(மன்னார் நிருபர்)
(06-08-2021)
மன்னார் மாவட்டத்தில் 2 ஆவது கட்டமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (06) காலை தொடக்கம் ‘பைஸர்’ (Pfizer)கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்படு குறித்த கிராமங்களை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடந்த மாதம் ‘பைஸர்’ கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.
-இந்த நிலையில் விடுபட்டவர்களுக்கு குறித்த தடுப்பூசி செலுத்தும் பணி 2 ஆவது கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை (6) முன்னெடுக்கப்பட்டது.
-மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மற்றும் தாழ்வுபாடு ஆலய வளாகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்றது.
-அதே போன்று நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) காலை 2 ஆவது கட்டமாக முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில்,சுகாதார வைத்திய அதிகாரிகள்,சுகாதார துறையினர் ஆகியோர் இணைந்து இராணுவம் மற்றும் விமானப் படையினரின் உதவியுடன் இன்றைய தினம் பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணியை முன்னெடுத்தனர்.
-இதன் போது 30 வயதுக்கு மேற்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பைஸர் தடுப்பூசியை ஒதுக்கப்பட்ட நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.