(மன்னார் நிருபர்)
(10-08-2021)
நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்று நிலைமை அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் , கொரோனா நிலைமைகளை கையாளவும் கிராம ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள கோவிட் சுகாதார மேம்பாட்டு குழுவினர் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் என மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைகளை முன் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட கோவிட் சுகாதார மேம்பாட்டு குழுவினருக்கான கலந்துரையாடல் மற்றும் அவர்களுக்கான சுகாதார பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை மன்னாரில் இடம் பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ‘கொரோனா’ தொற்று நீடித்து வருகின்ற நிலையில் எமது பகுதிகளில் தற்போது அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நடை முறைகளை அனைவரும் கட்டாயம் பின் பற்ற வேண்டும். தற்போது வைத்தியசாலைகளில் வள பற்றாக்குறை காணப்படுகிறது.
அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே கிராம மட்டத்தில் செயல்படும் கோவிட் சுகாதார மேம்பாட்டுக் குழுக்கள் சரியான முறையில் அர்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
நோய் நிலை தொடர்பான சரியான தகவல்களை சேகரிக்க வேண்டும் .அவை தொடர்பான விவரங்களை உடனடியாக கிராம அலுவலர் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்க வேண்டும் .அதே நேரம் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
சில நேரங்களில் எமது நாட்டில் என்னும் அதிகளவான நெருக்கடிகள் ஏற்படும்.நாட்டை மீண்டும் முடக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம்.
எனவே கிராம ரீதியாக இயங்கும் குழுக்கள் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் இயங்கினால் கொரோனா நிலையை ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் .
அதே நேரம் கோவிட் சுகாதார மேம்பாட்டு குழுவினருக்கு தேவையான ஒரு தொகுதி சுகாதார பொருட்களை மன்னார் “வேல்ட் விசன்” அமைப்பின் உதவியுடன் மன்னார் வேல்ட் விஷன் அமைப்பின் திட்ட முகாமையாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மற்றும் மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருடன் இணைந்து கையளித்துள்ளார்