கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவிப்பு
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
எமது லிபரல் சிறுபான்மை அரசாங்கம் பதவியேற்று சில மாதங்களில் உலக நாடுகளோடு சேர்த்து, கனடாவையும் சூழ்ந்து கொண்ட கொரோனா நோய்த்தொற்று காரணமாக பதட்டத்துடன் காணப்பட்ட கனடிய மக்களுக்காக செயலில் இறங்கியது எமது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கமே ஆகும். ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கு சாதாரண நாட்களிலேயே எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரம் மிக அதிகமாக இருக்கும். அரசாங்கம் எந்த திட்டத்தையோ அன்றி மசோதாவையோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் அதை எதிர்ப்பதும் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று பயமுறுத்துவதுமாகவே நாட்கள் கழிந்து செல்லும். இவ்வாறு இருக்கும் போது நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களையும் நிதி உதவிகளையும் உடனடியாக அறிவித்தபோது கூட எதிர்க்கட்சிகள் அவற்றை விமர்சித்தன.
பொதுவாகவே ஒரு சிறுபான்மை அரசாங்கம் ஆட்சியில் தாக்குப் பிடிக்கக் கூடிய கால எல்லை பதினெட்டு மாதங்களே ஆகும். ஆனால் எமது அரசாங்கம் 21 மாதங்களை தற்போது பூர்த்தி செய்த பின்னரே எமது பிரதமர் மக்களின் ஆணையை புதிதாகப் பெறுவதற்காக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஆளுனர் நாயகத்தை வேண்டினார்.
எதிர்க்கட்சிகள் வரவு செலவுத் திட்டம் போன்ற முக்கியமான பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டியவை சமர்ப்பிக்கப்படும் போது, எம்மை சங்கடப்படுத்துவதிலேயே கண்|ணும் கருத்துமாக இருந்தார்கள். எனவே நோய்த் தொற்று காரணமாக பல் வேறு இழப்புக்கள் மத்தியில் நிதி நெருக்கடிகள் அரசுக்கு சவால்களாக காணப்பட்ட இந்த நேரத்தில் மக்களிடமிருந்து புதிய ‘ஆணை’ ஒன்றைப் பெறுவதற்காகவே தேர்தலை நடத்த எமது பிரதமர் விரும்பினார்.
இந்த தேர்தல் முடிவுகள் எமது அரசாங்கத்தை மீண்டும் பெரும்பான்மை பலம் கொண்டதாக தேர்ந்தெடுக்க கனடிய மக்கள் விரும்பினால் எமக்கு வாக்களிக்கலாம். அல்லது கொன்சர்வேர்ட்டிவ் கட்சியை தேர்ந்தெடுக்க விரும்பினால் அவ்வாறு செய்யலாம். இதுவே எமது தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் எண்ணமாகும்
ஆனால் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியிடம் நல்ல திட்டங்கள் இல்லை. மக்கள் அவர்கள் ஆட்சியில் பல பாதிப்புக்களையும் எதிர்கொள்ள வேண்டிவரலாம். எனவே கனடியர்கள் மீண்டும் எமது லிபரல் அரசாங்கத்திற்கு வழங்கி அதன் மூலம் ஒரு புதிய ஆணையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு வழங்குவதே தற்போதைய சூழலில் சிறந்த ஒரு முடிவாகும்”
இவ்வாறு தெரிவித்தார், ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் வேட்பாளராகப் போட்டியடுபவருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவித்தார்.
கனடா உதயன் பத்திரிகைக்காக அவரை ஸகாபுறோவில் உள்ள அவரது பிரச்சார அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தனது கருத்துக்களை முன்வைத்தார்.
ஹரி ஆனந்தசங்கரியிடம் நாம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் மிகுந்த உற்சாகமாக பதிலளித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தங்கள் அரசாங்கம் ஆற்றிய சேவைகள் மற்றும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் ஆகியவை பற்றிக் கூறுவீர்களா, என்று நாம் கேட்டுக்கொண்டபோது அவர் முக்கியமான பல திட்டங்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டார்.
கனடா முழுவதற்குமான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், ரொறன்ரோ பெரும்பாகத்தில் நடைபெறும் பலவற்றை தருவதாகக் குறிப்பிட்ட அவர் அவற்றை பட்டியலிட்டார்.
ஸ்காபுறோவை நோக்கிய விரைவுப் புகையிரத சேவை மக்கள் எதிர்பாராத அளவிற்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளது என்று கூறிய அவர் தொடர்ந்தும்பல அபிவிருத்தித் திட்டங்களை ரொரன்ரோ பெரும்பாகத்தில் எமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அவற்றுள் ரூஜ் தேசியப் பூங்காத் திட்டம் (Rouge National Urban Park) என்பது மிகவும் பெரியதோர் திட்டமாகும். இதன் மூலம் சூழல் பாதுகாப்பு மற்றும் பறவைகள் விலங்குகள் ஆகியவை பாதுகாக்கப்பெற்று இயற்கையும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த ரூஜ் தேசியப் பூங்காத் திட்டம் (Rouge National Urban Park) அமைந்துள்ள விசாலமான நிலப்பரப்பில் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் வரவேற்புப் பகுதி, சன சமூக நிலையம் ஆகியன அமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்திற்கு 30 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்காபுறோவில் அமையவுள்ள தமிழர் சமூக மையம் எமது அரசாங்கம் வழங்கிய பாரிய நிதி உதவியாகும். தமிழர் சமூக மையம் திட்டத்தில் தமிழர் சமூகத்திற்கு பயனுள்ள பல பிரிவுகள் அமையவுள்ளன. மேலும் கென்னடி புகையிரத நிலையத்திலிரு;நது மல்வேர்ன் வரையிலான நிலக் கீழ் விரைவுப் புகையிர விஸ்தரிப்புத் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக கருதப்படுகின்றது.. இதன் மூலம் எமது பகுதி மக்கள் அனைவரும் தாங்கள் அனுபவித்த போக்குவரத்து தொடர்பான சிரமங்களிலிருந்து மீழ்ச்சியடைவார்கள் என்று நான் நம்புகின்றேன். என்றார் ஹரி ஆனந்தசங்கரி.
அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் மக்கள் தொடுக்கப்பட்ட கொடிய யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு பொறுப்புக் கூறலும் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கையின் பதில் அல்லது நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டபோது ஹரி ஆனந்தசங்கரி பின்வருமாறு தெரிவித்தார்.
“இது ஒரு முக்கிய விடயமாகும். அதுவும் ஐக்கிய நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு விசாரணைக்குரிய விடயமாகும்.. இலங்கையிடம் பொறுப்புக் கூறல்தொடர்பான விடயங்களைக் கவனிக்க ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து முக்கிய நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். இதற்காக எமது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் பல தடவைகள் குரல் கொடுத்துள்ளது. நானும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான கவுன்சிலில் உரையாற்றி உள்ளேன். எனவே இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்வதற்கும் எமது லிபரல் அரசாங்கத்தை தமிழ் மக்கள் மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும்.” என்றார் ஹரி ஆனந்தசங்கரி.
தொடர்ந்து அவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் உலக வெப்ப மயமாகும் ஆபத்துகளிலிருந்து உலகம் விடுபடுவதற்கு ஏனைய நாடுகளோடு சேர்ந்து உழைக்க முன் வந்துள்ளார். காபன் வாயுவைக் கட்டுப்படுத்துதல்., மின்சார் வாகனங்களை பாவனைக்கு கொண்டு வருதல் போன்ற விடயங்களில் அக்கறை எடுத்து கனடாவில் பாரிய பிரச்சனைகளாக உள்ள காட்டுத் தீ, வெள்ள அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து மக்கள் நிவாரணம் பெறவும் நல்ல திட்டங்களை அமுல் செய்துள்ளார். மேலும் அதிக நிதி ஒதுக்கீடுகளை எமது அரசாங்கம் செய்துள்ளது.
அத்துடன் எமது பிரதமரும் அரசாங்கமும் நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்குரிய கட்டணத்தை வழங்குவதற்கு சட்ட மூலமாக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்கள். ஒரு குழந்தையின் பராமரிப்புச் செலவாக நாளொன்றுக்கு பத்து டாலர்கள் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது. எனவே இவ்வாறான திட்டங்களை அமுல் செய்ய ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமைய வேண்டியது மக்களுக்கு அதிக நன்மைகளைத் தேடித்தரும் என்பது எனது நம்பிக்கை என்றார் ஹரி ஆனந்தசங்கரி.
இறுதியாக கனடா உதயன் வாசகர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த போது அவர் கூறுகையில்
“ நான் முன்னரே கூறியது போன்று எமது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் பெரும்பான்மை அரசாங்கமாக ஆட்சியில் அமர மக்கள் விரும்பினால் அவர்கள் லிபரல் கட்சிக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20 திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் எமது அரசாங்கம் கோவி;ட்-19 ஆரம்ப காலத்தில் எவ்வாறு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயற்பட்டதோ அதே போன்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் சேவையாற்ற வாய்ப்புக் கிட்டும்” என்றார்