புராணங்களில் வரும் அசுரர்கள் கொல்லப்பட்டுகையில் அல்லது தோற்கடிக்கப்படுகையில் தங்கள் தோற்றங்களை மாற்றிக் கொள்வார்கள். அப்படித்தான் சூரன் சேவலும் மயிலுமாக மாறினார். இப்பொழுது வைரசும் மனிதகுலத்தின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக திரிபடைந்து கொண்டே போகிறது.தமிழ் மக்கள் மத்தியில் முன்பு டெல்டா என்ற பெயரில் ஒரு ரொபி இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானமலிவான ஒரு ரொபி அது. இப்பொழுது அதே பெயரில் ஒரு வைரஸ் வந்திருக்கிறது. ஆனால் டெல்டா, பீட்டா என்பவற்றுக்கு மேலதிகமாக புதுவித திரிபுபெற்ற வைரசினால் அண்மையில் கொலம்பியாவில் 8பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்-லாகூரில் கொரோனா நோயாளர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதித்தபோது “எப்சிலன்” என்ற புதிய வைரஸ்திரிபு கண்டறியப்பட்டுள்ளது.ஏனைய வைரசுகளைப் போன்று தடுப்பூசிகளால் “எப்சிலன்”திரிபை கட்டுப்படுத்தமுடியாது என்று நிபுணர்கள் சுட்டிகாட்டுகின்றனர்
அதாவது கொரோனா வைரஸ் தனக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுத்து புதிய திரிபுகளை பெற்று வருகிறது. புராணகால அரக்கர்கள் புரிந்த மாய போரைப் போல.
இலங்கைத் தீவில் வைரஸ் தாக்கத்தால் இதுவரையிலும் இறந்தோரின் மொத்தத் தொகை 5000 ஐயும் தாண்டி விட்டது.முதலாவது அலையில் 13 பேரும் இரண்டாவது அலையில் 596பேரும் மூன்றாவது அலையில் 4212க்கு அதிகமானவர்களும் இறந்துள்ளனர். மூன்றாவது அலையில் இறப்பு விகிதம் நான்குமடங்காக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை வரையிலுமான ஏழு நாட்களில் இறப்பு விகிதம் மிக உயர்வாகாக காணப்பட்டுள்ளது. ஏழுநாட்களுக்குமான சராசரி இறப்பு விகிதம் 3.88.இவை உத்தியோகபூர்வ தகவல்கள். இந்தத் தொகை, இதை விட அதிகமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் உண்டு.
“சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த மூன்றாவது தொற்றலை இந்த ஆண்டின் இறுதிக்குள் 20 ஆயிரம் உயிர்களை எடுத்து விடும்”என்று சுகாதார கொள்கைகளுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரவீந்திர ராணன் எலிய கூறியிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 3000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி காலகட்டத்தில் மாதாந்தம் கொல்லப்பட்டவர்களின் தொகையை விட அதிகமானது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
நாட்டில் கொவிட் பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குச் சென்றுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் வைத்திய சாலைகளில் மட்டுமன்றி தகனச்சாலைகளிலும் பெரும் நெருக்கடி நிலைமையைச் சந்திக்க நேரிடும் என்று அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் நாளாந்தம் வெளியாகும் புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து சில பிரச்சினைகள் உள்ளன. எவ்வாறாயினும் தற்போது பதிவாகும் கொவிட் நோயாளர்களின் அளவைப் பார்க்கும் போது இதனை முகாமைத்துவம் செய்வது கஷ்டமாகும். நாங்கள் இப்போது தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கோ அல்லது இடைத் தங்கல் நிலையங்களுக்கோ அனுப்பும் நடவடிக்கைகளையே செய்கின்றோம். ஆனால் அனைத்து தொற்றாளர்களையும் தேடிப் போகவும் முடியாத நிலைமையே காணப்படுகின்றது.தற்போது கொவிட் நோயாளர்ளை தகனம் செய்யும் தகனச் சாலைகளில் சுகாதார பரிசோதகர்கள் பணியாற்றுகின்றனர். சில இடங்களில் விடியவிடிய அவர்கள் உடல்களைத் தகனம் செய்கின்றனர். இந்த நிலைமை தொடருமாக இருந்தால் வைத்திய சாலைகளையோ, சிகிச்சை நிலையங்களையோ அமைக்காது தகனச் சாலைகளையே அமைக்க வேண்டிய நிலை வராம் ” என்றுமவர் கூறியுள்ளார்.
அதேசமயம் கோட்டாபய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவரும் இப்பொழுது அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவருமாகிய ஆனந்த முருத்தெட்டுவ தேரர் கூறுகிறார் இந்த நிலைமை நீடித்தால் பேக்கரிகளில் உபயோகிக்கப்படும் பாண் போறணைகளில் பிணங்களை தகனம் செய்ய வேண்டி வரலாம் என்று.
தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் எவ்வளவுதான் வேகப்படுத்தினாலும் அவை அவற்றின் இலக்குகளை அடைவதற்கு ஆக குறைந்தது 2022ஆம் ஆண்டில் முன்பகுதிவரை செல்லும் என்றும் மருத்துவர் ரணன் எலிய கூறுகிறார். இதன் மூலம் தொற்றுப் பரவும் வேகத்தை போதுமான அளவுக்கு தடுக்கக் கூடியதாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்த நிலைமை கிட்டத்தட்ட இஸ்ரேலிலும் காணப்பட்டது. உலகில் அதிக விகிதம் பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்ட நாடுகளில் அதுவும் ஒன்று. ஆனால் மறுபடியும் இப்பொழுது அங்கு இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. இலங்கைத் தீவில் ஓகஸ்ட் நான்காம் திகதியிலிருந்து இறப்புவீதம் நாள் ஒன்றுக்கு 90க்கும் அதிகமாக காணப்படுகிறது. இது மேலும் சிறிது காலத்துக்கு தொடரலாம் என்றுமவர் கூறுகிறார்.
உலகில் இதுவரையிலும் டெல்டா திரிபை பெருமளவுக்கு முறியடித்த நாடாக சீனாவைதான் கூறமுடியும்.குவாங்டோங் மகாணத்தில் ஆறே வாரங்களில் அவர்கள் நோய் முறியடிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்றதாகவும் ராணன் எலிய கூறுகிறார்.மேற்படி மாகாணத்தில் பெருமெடுப்பிலான பிசிஆர் சோதனைகளின் மூலமும் தனிமைப்படுத்தல்களின் மூலமுமே டெல்டா திரிபு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் இக்காலகட்டத்தில் தடுப்புஊசி ஏற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன என்றுமவர் கூறுகிறார். எனவே சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் பெற்ற வெற்றி என்பது தடுப்பூசி மூலம் பெறப்பட்ட வெற்றி அல்ல என்றுமவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் இலங்கை அரசாங்கம் பிசிஆர் பரிசோதனைகளை ஒப்பீட்டளவில் குறைத்திருப்பதோடு தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கையை ஏறக்குறைய ஒரு படைநடவடிக்கை போல முன்னெடுத்து வருகிறது.உலகப்பொது புள்ளி விபரங்களின்படி வைரஸ் தொற்றினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து விகிதம் என்றும் தடுப்பூசி போடுவதன் மூலம் இறப்பு விகிதத்தை 1.5 தொடக்கம் 1.3 வரையிலும் குறைக்க முடிந்திருக்கிறது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இது விடயத்தில் மருத்துவ துறையினருக்கும் படைத் தரப்புக்கும் இடையில் பொருத்தமான ஒருங்கிணைப்பு இல்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுவதற்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். வெயில் தாகம் என்பவற்றின் மத்தியில் முதியவர்களை இவ்வாறு நீண்டநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருக்க செய்யும் நடவடிக்கையானது தொற்று வீதத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்ட பொழுது நல்லூர் திருநெல்வேலி போன்ற இடங்களில் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் படங்களோடு கூடிய விமர்சனங்களை முன்வைத்தார்கள். அதேபோல டுவிட்டரில் ஒரு சிங்கள ஊடகவியலாளர் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த கைகாவல என்ற இடத்தில் சில கிலோமீட்டர் தொலைவிற்கு மக்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசி பெறக் காத்திருக்கும் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அரசாங்கம் தடுப்பூசியை விரிவாக ஏற்றிமுடிப்பதன் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று நம்புகிறது. ஆனால் ராவணன் எலிய போன்றவர்கள் கூறுகிறார்கள் எவ்வளவு வேகமாக முயற்சித்தாலும் எவ்வளவு ராணுவத்தனமாக முன்னெடுத்தாகும் நாடு முழுவதும் தடுப்பு ஊசி ஏற்றி முடிப்பதற்கு 2002ஆம் ஆண்டின் முற்பகுதி வரை செல்லலாம் என்று. இந்த இடைப்பட்ட காலகட்டத்துக்குள் வைரஸ் தொற்றும் சாவு வீதமும் அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நாட்டில் இப்போது டெல்டா திரிபு வைரசால் இறப்பவர் தொகை மட்டும் உயரவில்லை. விலைவாசியும் வைரஸ் தொற்றுக்கு நேர் விகிதமாக ஏறிக்கொண்டே போகிறது. சில மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. அங்கர் பால்மா விலையை உயர்த்தும்படி வணிகர்கள் கேட்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இந்த இழுபறிக்குள் சிலவேளைகளில் அரசாங்கம் இறங்கி வந்தால் பால் மாக்களின் விலை அதிகரிக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் வணிகர்கள் பால்மாவை பதுக்கி விட்டார்கள். சமையல் எரிவாயுவின் நிலையும் அப்படித்தான். சீனி மட்டும் மைசூர் பருப்பு போன்றவற்றின் மொத்த விற்பனை விலை கடந்த வாரம் பத்து ரூபாய்களால் அதிகரித்திருக்கிறது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சில நகரங்களில் சனங்கள் நீண்ட வரிசைகளில் காணப்படுகிறார்கள். லாஃப் எரிவாயு விநியோகம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டதால் லிட்ரோ எரிவாயுவைப் பெறுவதற்காக சனங்கள் மாத்தறை, களுத்துறை, ஹொரணை ஆகிய பகுதிகளில் எரிவாயுவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஒருபுறம் பொருட்களை வாங்குவதற்காக நீண்ட வரிசை. இன்னொருபுறம் தடுப்பூசி பெறுவதற்காக மிக நீண்ட வரிசை.
அரசாங்கத்தால் டெல்டா திரிபையும் கட்டுப்படுத்த முடியவில்லை விலையேற்றத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.எனினும் தமிழகத்தில் டெல்டா திரிபு ஏற்படுத்திய படுபயங்கரமான ஒரு நிலைமை இப்பொழுதுவரை இலங்கைத்தீவில் ஏற்படவில்லை என்று துறைசார் நிபுணர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள். பெயர்குறிப்பிட விரும்பாத ஒரு மருத்துவர் கூறினார் மேல் மாகாணத்தோடு ஒப்பிடுகையில் தமிழ்ப் பகுதிகளில் நிலைமை ஸ்திரமாக இருக்கிறது.அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.யுத்த காலங்களில் எல்லாப் பயங்கரமான நிச்சயமின்மைகளின் மத்தியிலும் வேலை செய்த ஒரு மருத்துவத்துறைபி பாரம்பரியம் தமிழ் பகுதிகளுக்கு உண்டு அந்த அனுபவம் இப்படிப்பட்ட நிலைமைகளை எதிர்கொள்ள உதவும் என்று.
இருக்கலாம். அதேசமயம், டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் உமா வைத்தியநாதன் கூறுவதுபோல “இந்த உலகில் எந்த ஒரு நாடும் படுக்கைகளை ஒக்சிசன் வென்டிலேட்டர்களை தீவிர சிகிச்சை விடுதிகளை அதிகரிப்பதன் மூலம் கட்டுப்படுத்த இயலுமாகஇருக்கும் என்றில்லை. இது தற்காலிகமான சாத்தியமற்ற அதிகம் செலவுகூடிய ஒரு தீர்வு. சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்புத் தான் அதற்குரிய பதில் என்றால் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் சாவுக்கேதான அதிகரித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்க முடியாது. விரைவான செலவு குறைந்த நீண்டு நிலைத்திருக்கக் கூடிய தீர்வு எதுவென்றால் அது சமூக இடைவெளியை பேணுவதும்,மாஸ் அணிவதும்,நோய்த்தொற்றை தடுக்கும் மிகவும் உயர் தரத்திலான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது தான்……. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ஆஸ்பத்திரிகள் கட்டப்பட்டிருப்பது வீதி விபத்துக்களை தடுப்பதற்காகவல்ல. மாறாக கவனமாக வாகனம் செலுத்துவதன் மூலம்தான் வீதி விபத்தை தடுக்கலாம். மக்களுடைய நடத்தைதான் பெருந் தொற்றுநோயின் போக்கை தீர்மானிக்கிறது.”