துளசி விஜி மற்றும் வருணிக்கா சங்கர் ஆகியோரின் வீணை அரங்கேற்றத்தில் சங்கீத வித்துவான் தனதேவி மித்ரதேவா புகழாரம்
“மிகக் கொடிதான கொரோனா நோய்த் தொற்று பரவிக் கிடக்கும் காலம் இது. இவ்வாறான இடர்மிகுந்த காலப் பகுதியில் எல்லோரும் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்றைய அரங்கேற்றம் அனைவருக்கும் ஒரு வியப்பூட்டும் ஒரு விழாவாகும். மேலும். தெய்வீகத் தன்மை கொண்ட வீணை அரங்கேற்றத்தை நடத்தியு ஆசிரியை குகனேஸ்வரி அவர்களைப் பாராட்ட வேண்டும், அத்துடன் இன்றைய அரங்கேற்றச் செல்விகளான துளசி விஜி மற்றும் வருணிக்கா சங்கர் ஆகியோரின் அர்ப்பணிப்பையும் ஆற்றலையும் நான் மெச்சுகின்றேன்’
.இவ்வாறு நேற்று 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறொ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற அரங்கேற்றச் செல்விகளான துளசி விஜி மற்றும் வருணிக்கா சங்கர் ஆகியோரின் வீணை அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சங்கீத வித்துவான் தனதேவி மித்ரதேவா தெரிவித்தார்.
கனடாவில் புகழ் பெற்ற இசைக் கல்லூரியான நாத வீணா மன்றத்தின் ஸ்தாபகரும் குருவும் ஆகிய ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களின் மாணவிகளின் வீணை அரங்கேற்றம் அன்றையதினம் நடைபெற்றது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக மண்டப உரிமையாளர்களின் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பார்வையாளர்கள் மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள்.
செல்விகளின் வீணை அரங்கேற்றத்திற்கு பிரதான பக்கவாத்தியக் கலைஞராக ‘மிருதங்க ஞானவாருதி’ வாசுதேவன் இராஜலிங்கம் பங்கெடுத்தார். அவரோடு சாகித்யன் ஜெயகாந்த். மோகனன் ரவீந்திிரன், வின்ஸ் ரவீந்திரன். காஸ்வி செந்தில் மணாளன் ஆகியோர் பக்கவாத்தியக் கலைஞர்களாக மேடையை அலங்கரித்தார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக சங்கீத ஆசிரியை பிரேமா ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியை ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களையும். அரங்கேற்றச் செல்விகளான துளசி விஜி மற்றும் வருணிக்கா சங்கர் ஆகியோரையும் வாழ்த்திச் சென்றனர்.
அரங்கேற்றச் செல்விகளான துளசி விஜி மற்றும் வருணிக்கா சங்கர் ஆகியோரின் வீணை வாசிப்புத் திறனை அனைவரும் கண்டும் கேட்டும் வியந்தனர். பக்கவாத்தியக் கலைஞர்களோடு இணைந்து ஓத்துழைத்து அனைத்து உருப்படிகளையும் சிறப்பான முறையில் நகர்த்திச் சென்ற செல்விகளையும் அவர்களை சிறப்பாக பயற்றுவித்த ஆசிரியை ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களையும் பாராட்டவே வேண்டும்.
அரங்கேற்றத்தை அறிவிப்பாளர் ரஞ்சித் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.