உலகெங்கிலுமிருந்து விரிவரங்க நிகழ்நிலையில் 850 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் நடன நிகழ்வு உலக கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த நிகழ்வில் உலகின் பல நாடுகளிலிருந்தும் நடனக் கலைஞர்கள் பங்கெடுத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நடனக் கலைஞரான கலைமாமணி மதுரை இராமச்சந்திரன் முரளிதரனின் நெறியாள்கையின்கீழ் அண்மையில் இணையவழி ஊடாக இந்நடன நிகழ்வு கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. ஏற்கனவே பல கின்னஸ் சாதனைகளை மதுரை இராமச்சந்திரன் முரளிதரன் நிகழ்த்தியிருந்தார். கொவிட் நிதிக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் கொரோனா அசாதாரண காலகட்டத்தில் விரிவரங்க நிகழ்நிலை ஊடாக இந்தியாவைச் சேர்ந்த கலைமாமணி மதுரை இராமச்சந்திரன் முரளிதரன் நெறியாள்கையின் கீழ் பல நாடுகளிலுமிருந்து 850 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
அது உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் பதியப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வில் தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளரும், செயற்திட்ட தலைவருமான முனைவர் திருமதி நிசாந்தராகினி திருக்குமரனின் ஒருங்கிணைத்தலின் கீழ் இலங்கையிலிருந்து 67 கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர். கிழக்கிலங்கையிருந்து மாத்திரம் 45 கலைஞர்கள் பங்குபற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவைச் சேர்ந்த மாணவி செல்வி ஜெயகோபன் தக்சாளினி என்பவரும் பங்குபற்றி சாதனைச் சான்றிதழைப் பெற்று காரைதீவு மண்ணுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். எம்நாட்டின் சாதனைக் கலைஞர்களைப் பெருமையுடன் பலரும் பாராட்டி மகிழ்கிறார்கள்.