(26-08-2021)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் எவரிடமாவது உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்க்கு பெற்றுக் கொடுக்குமாறு திறந்த கோரிக்கை ஒன்றை மேற்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுத்து பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதனை தெரிவித்தார்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 46 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பதன் மூலம் இதன் வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதனால் விசாரணைகள் தொடர்பில் முழுமையான விபரங்களை கூற முடியவில்லை என்று பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.
இந்த தக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 311 சந்தேக நபர்கள் தடுத்து வைத்து அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸ்மா அதிபர் கூறினார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தெளிவின்மையால், சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் ,சந்தேக நபர்கள் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம். தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுள் புத்தி ஜீவிகள் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர்.இவர்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் நடத்திய தொடர் குண்டுத்தாக்குதல் குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. அது நீண்டநாள் திட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாகும். தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய பல தரப்புகள் இனம் காணப்பட்டுள்ளன. விசேட தராதரம் பார்க்காது நாட்டின் சட்டத்திற்கு அமைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டுமானால் இதற்கு அடிப்படையாக இருந்த அனைத்து தரப்புக்களையும் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஆரம்பத்தில் ஏற்பட்ட நிர்வாக ரீதியான குறைகளும், பொறுப்பற்ற பல சந்தர்ப்பங்களும் பதிவாகி இருப்பதாக பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
விசாரணை ஆழமாக மேற்கொள்ளப்படாமல் குறுகிய காலத்தில் அவற்றை நிறைவு செய்ய முயற்சிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மேலும் தெரிவித்தார்.