கொழும்பிலிருந்து விசாகன்
இலங்கையில், கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானவர்களாக நாளாந்தம் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் கடந்த சில தினங்களாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது கொவிட் 19 தொற்றின் திரிபடைந்த டெல்டா திரிபு பரவுதலுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கொழும்பு வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்களின் கருதுகின்றனர். டெல்டா திரிபு பரவத் தொடங்குமாயின் இலங்கை மிக மோசமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று சுட்டிக் காட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள், இத்தொற்றின் பரவதலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் அதிக அக்கறையும் கவனமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கொவிட் 19 தொற்றினதும் அதன் திரிபடைந்த திரிபுகளதும் பரவதலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இன்றியமையாததாகும். ஏனெனில் இத்தொற்றுக்கள் விரைவாக தொற்றி பரவக் கூடியவையாக விளங்குவது அதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குகின்றது.
அதேநேரம் டெல்டா திரிபானது இற்றை வரையும் கொவிட் 19 தொற்றில் ஏற்பட்ட ஏனைய திரிபுகளை விடவும் அதிக வேகமாகப் பரவக் கூடியதாகவும் அதிக தாக்கம் கொண்டதாகவும் உள்ளது. அதன் விளைவாகவே இத்திரிபு திரிபடைந்த குறுகிய காலப் பகுதிக்குள் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி விட்டது. அதனால் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசியைத் தம் குடிமக்களில் அதிகளவானோருக்கு பெற்றுக் கொடுத்துள்ள அமெரிக்கா, பிரத்தானியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் கூட கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளன.
ஆனால் அந்நாடுகள் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசியை குடிமக்களில் பெரும்பாலானோருக்கு பெற்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றத் தேவையில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த டெல்டா திரிபு ஏற்படுத்தியுள்ள தாக்கம், பாதிப்புகள் குறித்து அச்சம் வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸதாபனம், மக்களை பொறுப்புணர்வுடனும் முன்னவதானத்துடனும் நடந்து கொள்ளுமாறு கோரியுள்ளது.
ஏனெனில் கொவிட் 19 தொற்று பரவுதலின் அச்சுறுத்தல் இன்னும் கட்டுப்பாட்டு நிலையை அடையவில்லை. அதனால் இத்தொற்றைத் தவிர்த்துக் கொள்வதிலும் அதன் பரவுதலுக்கு துணை போகாதிருப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும். தற்போதைய சூழலில் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசியைத் தம் குடிமக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை இலங்கை துரிதப்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கையை மருத்துவ நிபுணர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
ஆனால் மக்களின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்நாட்டிலும் டெல்டா திரிபு வேகமாகப் பரவக் கூடிய அபாயம் நிலவிக் கொண்டிருக்கும் சூழலிலும் மக்களின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார வழிகாட்டல்களில் அக்கறை காட்டாதவர்களைப் பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தற்போதைய சூழலில் இது மிக ஆபத்தான நிலைமையைத் தோற்றுவிக்க வழிவகுக்கும் என்று சமூக மருத்துவ நிபுணரான பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்திருக்கின்றார்.
இத்தொற்றின் பரவுதலைத் தவிர்ப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் தற்போதைய அசிரத்தை நிலைமை நீடிக்குமாயின் இம்மாத நடுப்பகுதியாகும் போது இந்நாட்டில் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக நாளாந்தம் அடையாளம் காணப்படுபவர்களதும் உயிரிழப்பவர்களதும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் உயிரிழப்புக்களும் சிலவேளை 80 -, 90 வரை அதிகரிக்கலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதனால் இத்தொற்று தோற்றம் பெறுவதற்கு முன்னரான காலத்தைப் போன்று தற்போதைய சூழலில் எவரும் செயற்படலாகாது. அது கொவிட் 19 தொற்றும் அதன் திரிபடைந்த திரிபுகளும் பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். அதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.
ஆகவே கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டல்களில் ஒவ்வொருவரும் அதிக பட்ச கவனம் செலுத்த வேண்டும். அதனைத் தமது பொறுப்பாகவும் கடமையாகவும் கருதி செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தில் அவசர நடத்தை மாற்றமொன்றை மக்கள் கடைப்பிடிப்பது கட்டாயமானதாக உள்ளது. இவ்வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதுவே இன்றைய அவசியத் தேவையாகும். மேலும் இலங்கையிலும் ஏனைய சில நாடுகளிலும் கொரோனா கட்டுக்கடங்காமல் இருப்பதனால் அந்தந்த நாட்டுஅரசாங்கங்களும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது