பிரபலமான அமேசான் நிறுவனத்தின் பெயரில் அவருக்கு வந்த குறுஞ்செய்தியில், அந்த நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் நாளொன்றுக்கு 8000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தது. அந்த குறுஞ்செய்தியில் வந்த செல்போன் எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள, அவர்களின் இணையதள லிங்க் ஒன்றையும் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கிற்குள் சென்று, அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் மீது முதலீடு செய்தால் சிறிது நேரத்தில் முதலீட்டுத் தொகையை விட அதிக தொகை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரும் என தெரிவித்துள்ளனர். அதனை நம்பி ஸ்ரீனிவாசன் முதலில் ஒரு பொருளின் மீது 500 ரூபாய் முதலீடு செய்ய, சிறிது நேரத்தில் 850 ரூபாய் அவரது வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது.
பின்னர், ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய, 1500 ரூபாய் வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. மகிழ்ச்சி அடைந்த சீனிவாசன், 4 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 9 ஆயிரம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்ததால் 4,000 ரூபாயை அடுத்து முதலீடு செய்துள்ளார். ஆனால், சொன்னபடி 9 ஆயிரம் ரூபாயை அனுப்பாமல், மெசேஜ் மட்டும் வந்தது, அதில் மேலும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்தால் தான் முதலீடும், லாபமும் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
அதனை நம்பி அடுத்த பொருளின் மீது பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்ய அதற்கும் இவருக்கு தொகை திருப்பி கிடைக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்று 8 பொருட்களின் மீது முதலீடு செய்ய வேண்டும் எனவும் எட்டு டாஸ்குகளையும் முடித்த பிறகே நீங்கள் செலுத்திய ஒட்டு மொத்த தொகைக்கும் லாபத்தோடு சேர்த்து பணம் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிய பணத்தை அப்படியே விட்டுவிடவும் மனமில்லாமல், எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலும், தன் கையில் இருந்த சேமிப்போடு, நண்பரிடமிருந்து கடன் வாங்கிய பணம் என எட்டு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார் சீனிவாசன். ஆனால் ஒரு பைசா கூட திருப்பிக் கிடைக்காமல் போனபிறகுதான், தான் ஒரு மோசடி வலைக்குள் சென்று சிக்கியதை உணர்ந்துள்ளார் சீனிவாசன்.