சைவசமயத்தின் சின்னமாக விளங்கும் நந்திக் கொடிகளை இந்து மக்களுக்கும், இந்து மத நிறுவனங்களுக்கும், ஆலயங்கள் மற்றும் பாடசாலை என்பவைகளுக்கும் இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பான கைங்கரியத்தை இவர், ஒரு தனிமனித முயற்சியாக கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறார்
இலங்கையில் பிரபல தொழிலதிபராக விளங்கியவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட சி.த. சின்னத்துரை. ‘சிந்தனைச் சிற்பச் செல்வர்’ என சிறப்பித்துச் சொல்லப்படும் இவர், கொழும்பில் ‘லீலா குறூப்’ என்ற பெயரில் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்ததுடன், முதன்முதலாக ‘லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர்’ என்ற பெயரில் சித்திர நாட்காட்டியை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். இதற்கும் மேலாக சமய பொதுநலப் பணிகளிலும் பெரிதும் ஈடுபட்டு வந்தார். இவரது ஒன்பது ஆண் பிள்ளைகளுள் எட்டாவது புதல்வர்தான் விடைக்கொடிச் செல்வர் தனபாலா.
தகப்பனாரால் தோற்றுவிக்கப்பட்ட வர்த்தக நிறுவனத்தில் இன்றும் இவர், பணிப்பாளர்களுள் ஒருவராக செயற்பட்டு சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
தனபாலா 1970ஆம் ஆண்டு முதல், அதாவது தனது பத்தொன்பதாவது வயதிலிருந்தே சமய மற்றும் பொதுநல நிறுவனங்களுடன் சாதாரண உறுப்பினராக இணைந்து செயலாற்றி வந்தார். கதிர்காமம் யாத்திரிகர் தொண்டர் சபை, அகில இலங்கை இந்து மாமன்றம் என்பனவற்றின் உபதலைவர் பதவிக்கும், கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம், கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய திருப்பணிச் சபை என்பனவற்றின் தலைவர் பதவிக்கும் தெரிவு செய்யப்பட்டு பணியாற்றினார்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை தலைவராகவும், உலக சைவப் பேரவை (இலங்கைக் கிளை), விவேகானந்த சபை (கொழும்பு), திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபை என்பனவற்றின் உபதலைவராகவும், சைவநெறிக் கழகத்தின் காப்பாளராகவும், இந்து வித்தியா விருத்திச் சங்கம், இந்து கலாசார நிதியம் என்பனவற்றின் ஆளுநர் சபை உறுப்பினராகவும், மனிதநேய நிதியம், கொழும்பு சைவமுன்னேற்றச் சங்கம், கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை என்பனவற்றின் தர்மகர்த்தாவாகவும் தற்போது பதவி வகித்து வருகின்றார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமானவர்களுள் இவர் ஒருவர். 1980ஆம் ஆண்டு அகில இலங்கை இந்து மாமன்ற முகாமைப் பேரவையில் இணைந்து உப தலைவராகத் தெரிவானார். 1990ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்து மாமன்ற தலைமையகக் கட்டடப் பணிகள் மீளவும் ஆரம்பமான காலத்தில் மாமன்ற நிதிக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். அதன் பின் மாமன்ற கட்டடக் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1996 பிற்பகுதியில் மாமன்ற தலைமையகக் கட்டடம் முழுமை பெற்று வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. மாமன்ற சமூக நலன் குழுத் தலைவராக பணியாற்றி வந்த வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளையின் மறைவுக்குப் பின், புதிய தலைவராக சி.தனபாலா தெரிவு செய்யப்பட்டார். போர்க்காலச் சூழ்நிலைகள், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டும் மற்றும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்கும் வசதிகளுடன் சேர்ந்த இலவச விடுதியொன்றை இரத்மலானையில் அமைப்பதற்காக இந்து மாமன்றத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த செயற்திட்டம், தனபாலா தலைமையிலான சமூக நலன் குழுவின் ஒத்துழைப்பினால் வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்டது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும் இந்து மாமன்றத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கையளிப்பதற்காக அமைக்கப்பட்ட மாமன்றக் குழுவுக்கு தனபாலா தலைமை தாங்கி செயற்பட்டிருக்கிறார்.
போர் முடிவடைந்த நிலையில் வன்னி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள், இந்துமத குருமார்கள், ஆதரவற்ற முதியோர்கள் என்போரை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் உட்பட ஏனைய உதவிகளை வழங்குவதிலும், அவர்களது மருத்துவ தேவைகளை நிறைவேற்றி வைப்பதிலும் இந்து மாமன்றம் மேற்கொண்டிருந்த முயற்சிகளுக்கும் தனபாலா வழங்கிய ஒத்துழைப்புகள் ஏராளம்.
பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கம், தனது 40 வருட நிறைவையொட்டி 2017ஆம் ஆண்டு இலங்கையில் வசதி குறைந்த 40 தம்பதியினருக்கு பெருந்தொகைப் பணத்தில் திருமணச் சடங்கை நிறைவேற்றி வைத்த பெரும் கைங்கரியம் அகில இலங்கை இந்து மாமன்ற சமூகநலன் குழுவின் ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளப்பட்டபோது, இதற்கான சகல கருமங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றி வைப்பதில் மாமன்ற சமூகநலன் குழுத்தலைவர் என்ற வகையில் தனபாலா ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து வழங்கிய பங்களிப்பு பலராலும் போற்றப்பட்டது. இவர் இன்றும் இந்து மாமன்ற சமூகநலன் குழுவின் தலைவராகவிருந்து, மாமன்றப் பணிகளுக்கு பெரிதும் உதவிக் கொண்டிருக்கிறார்.
சைவசமயத்தின் சின்னமாக விளங்கும் நந்திக் கொடிகளை இந்து மக்களுக்கும், இந்து மத நிறுவனங்களுக்கும், ஆலயங்கள் மற்றும் பாடசாலை என்பவைகளுக்கும் இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பான கைங்கரியத்தை இவர், ஒரு தனிமனித முயற்சியாக கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறார்.
இவர் நந்திக்கொடிகளை மட்டும் வழங்குவதுடன் நின்றுவிடாது. நந்திக்கொடிகள் சம்பந்தமாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ள கட்டுரைகளைத் தொகுத்து ‘நந்திக்கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்’ என்ற பெயரில் நூலொன்றை 2008ஆம் ஆண்டிலும், ‘நந்திக்கொடி ஏற்றீர்! கொடிக்கவி பாடீர்!’ என்ற பெயரில் 2013ஆம் ஆண்டில் இன்னொரு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.
நந்திக் கொடிகளை வழங்கிவரும் இவரது நற்பணிகளைப் போற்றும் வகையில் இந்தியா பேரூர் ஆதீனம் ‘விடைக்கொடிச்செல்வர்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. உள்நாட்டு, வெளிநாட்டு இந்துமத நிறுவனங்களும் வெவ்வேறு பட்டங்களையும், விருதுகளையும் இவருக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பழகுவதற்கு இனியவர். எந்தவொரு பொதுநலக் கருமத்தை ஆரம்பித்தாலும், அதனை தீவிரமாக செயற்படுத்தி, வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கும் வல்லமை உள்ளவர். விடைக்கொடிச் செல்வர் கலாநிதி தனபாலா இன்று (30.08.2021) அகவை எழுபதை நிறைவு செய்கிறார். இவர் சுகநலத்துடன் வாழ்ந்து சமய, சமூகநலப் பணிகளை மேலும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் தொடருவதற்கு பிரார்த்தித்து வாழ்த்துவோம்!
– அ. கனகசூரியர்…