சிவா பரமேஸ்வரன் –மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை;
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
படம்: அன்னை, பாடல்: கவிஞர் கண்ணதாசன், பாடியவர்: ஜோ ப சந்திரபாபு
இந்த பாடலிலுள்ள வரிகள் அமரத்துவம் பெற்றவை. கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்கள் காலத்தை விஞ்சி நிற்பவை. அப்படியான ஒரு பாடல்தான் அன்னை திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல். உழைப்பு, திறமை, நேர்மை போன்ற பல நல்ல குணங்கள் ஒரு மனிதனிடம் நிரம்பியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் மேலான ஏதோ ஒன்று-அது இறைவனின் கொடை அல்லது அதிர்ஷ்டம். இதற்கும் மேலாக சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் அல்லது இதில் பல அம்சங்கள் இருந்தாலும் ஒருவரின் வெற்றி உறுதியானது அல்ல என்பதே கவிஞர் அந்த பாடலில் உணர்த்தியிருப்பார்.
ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதைக்கு `கூகிள் மேப்` உதவி செய்யாது. பயணிக்கும் பாதை எப்படியானது, அது எங்கு இட்டுச் செல்லும் என்று `கூகிள் ஆண்டவரால்` கூற முடியாது. அதிலும் குறிப்பாக அரசியல் வாழ்க்கைக்கு இது மிகவும் பொருந்தும். இதற்கு அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் விதிவிலக்கல்ல.
அவருக்குச் செலுத்தப்பட்ட அஞ்சலிகள் அவரது பெருமை மற்றும் பங்களிப்பை பறைசாற்றும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன்,சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன் மற்றும் திகாம்பரம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் போன்றவர்கள், சம்பிரதாய ரீதியில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க போன்றவர்களின் அஞ்சலியில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருந்தன.
மங்கள சமரவீரவிற்கு நாட்டின் பிரதமர் போன்ற உயர்ந்த பதவிக்கு வருவதற்கான தகுதிகள் இருந்தன என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர். அவரது பொதுவுடைமை கொள்கை நாட்டில் பரந்துபட்ட அளவிற்கு அவருக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அவர் `கிங்` ஆக முடியவில்லை என்றாலும் பல சந்தர்ப்பங்களில் `கிங் மேக்கராக` இருந்துள்ளார்.
அவரை ஓரிரு முறை நான் நேரில் சந்தித்த போதும், பல முறை தொலைபேசியில் பேசிய போதும் அவரிடம் தேசம் அனைவருக்கும் பொதுவானது, போர் மூலம் தீர்வை பெற்றுவிட முடியாது, பேச்சுவார்த்தை அவசியம், அரசு விட்டுக்கொடுப்புகளில் ஈடுபட வேண்டும், தமிழர்கள் தரப்பில் சில நியாயங்கள் உள்ளன என்று கூறியதை நான் நினைவுகூர்கிறேன்.எனினும் இலங்கை அரசியலில் அனைவரைப் போலவும் அவருக்கும் சில பின்னடைவுகள், அரசியல் வாழ்வில் சில கருப்புப் பக்கங்கள் இருந்தன. அரசியல் சூழல் மற்றும் நெருக்கடி காரணமாக ஒரு காலகட்டத்தில் அரசில் நிலையையொட்டி கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்தார். ஆனால் அதற்கு அரசு எனும் ஒரு தரப்பை மட்டுமே குறைசொல்ல முடியாது.
முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற கொடூரமான யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் பல சந்தர்ப்பங்களில் மிகவும் கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்து விட்டுக்கொடுக்காத தன்மையை முன்னெடுத்தார்கள். போர் முடிந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாகும் சூழலில் இன்றைக்கும் தமிழ் மக்களுக்கான நியாயம் கிடைக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்னும் தமது சொந்தங்களைத் தேடுகிறார்கள், பலரது காணிகள் இன்னும் திருப்பியளிக்கப்படவில்லை, எங்கு இராணுவம் எதிலும் இராணுவம் எனும் அச்சத்தில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களின் துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு ஒரு தரப்பின் மீது மட்டுமே பழி போடுவது நேர்மையான செயலாக இருக்காது. பல கல்விமான்கள், அரசியல் அவதானிகள், பொருளாதார வல்லுநர்கள், இராணுவ ஆய்வாளர்கள், பன்னாட்டு இராஜதந்திரிகள் போன்றோர் ஒரு விடயத்தில் உடன்படுகின்றனர். அது, சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் ஆர்வமாகவும் தீவிரமாகவும் இருந்தார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் எட்டப்பட வேண்டும் என்பதில் சந்திரிகா பண்டாரநாயக்க ஆரம்பத்தில் எடுத்த முயற்சிகளை மறுக்க முடியாது. அதற்கு அவரது வலதுகரமாக இருந்து செயல்பட்டவர் மங்கள சமரவீர.
தமிழ் மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருப்பது யாழ்ப்பாண நூலக எரிப்பு. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு ஈனச்செயல். கலாச்சாரத்தின் மேன்மையை உணராத காடையர்கள் முன்னெடுத்த அயோக்கியத்தனம். நூல்களை அழித்துவிட்டால் சிங்கள பௌத்த பேரினவாதம் அச்சுறுத்தி நிலைநாட்டப்படும் என்று எண்ணிய கயவர்களின் செயல் அது. எனினும் அதை மீளக் கட்டமைக்க சந்திரிகாவின் ஆதரவுடன் மங்களவின் மனதில் உதித்த எண்ணமே `செங்கல்லும் புத்தகமும்`.
எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தைக் கட்டியெழுப்ப புலத்திலுள்ளோரும் புலம்பெயர்ந்தவர்களும் செங்கல்லும் புத்தகமுமாக அளிக்க முன்வரவேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார் மங்கள சமரவீர. அதாவது பெருமை மிகுந்த அந்த நூலகத்தை மீட்டும் கட்டுவதற்கு மக்கள் பொருளுதவி அல்லது புத்தகங்களை அளித்து உதவிட வேண்டும் என்றது அந்த திட்டம். அதில் கணிசமான முன்னேற்றமும் காணப்பட்டது என்று பலர் கூற நான் கேள்விப்பட்டுள்ளேன். அந்த திட்டத்தின் வெற்றியின் மூலம் இழந்த அவநம்பிக்கையை தமிழ் சிங்கள சமூகங்களுக்கு இடையே ஓரளவுக்கு கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையில் தான் உறுதியாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், அப்படியான நம்பிக்கை ஏற்பட இருதரப்பிலிருந்தும் எதிர்பார்க்கப்பட்ட இதிய சுத்தியுடன் கூடிய ஒத்துழைப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தமிழர் தரப்புக்கும் அதில் பங்குண்டு.
அதிகார பரவலாக்கலில் மங்கள மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது அந்த முயற்சியை புரிந்து கொள்ள காலத்தில் சற்று பின் நோக்கிச் செல்ல வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் அதை அறியாமல் இருக்கக் கூடும். சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ஐ டி என் தொலைக்காட்சியில் அதிகாரப் பரவலாக்கம், சமாதானம், நல்லுறவு தொடர்பான நிகழ்ச்சிகள் சான்றாக உள்ளன. ஐ டி என் நிகழ்ச்சிகளில் அவர் மிகவும் ஈடுபட்டிருந்தார் என்று பல மூத்த அரசியல் தலைவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
அந்த விவாதங்களில் மங்கள சமரவீர கூறிய சில கருத்துக்கள் தென்னிலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்தன. நாடு அனைத்து மக்களுமானது. அதை தமக்கு மட்டுமே உரியது என்று எந்த இன, மத, மொழியைச் சேர்ந்தவர்கள் கோர முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
“புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல, அதற்காக மக்கள் எல்லாம் புலிகளும் அல்ல. புலிகள் ஏன் உருவானார்கள் என்பதை நீங்கள் விளங்காதவரை யாராலும் இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது -இது தான் நீங்கள் விடும் பிழை“ என்று ஐ டி என் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கூறியதை மூத்த செய்தியாளர் ஒருவர் பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் நீலன் திருச்செல்வனின் கொலை பல முன்னெடுப்புகளைப் புரட்டி போட்டது. தேசிய அளவிலான விவாதத்தில் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் மற்றும் நீலன் திருச்செல்வன் ஆகியோரை பங்குபெற வைத்து அரசியல் தீர்வு குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற வைத்தது மங்கள சமரவீரவின் முன்னெடுப்பே என்பதை மறுக்க முடியாது.
இலங்கை ஒரு நாடு. அதில் இன, மத வேறுபாடு இருக்கக் கூடாது என்பதில் மங்கள சமரவீர உறுதியாக இருந்தார். அதை நோக்கிய ஒரு படியாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்த `வெண்தாமரை` இயக்கம்.
ஆனால் சமாதானம் மற்றும் நல்லுறவை முன்னெடுத்துச் செல்ல முயன்ற வேளையில், சில கொலைகள், விரும்பத்தாக சம்பவங்கள் அந்த முன்னெடுப்பை முறியடித்தன.
அவரது தந்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தாலும், அவரது அரசியல் வாழ்க்கை பெருமளவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பின்னிப் பிணைந்திருந்தது. சந்திரிக்கவுக்கு பிறகு மஹிந்த ராஜபக்ச பக்கம் நின்றார். பின்னர் போர் தொடர்பான நிலைப்பாட்டில் மஹிந்தவுடன் முரண்பட்டார். அடுத்து வந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியதில் அவருக்கு பெரும் பங்கு இருந்தது. ஸ்ரீலங்கா சுந்திர கட்சி மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்கவின் குடும்பத்துடன் நெருக்கத்தைப் பேணி வந்தார். பின்னர் அக்கட்சியின் போக்கு பிடிக்காமல் அரை மனதுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். ரணில் விக்ரமசிங்கவின் `சர்வாதிகார` அரசியல் பிடிக்காததால் ஐ தே க விலிருந்து விலகி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்க மக்கள் சக்தியில் இணைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிறகு அதிலிருந்தும் விலகிக் கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியிலும் பேரினவாதம் நிலவுகிறது, அதன் காரணமாகவே தேர்தலில் போட்டியிடவில்லை என்று அவர் கூறியதாக அவருக்கு நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் அந்த சமயத்தில் என்னிடம் கூறினார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆழமாக விளங்கிக் கொண்ட மிகச்சில அரசியல்வாதிகளில் மங்கள சமரவீரவும் ஒருவர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அவர் கொள்கையாக இருந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வன் அரசியல் தீர்வு குறித்து முன்வைத்த பிரேரணையில் மங்கள சமரவீரவுக்கு மறைமுக பங்கிருந்தது. அந்த தீர்வுத்திட்டம் தமிழர்களுக்கு முழுமையாக ஏற்புடையதாக இருக்காவிட்டாலும், அதுவொரு தொடக்க புள்ளியாக இருந்திருக்கும் என்று நார்வேயின் இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதி எரிக் சொல்ஹைம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மங்கள சமரவீர இலங்கை அரசியலில் சுமார் 30 ஆண்டுகள் முக்கியமான ஒரு ஆளுமையாக இருந்தார். புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார். பொதுவுடைமை, அதிகாரப் பரவலாக்கம், தேசம் அனைவருக்குமானது, பேச்சு வார்த்தையின் மூலம் சமாதானத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அனைத்து அரசியல்வாதிகளைப் போல அவர் மீது விமர்சனங்கள்இருந்தன. சில தமிழ் தரப்புக்கள் அவரும் ஒரு பேரினவாதியே என்று குற்றச்சாட்டுக்களை வைத்தன.
எவ்வாறாயினும் அவர் இலங்கையில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகவும், தவறவிட்ட ஒரு ஆளுமையாகவும் இருந்தார் என்பது உண்மை. ஒருவேளை அவர் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக வந்திருந்தால் இலங்கை வேறு பாதையில் பயணித்திருக்கக் கூடும்.