கனடா- ஸ்காபுறோ ஸ்ரீ துர்க்கையம்மன் தேவஸ்த்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் கடந்த திங்கட்கிழமை காலை தொடக்கம் மதியம் வரை நடைபெற்றது.
வருடா வருடம் வெளிவீதி வலம் வந்து, வெகு சிறப்பாக நடைபெறும் இரதோற்சவம் இவ்வருடம் உள்வீதியில் மூன்று சிறிய இரதங்கள், விநாயகர், முருகன், அம்பாள் ஆகியவர்களுக் குரியவையாய் வலம் வந்தன.
அடியார்கள் வடம் பிடித்து வர, அழகிய சிறிய இரதங்களில் மூப்பெரும் கடவுளர்கள் அடியார்களுக்கு காட்சி தந்தனர்.
ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ தியாகராஜக் குருக்கள் கணேச சுவாமிகள் அவர்களின் தலைமையில் உப சிவாச்சாரியார்கள் அனைத்து கடமைகளையும் நேர்த்தியாகச் செய்திருந்தனர்.
இரதோற்சவத்தின் பிரதம உபயகாரரான வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் அவர்கள் தனது குடும்பத்தினர் சகிதம் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
மூன்று இரதங்களும் இருக்கைக்கு வந்தவுடன் கர்நாடக இசைக் கச்சேரி இடம்பெற்றது. பக்தர் அனைத்து அபிசேகங்கள் பூசைகள் அனைத்திலும் பக்திபூர்வமாக கலந்து கொண்டு அன்னதானத்திலும் பங்கு கொண்டு இல்லம் ஏகினர்.
தற்போதைய கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு ஏற்பவும், ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு இடையூறுகள் இல்லாமலும் உள்வீதியில் இவ்வருடத்து இரதோற்சவம் நடைபெற்றது குறித்து பக்தர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
(செய்தி மற்றும் புகைப்படம்:- சத்தியன்)