“இலங்கை அரசாங்கத்திற்கு நாட்டைப் பாதுகாப்பதற்கான கூட்டுத்திட்டங்கள் எதுவும் இல்லை. அதில் கவனம் செலத்துவதற்குப் பதிலாக அரசின் தலைவர்களும் அமைச்சர்களும் அன்றைய நாளை எப்படி கடத்துவது என்பது பற்றியும் அத்தோடு செய்திகளில் தான் எவ்வாறு வருவது என்பது பற்றியே கவனம் செலுத்துகின்றார்கள்”
இவ்வாறு தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்பட்ட பின்னரே நாட்டின் பொருளாதாரம் முன்னரிலும் பார்க்க வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தனது அறிக்கையில் பின்வருமாறும் தெரிவித்துள்ளார்
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதியை அரசாங்கம் பறிமுதல் செய்து, பின்னர் உதவியற்ற மக்களை குறிவைத்து மற்றொரு சுமையை சுமத்தியுள்ளது. அதன் காரணமாகவே இதுவரை கொடுக்கப்பட்ட 5.000 ரூபா நிவாரண கொடுப்பனவுக்கு பதிலாக 1998 ரூபாவிற்கு கற்பனையான சலுகைப் பொதியொன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரழிவு தருணத்தில் நிவாரணத்திற்கு பதிலாக மக்கள் மீது அசௌகரியங்களைத் திணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்ட பிறகு, நாட்டிற்கு சௌபாக்கியத்தைக் கொண்டுவருவதாக பெருமை பேசினார்கள். பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாதவாறு உயர்ந்துள்ளதோடு, பொருளாதாரம் இருந்ததை விட மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னர் ஒரு கிலோ சீனியின் விலை 160 ரூபாவாக இருந்ததோடு, ஒரு வாரத்திற்குள் அது 50 ரூபாவால் அதிகரித்துள்ளது. விலைகள் மீதான கட்டுப்பாட்டை அரசாங்கம் எவ்வாறு இழந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. சந்தையில் பால் மாவிற்கு அசாதாரண பற்றாக்குறை உள்ளதை காணக்கிடைப்பதோடு எரிபொருள், எரிவாயு, அரிசி, மருந்துகள் மற்றும் பாண் உள்ளிட்ட பல நுகர்வோர் பொருட்களின் விலைகள் அசாதாரணமாக உயர்ந்துள்ளன.
நாட்டில் அதிகப்படியான மருந்துகள் இருப்பதாக பொய் சொல்லும் அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் தூதுவர்கள் மூலம் மருந்துகளை கோருகின்றனர். நாட்டை கட்டியொழுப்புவது எப்படி போனாலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளைக்கூட அரசாங்கத்தால் வழங்க முடியாது என்பதுவே இதன் யதார்த்தமாகும். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனைக்குட்படுத்தும் நபர்களில் தொற்றாளர்களாக இனம்காணப்படும் விகிதம் 15.8 வீதத்தைத் தாண்டியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகிறது. நிலைமை மிகவும் ஆபத்தானது என்பது அவர்களின் கணிப்பு என்றும் கூறுகிறது.
இதற்கிடையில், மருந்துகள்,கொள்வனவு மற்றும் பதிவு போன்ற தகவல்கள் அடங்கிய தேசிய ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் கிளவுட் எனப்படும் தரவு பாதுகாப்புப் பிரிவில் சேமிக்கப்பட்ட தகவல்களை அழிப்பது ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வாக ஆகுவதோடு, இது ஆபத்தான ஓர் விடயமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்தத் தரவை அழிப்பதற்குப் பின்னால் ஒரு மோசடி வியாபார கும்பல் இருக்கிறதா என்று துல்லியமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அன்றாட வாழ்க்கை குறித்தும் எதிர்கால வாழ்க்கை குறித்ததுமான மக்களின் நம்பிக்கைகளின் எதிர்பார்ப்பு கடுமையாக சிதைந்துள்ள ஓர் நிலையில், சரியான திட்டம் மற்றும் இலக்கு இல்லாததால் அரசாங்கமும் விரக்தியடைந்துள்ளது.
இலங்கையைப் பாதுகாப்பதற்கான கூட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அன்றைய நாளை கடத்துவதற்காக நாளுக்கு நாள் அரசாங்கம் தலைப்புச் செய்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தீவிரமாக அவதானத்தைச் செலுத்தியுள்ளதோடு, சரிந்துள்ள இந்த நிலைமையிலும்,சரிந்து வரும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.