(26-08-2021)
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை சுகாதார செயற்பாடுகளுக்காக மாத்திரமே வழங்குவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அரசாங்கம் கூறும் கொரோனா நிதியத்துக்கு எமது பணத்தை ஒப்படைக்க மாட்டோம். ஏனெனில், அந்த நிதியத்திற்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் உள்ளது என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
நாட்டின் நெருக்கடி நிலையின் மத்தியில், அமைச்சர் ஒருவர் பருப்பு சாப்பிட முடியா விட்டால் பயறு சாப்பிடுமாறு கூறுகிறார். ஆனால், பருப்பை விட பயறு விலை அதிகம்.
எனவே, இவ்வாறான அமைச்சர்கள் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகப் பார்க்கின்றனர்.
எவ்வித அர்த்தமும் இல்லாமல் நக்கல், கேளிக்கைகளோடு பதிலளிக்கின்றனர் என்றார். அவர்கள் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.
இதே அமைச்சர் தான் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்வதை தடுப்பதற்காக தான் எரிபொருள் விலை அதிகரிப்பு எனக் கூறினார்.
மருந்து விலை அதிகரிப்புக்கும் பொருத்தமற்ற காரணங்களை சில அமைச்சர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த அமைச்சர்களின் மூளைகள் பழுதடைந்து விட்டதா தெரியவில்லை எனத் தெரிவித்த சரத் பொன்சேகா, இன்று நாட்டில் இருப்புகளும் இல்லை அதேபோல், நாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்தம் இருப்பில் இல்லை.
இவ்வாறு நாடு பின்னோக்கிச் செல்லும் போது, அரசாங்கம் தூங்கிக் கொண்டா இருக்கிறது என எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனக் கேட்டார்.