காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன விடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
(30-08-2021)
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்….
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்…..
எமது உறவுகள் மீண்டும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் நாம் எமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
எமது உறவுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சென்று அவர்களின் பெயர்களை மாற்றி வாழ்வதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
அப்படி இருந்தால் அவர் ஆதாரபூர்வமாக அதை நிரூபிக்க வேண்டும். அல்லது எமக்கு முன்னால் அந்த உறவுகளை கொண்டுவந்து நிறுத்தினால் நாங்கள் இந்த போராட்டத்தை செய்யமாட்டோம்.
அவர் கூறுவது பொய்யான கருத்து. எமது போராட்டத்தை மழுங்கடிப்பதற்காகவும் சர்வதேசத்தினை ஏமாற்று வதற்காகவும் அவர் இப்படி சொல்கின்றார்.
எனவே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். எமக்கு நீதி கிடைப்பதற்காக அனைத்து தமிழ் உறவுகளும் குரல் கொடுக்க வேண்டும். எமக்காக புலம்பெயர்நாடுகளில் போராட்டங்களை மேற்கொள்ளும் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாம் குறுகிய காலங்களில் இறந்து விடுவோம்., ஆனால் நீதியில்லாமல் இறக்கக்கூடாது. அதற்கு முன்பாக எமது உறவுகளுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்றார்.