“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண. எனது கடந்த வாரக் கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.
“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும். இலங்கையை பாதுகாக்க வேண்டும் என நாங்கள் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் பெருந்தொற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ சுகாதார நிபுணர்கள் தலைமை தாங்க வேண்டும் என நாங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றோம். அரசாங்கம் உணர்வு பூர்வமாக இருக்காததால் மருத்துவ நிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல் போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமயப்படுத்தி வருகிறது. ஒரு பெரும் தொற்று நோய் காலத்தில் நாட்டை அதிகம் ராணுவமயப்படுத்திய ஓர் அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் காணப்படுகிறது. அது மட்டுமில்ல ஒரு பெரும் தொற்றுநோய் காலத்தில் மையத்தில் அதிகம் அதிகாரங்களை குவித்த ஒரு நாடாகவும் இலங்கைத் தீவு காணப்படுகிறது.
அண்மையில் பைசர் தடுப்பூசியை கையாள்வதில் சிவில் தரப்புக்கள் போதிய அளவிற்கு வினைத்திறனுடன் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கொழும்பு லேடி ரிச்வே மருத்துவமனையில் மிக முக்கியமான பிரமுகர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ரகசியமாக விநியோகிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்ப்பகுதிகளில் மன்னாரில் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.தடுப்பூசிகளை பெறுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தும் சிலர் மன்னாருக்கு சென்றதாக தெரியவருகிறது.குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வோர் தடுப்பூசிகளை பெறுவதற்காக மன்னாருக்கு சென்று அங்கே பொய்யான ஆவணங்களை கையளித்து தடுப்பூசிகளை பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இவ்வாறான விமர்சனங்களின் விளைவாக அரசாங்கம் பைசர் தடுப்பூசியை இராணுவத்திடம் கொடுத்துவிட்டது. அதாவது ஒரு குறிப்பிட்டவகை தடுப்பூசியை இனி படைத்தரப்பிடம் மட்டும்தான் பெற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு நிலை உருவாகியிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் சீனத் தயாரிப்பு தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே மேற்கத்திய தயாரிப்பான பைசர் மோடோர்னா போன்ற தடுப்பூசிகளை பெற்றால்தான் மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.இதனால் அடிக்கடி மேற்கு நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் பைசர் தடுப்பூசியை விரும்புகிறார்கள் இவ்வாறானவர்கள் இனிமேல் இராணுவத்திடம் போய்த்தான் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
“பைசர் தடுப்பூசியை இராணுவத்திற்கு மாத்திரம் கொடுக்கும் தீர்மானத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இராணுவத்திற்குத் தடுப்பூசியை வழங்குவதானால், போரின் போது சுகாதாரத் துறைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நிபுணர் நவீன் டி சொய்சா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை பொதுச் சுகாதார துறையினரும் மருத்துவத் துறையும் போதிய அளவுக்கு வினைத்திறனோடு முன்னெடுக்கவில்லை என்று கூறி அதனை படைத்தரப்பு பொறுப்பேற்றது. இதன்மூலம் மருத்துவ ஊழியர்களால் மருத்துவ சுகாதார நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட வேண்டிய தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஒரு ராணுவ நடவடிக்கைபோல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள் முப்பது வயதுக்கும் மேலான அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுவிடும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதற்காக இரவு பகலாக தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை படைத்தரப்பு ஓய்வு ஒழிச்சலின்றி முன்னெடுக்கிறது. எனவே தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு படைத்தரப்பும் அரசாங்கமும்தான் பொறுப்பே தவிர சுகாதாரப் பிரிவினர் அல்ல என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இவ்வாறாக கடந்த 20 மாதங்களுக்கு மேலான இராணுவ மயமாக்கலின் அடுத்த கட்டமாக அண்மையில் அரசாங்கம் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகளைபிரகடனப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவு (30/08) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய அவ்வாறு பிரகடனப்படுத்தியுள்ளார். சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்பதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. அரசாங்கம் அறிவித்திருக்கும் முழுமையற்ற சமூக முடக்கம் காரணமாக விலைகள் மேலும் அதிகரிக்கின்றன. அரசாங்கம் இதற்கு முன்னரும் சில பொருட்களுக்கு விலைகளை நிர்ணயித்திருக்கிறது. ஆனால் அவ்வாறு விலைகளை நிர்ணயிப்பதன் மூலம் வணிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே கடந்தகால அனுபவமாகக் காணப்படுகிறது. இம்முறையும் அறிவிக்கப்பட்டிருக்கும் சமூக முடக்கமானது சமூகத்தை முழுமையாக முடக்கவில்லை.
மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாத காரணத்தால்தான் நாடு முடக்கப்பட்டது. அந்த நேரத்தில் அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருக்கவில்லை என்று கூறியிருக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த. அப்படியென்றால் அரசாங்கம் துறைசார் நிபுணர்களின் வேண்டுகோளை ஏற்றுக் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள். அதாவது துறைசார் நிபுணர்களின் நோக்கு நிலையிலிருந்து இந்த சமூக முடக்கம் அறிவிக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் பொருளாதார நோக்கு நிலையிலிருந்தே இந்த சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அரசாங்கம் அண்மைய மாதங்களில் அறிவித்த சமூக முடகங்களுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்தது. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது அறிவிக்கப்பட்டிருப்பது தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஹைபிரிட் சமூக முடக்கம் என்ற ஒரு பெயரையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். அதாவது இது முழுமையான அர்த்தத்தில் சமூக முடக்கம் அல்ல என்று பொருள். மருத்துவ நோக்கு நிலையிலிருந்து இது அறிவிக்கப்படவில்லை. பொருளாதார நோக்கு நிலையிலிருந்தே இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சமூக முடக்க காலத்தில் அத்தியாவசிய சேவைகள் என்ற பட்டியலின் கீழ் ஒரு தொகுதி தொழிற்துறைகள் தொடர்ந்தும் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. இதை வசதியாகப் பயன்படுத்தி சனங்கள் வீட்டுக்கு வெளியே வருகிறார்கள். நகரங்களின் மையங்களில்தான் சன நடமாட்டம் குறைவாக இருக்கிறது. புறநகர் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் ஜனங்கள் வழமைபோல நடமாடுகிறார்கள். சந்தைகள் மூடப்பட்டதால் தற்காலிக சந்தைகள் எல்லாக் கிராமங்களிலும் திறக்கப்பட்டு விட்டன. இச்சந்தைகளில் பொருட்களின் விலைகள் வழமையைவிட அதிகமாக காணப்படுகின்றன. உதாரணமாக திருநெல்வேலிச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்தில் தெருவோரங்களிலும் உள்வீதிகளிலும் திறக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் பொருட்களின் விலை வழமையைவிட அதிகமாக இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இது நல்லூர் திருவிழாக் காலம். இக்காலகட்டத்தில் மரக்கறி விலை பொதுவாக கீழே வந்துவிடும்.. ஆனால் இம்முறை கோயிலும் பூட்டு. சந்தையும் பூட்டு. ஆனால் விலைகளோ உச்சத்தில். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வைரஸ் தொற்றிவிடும் என்ற அச்சத்தோடு வீட்டுக்கு வெளியே வரும் சனங்கள் ஒருபுறம் வைரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் விலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.அனர்த்த காலத்தை தமக்கு வசதியாக பயன்படுத்தி வர்த்தகர்கள் உழைக்கத் தொடங்கி விட்டார்கள். சில பொருட்கள் பதுக்கப்பட்டதற்கும் பெருமளவுக்கு வணிகர்களே காரணம். எதிர்காலத்தில் குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் உயரலாம் என்று ஊகத்தின்அடிப்படையில் வணிகர்கள் பொருட்களை பதுக்குகிறார்கள். இதுசாதாரண ஜனங்களுக்கு சமூக முடக்கத்தை வேதனை மிகுந்த ஒன்றாக மாற்றிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு என்று ஒரு மேஜர் ஜெனரலை பொறுப்பாக நியமித்திருக்கிறது.
எனவே தொகுத்துப்பார்த்தால் தடுப்பூசிக்கும் ராணுவம்தான் பொறுப்பு. அத்தியாவசியப் பொருட்களுக்கும் ராணுவம்தான் பொறுப்பு.அரசாங்கம் நம்புகின்றது வேகமாக தடுப்பூசியை போடுவதன் மூலம் நோய் பரவும் வேகத்தையும் இறப்பு விகிதத்தையும் குறைக்கலாம் என்று. இந்த இலக்கை முன்வைத்து தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் படையினரிடம் தரப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதம் நடுப்பகுதியளவுக்குள் நாட்டிலுள்ள முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின்படி அரசாங்கம் கிட்டத்தட்ட அறுபது வீதத்துக்கு மேல் முன்னேறி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னரே பாடசாலைகளையும் அலுவலகங்களையும் முழுமையாக திறக்கலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. இது விடயத்தில் சில மேற்கத்திய நாடுகளின் முன்னுதாரணத்தை பின்பற்றி தடுப்பூசிகளை வேகமாக போட்டு.முடித்தால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று அரசாங்கம் நம்புகின்றது
ஆனால் தடுப்பூசி போடுவதற்கான தேசிய கொள்கையின்படி60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்காமல் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவது என்று அரசாங்கம் கொள்கையை மாற்றியது என்றும் இது தொடர்பில் சுகாதாரப்பிரிவுடன் அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் ஜேவிபி குற்றம்சாட்டுகிறது. இவ்வாறு திட்டத்தை மாற்றியதால்தான் அதிகளவு முதியோர் அண்மைக்காலங்களில் இறந்தார்கள் என்றும் அக்கட்சி கூறுகிறது. ஓகஸ்ட் மாதம் மொத்தம் 4850 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கிறார்கள் அவர்களின் 3000 பேர் தடுப்பூசி போடாத 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்களே என்று ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.
வைரஸ் புதிய திரிபுகளை அடையும் பொழுது தடுப்பூசி மட்டும் ஒரு தீர்வு அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மருத்துவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெருமளவுக்கு புறக்கணித்துவிட்டு ஆகக்கூடியபட்சம் தடுப்பூசியைப் போடுவதன்மூலம் நிலமையை கட்டுப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. நாடு முழுவதும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இழப்புகளைத்தாங்கினால் சரி என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. இது விடயத்தில் அரசாங்கம் திட்டமிடுவதுபோல நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டபின் நிலைமை கட்டுக்குள் வருமாக இருந்தால் அது அரசாங்கத்தை பலப்படுத்தும். மாறாக வைரஸ் மேலும் திரிபுகளை அடைந்துதடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது போனால் நிலைமை என்னவாகும்?