ஒன்றாரியோ மாகாணத்தின் பாடசாலைகளிலும் கோவிட் -19 தடுப்பூசி மையங்களை அமைக்க மாகாண அரசு தீர்மானித்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினரும் ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமான விஜய் தணிகாசலம் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு அறிவித்துள்ளார்.
மேற்படி செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
கோவிட்-19 நோய்த்தொற்றினை முறியடிப்பதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் பொது சுகாதார அமைப்புகளுடனும் பொது நிதியுதவியைப் பெறும் கல்விச்சபைகளுடனும் இணைந்து பாடசாலைகளில் அல்லது பாடசாலைகளுக்கு அருகில் தடுப்பூசி வழங்கும் மையங்களை அமைக்கவுள்ளது. பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரும், பாடசாலை ஆரம்பித்து முதல் சில வாரங்களுக்கும் இத்தடுப்பூசி மையங்கள் இயங்கிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை முதலாவது அல்லது இரண்டாவது சொட்டுத் தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளாதவர்களை அதனைப் பெற்றுக்கொள்ளச் செய்யும் நோக்கத்தினை இலக்காகக் கொண்டதுடன், தடுப்பூசியைப் பெறத் தகுதியுடைய மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் போன்றவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வசதியான முறையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோவில் கோவிட்-19க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது உங்கள் தெரிவாக தொடர்ந்தும் இருந்துவருகின்ற போதிலும், சுகாதார வல்லுனர்களின் அறிக்கையின்படி கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வற்கான சிறந்த வழியென ஊக்குவிக்கப்படுகின்றது.
கல்வித் துறையும், பொது சுகாதார அமைப்புகளும், தகுதியுடைய இளையவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதிலும், வரலாறு காணாத இந்நோய்த்தொற்றின்போது மாணவர்களுக்களையும் குடும்பங்களையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஒன்ராறியோ அரசாங்கம் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருவதால், தடுப்பூசி பெற விரும்பும் தகுதியுடைய அனைவரும் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள வழியமைக்கும் அதேவேளை, பாடசாலைகள் அனைத்தும் ஆண்டு முழுவதும் இயங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறது.
இவ்வாறு எம்பிபி விஜய் தணிகாசலம், தெரிவித்துள்ளார்.