புவது இலகுவாக இருந்தது.
ஆனால் 2009க்குப்பின் அவ்வாறான நிலைமைகள் இல்லை. இப்பொழுது ஒன்றில் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகளும் அரசியல்வாதிகளும் கூட்டுச் சேர்வது குறித்துச் சிந்திக்கிறார்கள்.தோல்வி அவர்களை அவ்வாறு நிர்ப்பந்திக்கிறது. அல்லது ஒரு விவகாரத்தை மையமாகக்கொண்டு ஒரு கூட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. உதாரணமாக நினைவுகூர்தல் அல்லது ஜெனிவா.இதிலும் கூட தேர்தல் அபிலாசைகளற்ற மாணவர்களும் குடிமக்கள் சமூகங்களும் தலையிட்டால்தான் அப்படியொரு ஐக்கியத்தை ஏற்படுத்த முடிகிறது.
ஐக்கிய முயற்சிகளில் ஈடுபடும் அனுசரணையாளர்கள் முதலாவதாக அனுசரணை பணிக்குரிய தகமைகளை கொண்டிருக்க வேண்டும் முதலாவது தகமை அவர்கள் தேர்தல் அபிலாசைகளற்றவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக தெளிவான தீர்க்கதரிசனம் மிக்க அரசியல் வரைபடத்தை கொண்டிருக்க வேண்டும். மூன்றாவதாக அனுசரணை பணிக்கு தேவையான நுட்பங்களையும் நிபுணத்துவ அறிவையும் கொண்டிருக்கவேண்டும். நாலாவதாக பிரதிபலனை எதிர்பார்க்காத அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இருக்க வேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளில் அவ்வாறு சில ஐக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.தமிழ் மக்கள் பேரவையின் கீழ் குறிப்பிட்ட சில கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அதன்பின் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைத்து 13அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஓர் ஆவணத்தை வெளியிட்டார்கள்.அதன்பின் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரையொட்டி குடிமக்கள் சமூகங்கள் இணைந்து மூன்று கட்சிகளையும் இணைத்து ஒரு பொதுக் கடிதத்தை தயாரித்தன.
மேற்கண்ட அனுபவங்களைத் தொகுத்து அவற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் குறைந்தபட்ஷ ஐக்கியமொன்றைக் கட்டியெழுப்பினால் மட்டும்தான் குறைந்தபட்சம் கட்சிகளின் கூட்டு ஒன்றையாவது உருவாக்கலாம். தமிழ் மக்கள் திரளாக்கப்படவில்லையென்றால் ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தவே முடியாது.