சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
“தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்“-மகாகவி சுப்பிரமணிய பாரதி
இந்த வாரம் இருமுறை மகாகவி எனது நினைவில் வந்து போனார். முதலாவது ஒரு ஃபேஸ்புக் பதிவு. இலங்கையின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான முருகன் சிவலிங்கம் அவரது பக்கத்தில் செய்த பதிவு.
“பாரதி பெயரில் முதல் பள்ளிக்கூடம்…!
பாரதி ராமசாமி-பதுளை
இப்படித் தலைப்பிட்டு தான் ஐயா முருகன் சிவலிங்கம் அந்த பதிவை செய்திருந்தார். அதில் பாரதி ராமசாமி அண்ணர் சுகம் குறைவாக…மட்டக்குளியில் அவரது உறவினர் வீட்டில் இருக்கிறார். இந்தத் தகவலை நேற்று நண்பர் திரு மு. நித்தியானந்தனிடம் (லண்டன்) உரையாடிக் கொண்டிருக்கும் போது கூறினேன். அவர் அதிர்ந்து போனார் என்று எழுதி “ பாரதி பெயரில் தமிழ் நாட்டில் கூட பள்ளிக்கூடம் உருவாகாத காலத்தில், இலங்கையில் முதல் முதலாக 1957 ம் ஆண்டிலேயே பாரதி பெயரில் பதுளையில் பள்ளிக்கூடம் கட்டியவராச்சே…! என்று லண்டனிலிருக்கும் எழுத்தாளர் மு.நித்தியானந்தன் உணர்ச்சிவசப்பட்டு போனார் என்று குறிப்பிட்டிருந்தார். அவரை நான் கண்டதில்லை, எனினும் தமிழர் என்ற வகையில் அவரை நெஞ்சார்ந்து பாராட்ட வேண்டும்.
பாரதி குறித்து இந்த வாரம் வந்த அடுத்த நினைவு அவரது மிகவும் பிரபலமான வரிகளில் ஒன்றான “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்“. தனியொரு மனிதனுக்கு உணவு அளிக்க முடியவில்லை என்றால் உலகத்தை அழிப்பதில் தவறில்லை என்கிற புரட்சிகரமான அந்தக் கருத்தை அவர் வெளியிட்டு நூறாண்டுகளுக்கு மேலாகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய சம்பவங்கள் ஏராளம் உண்டு. அவ்வகையில் தமிழகத்தில் ஆங்கிலேய கலெக்டர் (மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட அரசாங்க அதிபர்) ராபர்ட் வில்லியம் ஆஷ் `துரை` திருநெல்வேலிக்கு அருகிலுள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு முக்கிய சம்பவமாகக் கருதப்படுகிறது. அவரைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்த நிலையில், வழக்கு விசாரணையில் நீலகண்டன் ( நீலகண்ட ஐயர்-பின்னாளில் நீலகண்ட பிரம்மச்சாரி) முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வனத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த வாஞ்சிநாதனிடம் இவர் ஒரு மான் தோல் கேட்டு கடிதம் எழுதியதாகவும் அதன் அடிப்படையில் நீலகண்ட பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனை விதித்தது. பின்னர் பொதுவுடைமை கட்சியின் ஒரு முன்னோடியான `சிந்தனைச் சிற்பி` சிங்காரவேலருடன் இணைந்து செயலாற்றியதற்காக அவருக்குபத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சரி, இதில் பாரதியின் அமரத்துவம் வாய்ந்த வரிகளுக்கு என்ன தொடர்பு ?
ஆஷ் துரை கொலை வழக்கில் கடூழிய சிறைவாசம் காரணமாக நீலகண்டரின் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு புதுச்சேரியில் இருந்த பாரதியை சந்திக்கச் சென்றார் நீலகண்ட பிரம்மச்சாரி. அவரை அடையாளம் காண முடியாத முண்டாசுக் கவிஞன், “நீர் யார்“? என்று கேட்க
“நான் நீலகண்ட பிரம்மச்சாரி“
……அதிர்ந்து போனார் பாரதி. அவரைக் கட்டித் தழுவி பேச ஆரம்பித்தவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது!
“சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகின்றன-உணவு கிடைக்குமா?“ என்று நீலகண்டர் கூறக் கேட்ட பாரதியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. தன்னை நாடி வந்த ஒரு சக போராளிக்கு தன்னால் உணவளிக்க முடியாத நிலையைக் கண்டு மிகவும் மனம் வருந்திய பாரதியார்
“இனியொரு விதி செய்வோம்-அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்துவிடுவோம்“
என்ற பத்தியை, “பாரத சமுதாயம் வாழ்கவே“ எனும் தலைப்பிலான கவிதையில் எழுதினார் என்று பாரதி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் தற்போது நிலவும் உணவுத் தட்டுப்பாட்டை காணும் போது பாரதியின் இந்த வரிகள் நினைவில் வருவதை தவிர்க்க இயலவில்லை. ராஜபக்சக்கள் ஆட்சியில் மக்களின் துயரங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை மறுக்க முடியாது. அதற்கு அரச நிர்வாகத்தின் தோல்வி, எங்கும் எதிலும் இராணுவம், நாடு முற்றாகச் சீனாவிடம் அடமானம் வைக்கப்பட்டது போன்ற காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பெருந்தொற்றும் காரணமாக அமைந்துவிட்டது.
இரண்டாம் ராஜபக்ச ஆட்சியில் தொடர்ச்சியாக பொருளாதார சரிவுகள் கண்கூடாகத் தெரிகின்றன. எவ்விதமான முன்னேற்பாடுகளும் இன்றி தற்சார்பு பொருளாதரம் என்று கூறி மக்களின் அன்றாட பாவனைப் பொருட்களான மஞ்சள், சீனி, மிளகாய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டது. அந்த தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு அரசு எவ்விதமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பது உயர்ந்த சிந்தனை தான்; ஆனால் எண்ணம் என்பது வேறு யதார்த்தம் என்பது வேறு: இந்த வேறுபாட்டை இலங்கை அரசு உணரவில்லை என்பதே இங்கு உண்மை. உதாரணமாக இலங்கையில் மஞ்சள் பயன்பாடு எவ்வளவு நாட்டில் உற்பத்தி எவ்வளவு என்பது குறித்த தரவுகளை அரசு வெளியிட்டதாக நினைவில்லை. மற்ற பொருட்களின் இருப்பு மற்றும் தேவையும் இதே நிலைதான்.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் படி, “ அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளை“ பிரகடனப்படுத்தினார்.
நாட்டின் உணவு தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்தச் சட்டத்தின்படி-அவசரக்கால ஒழுங்குவிதிகளை பிரகடனப்படுத்தியதே கேள்விகளை எழுப்பியது. மூத்த சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளும் இதை கண்டித்துள்ளனர். சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள்-நெல், அரிசி, சீனி மற்றும் இதர அன்றாட பாவனைப் பொருட்கள்- வழங்கல் ஏற்பாடு நடவடிக்கைகளை இராணுவத்திடம் அளித்துள்ளதும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிநாதம் என்பது நாட்டில், “ உணவு நெருக்கடி“ நிலவுகிறது என்பதே. இதில் மற்றொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். இந்த அதிவிசேஷ வர்த்தமானி அறிவித்தல் மேலும் ஒரு செய்தியை வெளிப்படுத்துகிறது; அதாவது பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்படி நாட்டில் அதிகாரபூர்வமாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் ஜனாதிபதிக்கு பரந்துபட்ட அதிகாரங்களை அளிக்கிறது. இதன் கீழ் ஆட்களை வகை தொகையின்றி தடுத்து வைக்க முடியும், பொதுநலன் என்று கூறி நினைத்ததைச் செய்ய முடியும்.
அரச தரப்பில் உணவு பதுக்கப்படுவதே நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் யார் பதுக்கலில் ஈடுபடுகின்றனர்? சிங்களப் பேரினவாதிகள் கொழும்பு மொத்த விற்பனை சந்தைகள் பெரும்பாலும் தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் படியில் உள்ளது அதுவே உணவு தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று சமூக ஊடகங்களில் புலம்புகின்றனர். அது உண்மையென்றால் அரசு நடவடிக்கை எடுத்து அதைப் பறிமுதல் செய்து பொதுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது? நீண்டகாலம் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்தால் அவை வீணாகி பாவனைக்கு உதவாமல் ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.
பொருளாதார வல்லுநர்கள் இலங்கையில் நிலவும் உணவு தட்டுப்பாட்டுப் பிரச்சனைக்கு மூன்று முக்கிய காரணங்களை முன்வைக்கின்றனர். முதல் காரணம், கொரோனா பெருந்தொற்றினால் பன்னாட்டளவில் ஏற்பட்டுள்ள வர்த்தக சிக்கல் மற்றும் சீர்கேடு. பொது முடக்கம், விவசாய பொருட்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பொருட்களை எடுத்துச் செல்வது, விமான போக்குவரத்துப் பிரச்சனைகள். இவை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் வரத்து குறைந்து போனது. ஆனால் இதை காட்டிலும் ராஜபக்ச ஆட்சியில் அதிகாரிகளும் இராணுவத்தினரும் எந்த நிலைமையும் சரியாகக் கையாளாததும், அனைத்தும் எமக்குத் தெரியும் எனும் மனப்பான்மையில் செயற்பட்ட விதம் பிரச்சனைக்கு மிக முக்கியமானதொரு காரணம்.
இரண்டாவது முக்கிய காரணம் நாட்டின் பொருளாதார நிலை. மிகவும் மோசமான நிர்வாகம் காரணமாக நாட்டின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் இலங்கைக்கு கடன் கொடுக்க முன்வருவதில்லை. மத்திய வங்கியின் கையிலிருந்த அந்நிய செலாவணி முற்றாக காலியாகும் நிலையிலுள்ளது. வங்கதேசம் போன்ற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளியது. கடன் வாங்குவது ஒரு நாணயத்தில் வட்டியைக் கொடுப்பது மற்றொரு நாணயத்தில்என்கிற நிலையில் நாடு உள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து உணவு இறக்குமதியைச் செய்ய முடியாத நிலையில் நாடு உள்ளது என்பதே உண்மை.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் அதிபர் முகமது புகாரி கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். “ நாட்டில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய போதிய பணமில்லை, எனவே விவசாயிகள் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும்“ என்ற அவரது அறைகூவல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதைச் சமாளிக்க அவர் இன்னும் படாதபாடுபட்டு வருகிறார்.
மூன்றாவது- நாட்டில் நிலைமை- அரசியல் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதாகும். எனவே அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்படு என்று சொல்லி நெருக்கடி நிலையை மேலும் இறுக்குவதற்காக உண்மையான தட்டுப்பாடுகள் பூதாகரமாகப் பெருக்கி காட்டப்பட்டுள்ளது எனும் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
பல நாடுகளில் உணவுப் பற்றாக்குறையே பெரும் கிளர்ச்சிகளுக்கு வித்திட்டுள்ளது என்கிற அரசியல் வரலாற்றை இலங்கை ஆட்சியாளர்கள் அறிந்து கொள்வது அவர்களுக்கும் நாட்டிற்கும் நல்லது.