மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்
(மன்னார் நிருபர்)
(25-08-2021)
மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசி 69.5 சதவீதத்தினர் மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ள போதும் சுமார் 5 ஆயிரத்து 626 பேர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
-மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (25) புதன் கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 59 ஆயிரத்து 770 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது ஊசி வழங்கப்பட்டுள்ளது. 2 வது தடுப்பூசி 49 ஆயிரத்து 844 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட இது வரை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாத்திரம் சுமார் 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசி 78 சதவீதமானவர்களும்,2 வது தடுப்பூசி 64 சதவீதமானவர்களும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசி 69.5 சதவீதத்தினர் மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் சுமார் 5 ஆயிரத்து 626 பேர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 1400 பேருடைய விவரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மாலை மேலும் மன்னார் மாவட்டத்தில் புதிதாக 66 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் தற்போது வரை 493 கொரோனா தொற்றாளர்களும்,இந்த வருடம் மாத்திரம் 1517 தொற்றாளர்களும்,மாவட்டத்தில் இது வரை 1534 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றானது இரு வகை அறிகுறிகளுடன் காணப்படுகின்றது.
ஒரு வகையானவர்களுக்கு உடல் நோவு,காய்ச்சல்,தலையிடி போன்றவையும், அடுத்த வகையானவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை நோவு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை தவிர கொரோனா தொற்றுடன் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றன.
இருமல்,கடுமையான காய்ச்சல்,தலையிடி, தொண்டை நோவு,சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றவர்கள் தற்போது வீடுகளில் வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு வைக்கப்படுகின்றவர்கள் ஓய்வு நிலையில் இருக்க வேண்டும் என்பதோடு,நீர் ஆகாரங்களை உற்கொள்ள வேண்டும்.ஏதாவது உடலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் உரிய சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் .என அவர் மேலும் தெரிவித்தார்.