மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின்
3-ஆவது நாவண்மை நிகழ்ச்சி
நக்கீரன்
கோலாலம்பூர், ஆக. 29:
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக கனடாவின் பிரபல உதயன் வார-இணைய இதழ் மாதந்தோறும் நிறைவு ஞாயிற்றுக்கிழமையில் நாவண்மை நிகழ்ச்சியை நடத்திவருகின்றது. அந்த வகையில் மூன்றாவது நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 29-இல் ஏராளமான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பேசுகின்ற மாணவர்கள் ஐவர்தான் என்றாலும் அவர்களை பேசுவதற்காகத் தயார்ப்படுத்தும் வகுப்பு ஆசிரியர், துணை நல்கும் ஏனைய ஆசிரியப் பெருமக்கள், தலைமை ஆசிரியர், மாணவர்தம் பெற்றோர் மற்றும் நண்பர்கள், நிகழ்ச்சியை வழிநடத்தும் நெறியாளர்கள், மலேசியாவில் இணையத்தின்வழி இதை ஏற்பாடு செய்யும் பாடகர் ரவாங் ராஜா இணையர், உதயனின் கனடிய வாசகர்கள், இந்த நிகழ்ச்சிக்குகளுக்கு ஆதரவாளர்களாக விளங்கும் கனடாவின் வர்த்தக-சமூக நல ஆர்வலர்கள், இவர்கள் அத்துணைப் பேரையும் ஒருங்கிணைக்கும் உதயன் இதழின் பிரதம ஆசிரியர் நாகமணி லோகேந்திர லிங்கம் என நூற்றுக் கணக்கானோரை இணைக்கும் அறிவார்ந்த தளமாக உதயன் இதழ் விளங்குகின்றது.
2021 ஜூன் திங்கள் 27, கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நிகழ்ச்சியில் 46 பேர் பங்குபெற்றனர்; ஜூலை 25-இல் நிகழ்ந்த இரண்டாவது நிகழ்ச்சியில் 76 அன்பர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்பொழுது நடைபெற்ற மூன்றாவது நிகழ்ச்சியில் 99 பேர் கலந்து கொண்டனர்.
இம்மூன்றாவது நிகழ்ச்சியை வழக்கம்போல நா. லோகேந்திர லிங்கம் தலைமை உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் இளம் மாணவர்களைக் காண்பதும் அவர்களின் பிஞ்சு மொழிகளையும் அவர்கள் ஆற்றும் ஊக்குமிகு உரையைக் கேட்பதும் மிக்க மகிழ்ச்சிதரக் கூடியதாக இருக்கிறது என்றார்.
மலேசியாவில் மாலை 7:00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கினாலும் கனடாவில் காலை 7:00 மணி; இருந்தபோதும் காலைப் பொழுதில் தமிழ்ப் பிள்ளைகளைக் காணும்போதில் உற்சாகம் பிறக்கிறது. அதலினும் மேலாக, நிகழ்ச்சி தொடங்கும் முன்னம், இசையும் கலையும் இணைந்த தமிழ் வணக்கப் பாடலைக் கேட்டு இன்புறுவது இன்னும் உற்சாகம் தருகிறது என்றார்.
ஆசிரியை சரளா சுப்பிரமணியன் வழிநடத்திய இந்த நிகழ்ச்சியில் முதல் மாணாக்கராக நந்தியா பசுபதி பேசினார். பேராக் மாநிலம் சுகமானாத் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவியான இவர், பேச்சாற்றலில் சிறந்து விளங்க விரும்புவதாகவும் அதன்வழி எதிர்காலத்தில் கடல் கடந்து பல நாடுகளுக்கும் செல்ல விரும்புவதாகவும் தன் உரையில் குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய கோமதி சேகரன் என்னும் மாணவி, தான் மருத்துவராக விரும்புவதாகவும் அதன் மூலம் பொருளீட்டுவதனிலும் மேலாக நலிந்த மக்களை நாடி சமூகக் கடமை ஆற்ற விரும்புவதாகவும் ஒரு மருத்துவரைப் போல காட்சி தந்து பேசினார். நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநிலத்தின் கடற்கரைப் பகுதியான தும்போக் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவி இவர்.
மூன்றாவதாக, பகாங் மாநிலம், ரவூப் பட்டணத்தைச் சேர்ந்த ச்செரோ தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவியான ஹர்ஷினி சரவணன் பேசினார். எதிர்காலத்தில் ஓர் அறிவியல் மேதையாக உருவாக வேண்டும் என்பது என் கனவு என்றார் இவர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட இருவரில் ஒருவரும் கனடாவில் வர்த்தகப் பிரமுகருமான கணேசன் சுகுமார் அடுத்ததாக உரையாற்றினார். ஏழை மாணவர்களுக்கு, குறிப்பாக மருத்துவத் துறை மாணவர்களுக்கு உதவுவதை தொண்டறமாக புரிந்துவரும் இவர், மலேசியாவைச் சேர்ந்த மூன்று மாணவியர் எழுச்சியுடன் பேசியதைக் கண்டு வியந்ததாகக் குறிப்பிட்டார். முன்னதாக, இவரை உதயன் இதழ் நிறுவனருமான என்.லோகேந்திர லிங்கம் அறிமுகம் செய்து வைத்தார்.
நான்காவதாக கெடா மாநிலம், கோல கெட்டில் பிஞ்சோல் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவியான லோகாஷினி பிரபாகரன் பேசினார். இந்த மாணவி, கட்டட வடிவமைப்பாளர் ஆவது தன் எதிர்கால இலக்கு என்றார்.
நெகிரி செம்பிலான் மாநிலம் பகாவ் தோட்டத்தைச் சேர்ந்த கீர்த்திஷா விஜய் ஆனந்த், தொழில் அதிபர் ஆவதும் பொருள் தேடி தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தை முன்னெடுக்கும் விதமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை தொடங்குவதும் தன் எதிர்கால இலட்சியம் என்றார்.
மாணவர்கள் பேசி முடித்ததும் இரண்டாவது சிறப்பு பிரமுகரான விசு கணபதி பிள்ளை பேசினார். புலம் பெயர்ந்த நிலையில் மலேசிய இளம் மாணவியர் ஆர்வத்துடன் பேசி தமிழ் வளர்ப்பது ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் இளம்வயது முனைப்பையும் அவர்களுக்கு ஆசிரியர்கள் துணை நிற்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். கனடவாழ் தமிழ்ச் சமூகத்தில் மிகவும் அறியப்படும் இவரையும் உதயன் ஆசிரியர் அறிமுகம் செய்தார்.
தன மேராத் தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் கோவிந்தசாமியின் நன்றி உரையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவுற்றது.