கடந்த 13.5.1996 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டு, வெள்ளிதோறும் தனது வாராந்த நாளிதழை வெளியிட்டுவரும் கனடா உதயன் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்து தனது1322 ஆவது இதழை தனது வெள்ளிவிழா மலராக 06.8.2021 அன்று வெளியிட்டுள்ளது.
பல்கலாச்சார நாடான கடாவில் ஒரு இதழும் தவறாமல் வாராந்த இதழை இருபத்தைந்து ஆண்டுகாலமாக வெளிக்கொணர்வதென்பது சாதாரண விடையமல்ல. ஒரு நொடியின் பெறுமதியை விபத்தில் உயிர்தப்பியவனைக் கேளுங்கள். ஒரு நாளின் பெறுமதியை ஒரு தினக்கூலி மனிதனைக் கேளுங்கள். ஒரு வாரத்தின் பெறுமதியை வாரப்பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள் என்பார்கள். ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு பிரசவம், பிரசவ வேதனை. அப்படியாயின் இது எப்படிச் சாத்தியமாயிற்று. அதன் இரகசியம்தான் என்ன?
ஆசிரியரின் கடின உழைப்பு, இலட்சிய வேட்கை, அவரின் இல்லாளின் ஆதரவு, நண்பர்களின் ஒத்துழைப்பு, அவரைச் சார்ந்திருப்போரின் கடமை உணர்வு, செலவை ஈடுகட்டும் விளம்பரதாரர், கட்டாந்தரயைக் களனியாக்குவதுபோல் வெற்றுக்காகிதத்தை பத்திரிகை யாக்கும் எழுத்தாளர்கள் இவை அனைத்தையும் ஒருங்கிணத்து பிரசவிக்கும் ஆற்றல் மிகுந்த பிரதம ஆசிரியர் அத்தனைக்கும் மேலாக பத்திரிகையை நேசிக்கும் வாசகர்கள்.. இவைதான் அந்த இரகசியம்.
வெள்ளிவிழா மலர் முழுவதையும் படித்துப்பார்த்தேன். வெள்ளி விழாவினை வாழ்த்த பலர் கவிதை வரைந்திருந்தார்கள். ஆசிரியரின் சாதனையை வாழ்த்தியிருந்தார்கள், கனதியான கட்டுரைகள், சிந்திக்கத்தூண்டும் சிறுகதைகள், அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் இப்படி… இப்படி.. அனைத்துமே வெள்ளி விழா மலரினை உச்சம்தொட வைத்துள்ளன.
எனினும் என் நெஞ்சைத் தொட்ட ஒரு ஆக்கத்தினைச் சொல்லியே ஆகவேண்டும். ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் நம் தாய்நாட்டுப் போர்ச்சூழலால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கமாட்டோம். எனினும் நாட்டு விடுதலைக்காக எம் போராளிகள் கொடுத்தவிலை ஈடுஇணையற்றது. அதைப்பற்றி” ஒரு துப்பாக்கியின் கண்ணீர்” என்னும் ஓர் கதையை திரு மு. சிவலிங்கம் என்னும் எழுத்தாளர் எழுதியிருந்தார். 2010ஆம் ஆண்டுவரை தாயததில் தங்கியிருந்து கள நிலவரத்தினை நேரில் கண்டவன் என்றவகையில் அது என்னையும் மிகவும் பாதிக்கவே செய்தது.
புலிகளைபற்றி பேசவே பயப்படும் இன்றைய சூழலில் துணிந்து அச்சிறுகதையை எழுதிய திரு சிவலிங்கம் பாராட்டுதலுக்குரியவர். அது மட்டுமனறி தனது, பெயர், முகவரி, தொலைபேசி இலக்கத்தையும் வெளிப்படையாக சிறுகதைக்கு அடியில் குறிப்பிட்டிருந்தார். இலங்கை கொட்டகலையில் வசித்துவரும் அவருடன் தொடர்புகொண்டு பேசினேன். எனது வாழ்த்துக்களயும் தெரிவித்தேன்.
இவ்வாறான பல சிறப்புக்கள் கொண்ட வெள்ளிவிழா மலரைத் தந்த அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
கனடாவில் தழிழர் இருக்கும்வரை உதயனும் இருக்கும், அது தொடர்ந்து உயிர் வாழும்.
பொன். கந்தவேள்