(மன்னார் நிருபர்)
(24-08-2021)
தேசிய தடுப்பூசி வாரமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் இவ்வாரம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இது வரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(24) செவ்வாய்கிழமை காலை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவை இணைந்து மன்னார் எருக்கலம்பிட்டி, தாராபுரம், சாந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவருக்கும் அதே நேரம் கொரோனா முடக்க நிலை காரணமாக மன்னார் மாவட்டதில் தற்காலிகமாக வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் “அஸ்ராசெனிக்கா” தடுப்பூசியை பெற்றுக் கொண்டு கடமை நிமித்தம் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத சுகாதார துறையை சேர்ந்தவர்களுக்கும் இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.