(மன்னார் நிருபர்)
(13-08-2021)
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்ற மக்களுக்கும் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால் (மெசிடோ) தொடர்ச்சியாக மனிதாபிமான உதவி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் மன்னார் தாராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு தேவையான ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று (13) ஒப்படைக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தாராபுரம் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதார பொருட்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக மெசிடோ நிறுவனத்தின் மன்னார் மாவட்ட குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.
முக கவசம், பற்பசை, கிருமி நீக்கி, பாதணி, சவர்க்காரம், சலவை தூள், ஆடை, உட்பட்ட 11 அத்தியாவசிய சுகாதார பொருட்கள் அடங்கிய 100 பொதிகள் மேற்படி கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு என கையளிக்கப்பட்டது.
அதே நேரம் கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ள 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களும் மெசிடோ நிறுவனத்தினால் மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.