முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் மிகவும் மர்மமான முறையில் இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட மலையச் சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது அரச தரப்பு எம்பி தயானா கமகே தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
இந்த மரணம் சம்பந்தமான விசாரணைகளில் குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு உச்சமாக தண்டனை வழங்க வேண்டும்.
ரிஷாத் பதியுதீனுக்கும் பிள்ளைகள் உள்ளது. அவர்களுக்கு பெற்றோர்கள் என்ற உணர்வு இல்லையா? அவர்களின் வீட்டில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுகின்றது என்பது தெரிந்துகொண்டும் எப்படி அவரால் இருக்க முடிந்தது என சபையில் கடுமையாக சாடிய ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, ஹிசாலினியின் மரணத்திற்கு அவரது பெற்றோர், ரிஷாத் பதியுதீன் மற்றும் குற்றவாளிகள் சகலரும் பொறுப்புக்கூறியாக வேண்டும் எனவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், அப்பாவி சிறுமி ஒருவரின் மரணம் இன்று நாட்டில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது, அந்த சிறுமி எவ்வாறு இறந்தார் என்பதை எமக்கு தெரியவில்லை. ஆனால் சர்வதேச ரீதியிலும் இது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் காரணியாகும். சிறுவர் வன்கொடுமைகள் நிறுத்தப்படும் ஆண்டாக இந்த ஆண்டு உள்ள நிலையில் இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் பணிக்கு அமர்த்துதல் ஒரு பேரலையாக தாக்கிக்கொண்டுள்ளது. இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார்.