NORTH AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY நிர்வாகத்தினர் நடத்திய அஞ்சலி நிகழ்வில் வி. துரைராஜா புகழாரம்
“கனடாவில் அண்மையில் எம்மைவிட்டுப் பிரிந்து சென்ற அமரர் கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்கள் பல்வேறு நற்பண்புகள் நிறைந்தவர். அவரது துறை சார்ந்த அறிவு மற்றும் பட்டங்கள் ஆகியவற்றை ஒரு புறத்தே வைத்து விட்டு மிகுந்த மனிதநேயம் கொண்டவராக அவர் தனது கனடிய வாழ்வை மேற்கொண்டார். எப்போதும் யாருக்காவது உதவிடவும்,அவர்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியுமே அவரது எண்ணங்களின் ஓட்டம் இருந்தது.
மறைந்த நண்பர் தாம் வசந்தகுமார் அவர்கள் விருதுகளையோ அன்றி பாராட்டுக்களையோ எப்போதும் விரும்பியது இல்லை. தன்னிடம் ஒப்படைக்கின்ற பதவிகள் எவையாக இருந்தாலும் அவற்றை மிகவும் பொறுப்புணர்வோடு ஏற்று சேவைகளையும் செய்து, அதன் மூலம் முன்னேற்றங்களையும் அடைவதையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். மாறாக இந்த பதவி மூலம் தான் எந்த இலாபத்தைப் பெறலாம் என்றெல்லாம் அவர் ஒருபோதும் சிந்தித்தது இல்லை.”
இவ்வாறு தெரிவித்தார் சமூக சேவையாளரும் ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினருமான திரு விநாசித்தம்பி துரைராஜா.
கடந்த செவ்வாய்க்கிழமை10ம் திகதி மாலை ஸ்காபுறோவில் AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY மண்டபத்தில் மேற்படி கல்லூரி நிர்வாகிகளான திரு சாம் மணியன் மற்றும் திருமதி ரதி மணியன் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த பொறியியற்கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வில் அஞ்சலியுரையாற்றிய போதே திரு துரைராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்றைய தினம் NORTH AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY நிர்வாகத்தினர் கல்லூரி சார்பில் நடத்திய அமரர் கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்களின் உருவப் படத்திறப்பு நிகழ்வு மற்றும் அஞ்சலி உரைகள் ஆகியன இடம்பெற்றன. அழைக்கப்பெற்ற சில நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்படி நிகழ்வு நடத்தப்பெற்றது
NORTH AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY நிறுவனத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக கல்வித்துறை இயக்குனராகப் பணியாற்றி மேற்படி கல்லூரிக்கு பல முன்னேற்றங்களை பெற்றுத் தந்த கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்களின் உருவப் படத்திறப்பு நிகழ்வை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அன்னாரது உருவப் படத்தை கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்களின் புதல்வி திருமதி வைதேகி திறந்து வைத்தார்.
தொடர்ந்து இடம்பெற்ற அஞ்சலி நிகழ்ச்சியை முதலில் NORTH AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY நிறுவனத்தின் முதல்வர் திருமதி ரதி மணியன் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
அவர் தனது உரையில் முதலில் NORTH AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY நிறுவனத்தின் வளர்ச்சியில் கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்களுக்கு நிறையவே பங்குண்டு எனவும், அவரது நிர்வாகத் திறமை, மற்றும் பொறுமையாக விடயங்களை கவனித்தல் , கற்பித்தல் திறமைகள் போன்றவை பற்றி சிறப்பாக உரையாற்றினார். ஆரம்பத்தில் ஒரு சில மருந்தகத் துறை சார்ந்த கற்கை நெறிகளை மட்டுமே கொண்டிருந்த தமது NORTH AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY நிறுவனம், அமரர் தாம் வசந்தகுமார் அவர்களின் வருகைக்கு பின்னர் பல தொழில் சார்ந்து கற்கை நெறிகளையும் கல்லூரியில் இணைத்துக்கொள்ள முடிந்தது என்றும் இதற்காக உரிய அரச திணைக்களங்களிலிருந்து அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவர் கடுமையாக உழைத்தார் என்றும் எனவே அவரது இழப்பு தனிப்பட்ட ரீதியில் தமக்கும் தம் கணவருக்கும் மிகுந்த வேதனையைத் தருவதாகவும் அத்துடன் தமது NORTH AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY கல்லூரியின் வளர்ச்சி மிகுந்த பின்னடைவை ஏற்படுத்துமோ என்று தாம் கவலைப் படுவதாகவும் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ரொறன்ரோ மனித நேயக் குரல் அமைப்பின் தலைவருமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் தனது உரையில்
“நான் 1990ம் ஆண்டு கனடாவிற்கு வந்தபோது தற்போது அமரராகிவிட்ட கலாநிதி தாம் வசந்தகுமார் பல மேடைகளில் தோன்றி எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக காத்திரமான உரைகளை ஆற்றியதை கண்டு வியந்தேன். ஆனால் காலப்போக்கில் அவரது உயரிய சமூகப் பங்களிப்பைக் கண்டு அவரோடு நட்புக் கொண்டேன்.
கனடாவில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லுரி பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சியில மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கிய தாம் வசந்த குமார் அவர்கள் பின்னர் கொம்பியுடெக் கல்லூரியை ஆரம்பித்து பல இளைஞர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு தகுந்த பதவிகளையும் முக்கிய நிறுவனங்களில் பெற்றுக் கொடுத்தார்” என்று கூறினார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் அன்றைய அஞ்சலி நிகழ்வானது கலாநிதி தாம் வசந்தகுமார் அவரது மறைவிற்குப் பின்னர் குடும்ப நிகழ்வுகளுக்குப் பின்ன்ர் இடம்பெற்ற சமூகம் சார்ந்த ஒரு அஞ்சலி நிகழ்வாக இதை நடத்திய NORTH AMERICAN COLLEGE OF PHARMACEUTICAL AND TECHNOLOGY நிறுவனத்திற்கும் உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்;
கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்களின் புதல்வி திருமதி வைதேகி தனது உரையில்” எனது அப்பா அதிகம் செல்வத்தை சேர்க்க எப்போதும் ஆசைப்பட்டதே இல்லை. நாம் வாழும் வரை சமூகத்திற்கும் மற்றவர்களுக்கும் உதவிகளைச செய்து வாழ வேண்டும் என்று விரும்பியவர். எம்மை சரியான வழியில் கூட்டிச் சென்று தகுந்த கல்வியையும் அறிவையும் ஈட்டித் தந்து தகுந்த துணைகளையும் தேடித்தந்துள்ளார்” என்று கூறினார்.
(செய்தியும் படங்களும்: சத்தியன்)