சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசு சோதனை மேல் சோதனையை எதிர்கொண்டு வருகிறது. தான் விரித்த வலையில் தானே சிக்குண்டு தவிக்கும் நிலையில் உள்ளது `முத்து தீவு`. அரசியலில் குடும்ப ஆதிக்கம், கிட்டத்தட்ட ஒரு கட்சி ஆட்சி, அனைத்தும் நாமே எனும் இறுமாப்பு, தொடர்ச்சியான சிறுபான்மையினர் விரோத போக்கு, எல்லப் பிரச்சனைகளுக்குமான தீர்வாக பயங்கரவாத தடை சட்டம் எனும் பூச்சாண்டி என்ற அவப்பெயரே பன்னாட்டரங்கில் இலங்கைக்கு நிலவுகிறது.
போர்க் காலத்திலிருந்தே அரசால் செய்ய முடியாத, செய்ய மறுத்த, வசதிகள் இருந்தும் செய்ய விரும்பாத பல வேலைத் திட்டங்களை அரச சார்பற்ற நிறுவங்னகளே நிறைவேற்றி வந்தன. அடிப்படை வசதிகள், மருத்துவ தேவைகள், மகளிருக்கான உதவி என்று பல வகைகளில் அந்த நிறுவனங்கள் செய்து வந்தன. எனினும் பல நாடுகளில் அரச சார்பற்ற அமைப்புகள் மீதிருக்கும் சந்தேகம் இலங்கை அரசுக்கும் ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில் அரச சார்பற்ற அமைப்புகளின் நடவடிக்கையை முடக்க அல்லது அடிபணியச் செய்ய மொடுக் கட்சியின் அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அரச சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகவும், மேலும் அதை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் பன்னாட்டரங்கில் உறுதியளித்த அரசு இப்போது அந்த நிறுவனங்களை கண்காணிக்கவும், அவர்களின் நிதி ஆதாரங்களின் மூலத்தை உற்று நோக்கவும் எண்ணியுள்ளது. அதற்கான சட்ட வரைவு ஒன்றையும் ராஜபக்ச அரசு உருவாக்குகிறது. இதனால் அரச சார்பற்ற நிறுவனங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளன.
அரசு சொல்வது ஒன்று செய்வது வேறொன்று என்று அந்த அமைப்புகள் விசனம் வெளியிட்டுள்ளன. அரசின் இந்தப் போக்கு தொடருமாயின் இலங்கையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு அதை தம்மால் செய்ய முடியாத நிலை உருவாகும் என்று அரச சார்பற்ற அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஏற்கனவே நிறுவப்பட்ட செயலகத்தின் கீழ் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை உருவாக்க அரசு எண்ணியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எங்கிருந்து, எப்படிப் பணம் வருகிறது என்பதைக் கண்காணிக்க மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் அலுவலகத்துடன் அரச சார்பற்ற அலுவலகங்களின் செயகலத்தையும் இணைக்க ராஜபக்ச அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.
இது அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அதில் பணியாற்றும் உள்ளூர் மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க, அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாகத்தெரிவிக்கப்பட்டது என்று தேசிய சமாதான பேரவை கூறுகிறது. அதேவேளைஅரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் அமைதிமற்றும் இந்த நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தி அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
”அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்தாமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வழிவகுக்கவில்லை. தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி பணப் பரிவர்த்தனைகளை விசாரணை செய்யத் தவறியமை மற்றும் அரசுக்கு வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களை கருத்திற்கொள்ளாமையே காரணம்” என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலான எந்த விசாரணையும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள தேசிய சமாதானப் பேரவை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குறித்து முடிவற்ற விவாதம் தொடர்கையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் பழிவாங்கலை நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் அமைதி கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காகச் செயற்படும் தேசிய சமாதானப் பேரவை உள்ளிட்ட முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்மற்றும் இந்த மாதத்தின் முற்பகுதியில் ஜனாதிபதியையும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு, சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.
தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, ராஜபக்ச அரசாங்கத்தின் நெருங்கிய கூட்டாளியான கலுபஹனே பியரத்ன தேரர், அருட்தந்தை ஆசிரி பெரேரா, முஸ்லிம் கவுன்சிலின் ஹில்மி அஹமட், செயற்பாடுகளின் போது காணாமல் போன இராணுவ வீரர்களின் உறவினர்களின் அமைப்பை நடத்தும் விசாக தர்மதாச, பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பில் அரச சார்பற்ற அமைப்பை நடத்தும் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், சஞ்சீவ விமலகுணரத்ன, பேராசிரியர் டி. ஜெயசிங்கம், பேராசிரியர் டியூடர் சில்வா, ஜோ வில்லியம்ஸ் மற்றும் தயானி பனகொட ஆகியோர் குறித்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
“பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நீடித்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர தேவையான நிறுவன சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ச வெளியிட்ட டிவிட்டர் பதிவைஅவர்கள்சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களை எவ்வித தடையுமின்றி செயலபட ஜனாதிபதி ஆணையிட வேண்டும் என்று அவரைச் சந்தித்த பிரதிந்திகள் கோரியிருந்தாலும் அது தொடர்பில் எவ்விதமான உறுதியும் அரச தரப்பில் அளிக்கப்படவில்லை.
“சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் தனது அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்று ஜனாதிபதி தெரிவித்ததாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், ஒரு பக்கம் சிவில் சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் செயல்பட ஆர்வமுள்ளது போல் காட்டிக் கொள்ளும் அரசாங்கம் மறுபுறம் அப்படியான அமைப்புகளின் குரல்வளையை நெறிக்கும் செயலில் இறங்குகிறது எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பது மற்றும் அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்ட பல கருத்துக்களை ஜனாதிபதி தெரிவித்ததாக அரச சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்காணிப்பு செயலகத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு அல்லாமல் வேறு சிவில் விவகார அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதன்போது கோரப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியில் உள்ள அரசாங்கத்திற்கு கொரோனாவை கட்டுப்படுத்த உதவுமாறு, என்று அரச சாரா அமைப்புகளிடம் அரசு சார்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிப்பு செயலகத்தின் தலைவர் தற்போதைய செயற்பாடுகளைக் கைவிட்டு அந்த நிதியை கொரோனாவை கட்டுப்படுத்த வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அரச சாரா அமைப்புகள் நிராகரித்து விட்டன.
கனடா, பிரிட்டன், சுவிஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து அரச சாரா அமைப்புகளுக்கு வரும் நிதியுதவிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரச சாரா அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்திற்கான உதவி எனும் பெயரில் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் அரசின் ஸ்திரத்தன்மையை குலைத்து நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த இந்த நிறுவனங்களை ஒரு முகமூடியாக வைத்து கொண்டு செயல்படுகின்றனர் என்று அந்த அதிகாரி குற்றஞ்சாட்டுகிறார்.
குறிப்பாக கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசுகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்து அவர்களுக்கு ஆதரவாக பக்கச்சார்பான வகையில் நடந்து கொள்கின்றன என்று ராஜபக்ச அரசின் அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
பன்னாட்டு நிதியுதவிகளை நேரடியாகப் பெற முடியாமல் தத்தளிக்கும் இலங்கை அரசு, அரச சார்பற்ற நிறுனவங்களின் செயல்பாட்டை முடக்க நினைத்தால் அது பாதகமான எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என்பது திண்ணம். அதை உணர்ந்து அரசு செயல்படுவது நலம்.
சீனா என்கிற ஒற்றை நாட்டை நம்பி, பொருளாதார மற்றும் பன்னாட்டரங்கில் அரசியல் ரீதியில் வல்லமையும் செல்வாக்கும் கொண்ட மேற்குலக நாடுகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது தமது விரோதத்தை ராஜபக்ச அரசு காட்ட முற்பட்டால் அது மேலும் சிக்கலுக்கே வழி வகுக்கும். அரசு அதை உணர வேண்டும்.