மன்னார் நிருபர்
(29-08-2021)
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை(28) மாலை ஒரு தொகுதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது தம்பனைக் குளம் பகுதியில் வைத்து 189 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதான வீதியூடாக மதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை பாதுகாப்பு தரப்பினர் இடை மறிக்க முற்பட்ட போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்த நிலையில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து தம்பனைக்குளம் பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதன் போதே வாகனத்தில் பொதி செய்யப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்ட குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளும் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.