மனித உரிமை அமைப்புகள் இந்தோனேசிய ராணுவத்தின் இத்தகைய மீறல் செயல்பாடுகளை கண்டித்தது. அதாவது இது பெண்களின் கண்ணியத்தை இழிவு படுத்துவதோடு நீண்ட நாளைய மனக்காயத்தையும் உருவாக்குவது என்று கண்டங்கள் குவிய அந்த இருவிரல் சோதனை முறையோடு கன்னிமை சோதனையையே முடிவுக்குக் கொண்டு வந்தது இந்தோனேசிய ராணுவம்.
அது என்ன இருவிரல் சோதனை:
பெண்களின் பாலுறுப்புக்குள் இருவிரல்களை விட்டு கன்னித்திரை கிழியாமல் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும் முறையாகும் இது, மிகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த முறையை இந்தோனேசிய ராணுவம் பெண் வீரர்களுக்கு செய்து வந்தது, இப்போது இந்தக் காட்டுமிராண்டித் தனத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது.
இந்தச் சோதனையில் கன்னிமை தவறியதாக முடிவெடுக்கப்பட்டால் அவர்கள் ராணுவத்தில் சேர முடியாது.
முன்பு பெண்களின் ஒழுக்கத்தை சோதனை செய்ய இது முக்கியமானது என்று ராணுவம் கருதியது. இந்நிலையில் இத்தகைய சோதனையினால் கன்னிமை பற்றி அறிய முடியாது என்ற உலகச் சுகாதார அமைப்பு, ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டாரா என்பதைக் கண்டறிய இந்த கன்னிமை சோதனை பயன்படாது என்றும் உடலுறவு கொண்டவர்களுக்கும் கூட கன்னித்திரை அப்படியே இருக்கும் என்றும் கூறியது. எனவே கன்னித்திரை இருந்தால் அந்தப் பெண் கற்பை இழக்கவில்லை என்பதற்கான உத்தரவாதமான விஞ்ஞான சோதனை முறை இதுவல்ல என்று உலகச் சுகாதார அமைப்பும் கண்டித்தது.
இந்நிலையில் இந்தோனேசிய ராணுவத் தலைமை அந்திகா பெர்காசா கூறும்போது, “கன்னித்திரை முழுதும் ஊடுருவப்பட்டது, அல்லது பாதி இல்லை என்பதை உறுதி செய்யும் சோதனைகள் இப்போது நடத்தப்படுவதில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ராணுவத் தேர்வு சமமாகவே நடத்தப்படும்” என்றார்.
இத்தகைய சோதனைகள் இந்தோனேசியா கடற்படை மற்றும் விமானப்படையில் ஒழிக்கப்பட்டுவிட்டதா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
இந்தோனேசிய காவல்துறையிலும் பெண்களுக்கு இத்தகைய சோதனை நடத்தப்பட்டு இது 2015ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.