விழுப்புரம் மாவட்டம், ஆலங்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷிடம் பழக்கத்தின் அடிப்படையில் அறிமுகமான சிலர் எங்கள் நிறுவனம் மூலம் பல இடங்களில் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 18 ஆயிரம் ரூபாய் வீதம் மாதந்தோறும் கிடைக்கும் என்றும், கூறியுள்ளனர்.
அதன்பேரில் பிரகாஷ், தனக்கு தெரிந்த 25 பேரை அந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, அவர்களிடம் 2 கோடியே 63 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளார். இதில் கவுசல்யா, கவியரசன் ஆகியோரின் வங்கி கணக்குகளிலும், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வங்கி கணக்குகளிலும் என 60 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார்.
மீதமுள்ள 2 கோடியே 3 லட்சம் ரூபாயை கவுசல்யாவின் வீட்டிற்கு பிரகாஷ் நேரில் சென்று கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சக்திவேல், கவுசல்யா, கவியரசன் ஆகிய 3 பேரும் பிரகாஷ் உள்ளிட்ட 26 பேருக்கும் மாதந்தோறும் பணம் தராமல் ஏமாற்றி வந்தனர்.
பலமுறை வற்புறுத்தி கேட்டதால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில், 4 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சக்திவேல், கவுசல்யா, ராமசாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கவியரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.