மன்னார் நிருபர்
(25-08-2021)
நீண்ட நாட்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவில் வழங்க கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் இன்று புதன்கிழமை (8) காலை முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த மாதமும் தாங்கள் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இது வரை நிறை வேற்றப்படாதையும் கொரோனா காலப்பகுதியில் அர்பணிப்புடன் பணியாற்றும் தங்களுக்கு உரிய நேரத்தில் மேலதிக நேர கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை என்பதையும் சுட்டி காட்டி இன்று புதன்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
குறிப்பாக கடந்த வருடத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவே நீண்ட இழுபறியின் பின்னர் கிடைக்கப் பெற்றதாகவும் இவ்வருடத்தில் பல மாதங்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் எனவே விரைவில் மேலதிக நேர கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலதிக நேர கொடுப்பனவுகள் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொள்வதை தவிர தங்களால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.