சிவா பரமேஸ்வரன் (மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்)
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தாக்குதலில் விசாரணைகள் இன்னும் தொடருவதாக அரசு கூறுகிறது.
அந்த தாக்குதல் குறித்த விசாரணைகள் விரைவாக முடிக்கப்பட்டு குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட வேண்டும் என்று அத்தக்குதலில் உயிரிழந்தவர்கள் சார்ந்த நாடுகள் இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முக்கிய சந்தேக நபரான சஹ்ரானுடன் யார் யார் தொடர்பிலிருந்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாக அரசு கூறுகிறது. சஹ்ரானை அரச படைகள் சுற்றி வளைத்த போது அவரும் அவருடைய குடும்பத்தார் சிலரும் தம்மைத்தாமே வெடிக்க வைத்துக் கொண்டனர் என்று அப்போது பொலிசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை நடத்திய முஹமது ஹஸ்தூனின் மனைவி சாரா ஜெஸ்மின் என்கிற புலஸ்தினி ராஜேந்திரன் எங்குள்ளார் எனும் தகவல் இதுவரை இல்லை.
இதேவேளை சந்தேகத்தின் அடிப்படையில் இத்தாக்குதல் தொடர்பில் பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரணையின்றி விடுவிக்க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்தமைக்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வார இறுதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அஹ்மத் அலாவுதீனின் தந்தை அலாவுதீன் அஹமட் முயாத், கொழும்பு பிரதம நீதவான் புத்திக சி ராகலவினால் கடந்த 6ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
அலாவுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய சாட்சிகள் இல்லாமையால், அவர் மீது இனி வழக்குத் தொடர முடியாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்ததைத் தொடர்ந்து அலாவுதீன் விடுதலை செய்யப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சந்தேகநபர்கள் தற்போதைய அரசால் விடுவிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
“ஏப்ரல் 21, 2019 அன்று சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராகிம் இன்ஷாப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் முன்னர் விடுவிக்கப்பட்டனர்” என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து சந்தேகநபர்கள், அவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விடுத்த கோரிக்கையை அடுத்து , கொழும்பு மேலதிக நீதவான் ராஜிந்த்ர ஜயசூரியவினால் விடுவிக்கப்பட்டனர்.
ஏப்ரல் 21, 2019 அன்று பல தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதுத் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் அமெரிக்கா மூன்று இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளதோடு, பயங்கரவாத சட்டங்களை பயன்படுத்தி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களுக்கு எதிராக இதுவரை வழக்கு தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல்களில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலேயே மிக அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு புலனாய்வுத் தகவல்கள் தெரிந்திருந்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் `நல்லாட்சி அரசு` என்று தம்மைக் கூறிக் கொண்ட ரணில்-மைத்ரி ஆட்சியில் அவர்கள் இருவருக்கும் இடையே பெரும் பிளவுக்கு வழி வகுத்தது. இத்தாக்குதலை அடுத்து இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மீதான அரசின் கெடுபிடிகள் அதிகரித்து அவர்கள் பல நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகளும் அமெரிக்கா போன்ற நாடுகளும் கூறுகின்றன.