ஒன்றாரியோ பாடசாலைகளின் ஒவ்வொரு வகுப்பறையிலும் காற்றோட்டத்தை சுத்திகரிக்க 600 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் ஸ்ரிபன் லெட்சே
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
”விடுமுறை நாட்கள் கழிந்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள ஒன்றாரியோ பாடசாலைகளின் ஒவ்வொரு வகுப்பறையிலும் காற்றோட்டத்தை சுத்திகரிக்க 600 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு அதற்குரிய பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த திருத்த வேலைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும். எமது மாகாணத்தின் ஒவ்வொரு பாடசாலையிலும் வகுப்பறைகளில் கல்வியை மேற்கொள்ள மீண்டும் இணைந்துள்ள மாணவர்கள் அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே பெற்றோர்கள் எவரும் கவலைப் படத் தேவை எதுவுமே இல்லை. பாடசாலைகளுக்கு வந்துள்ள அனைத்து மாணவர்களின் உடல் நலத்தைக் கவனிக்க மருத்துவத் தாதிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது”
இவ்வாறு தெரிவித்தார், கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் திரு ஸ்ரிபன் லெட்சே அவர்கள். இன்று பிற்பகல் ரொரன்ரொ பெரும்பாகத்தில் உள்ள பல்லின பத்திரிகையாளர்களை இணைய வழி கலந்துரையாடல் ஒன்றில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அவரோடு மேற்படி கலந்துரையாடலில், ஒன்றாரியோ மாகாணத்தின் குடிவரவு அமைச்சர் பாம் ஹில் அவர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.
மேற்படி பல்லின ஊடகவியலாளர்களின் கலந்துரையாடலில் உதயன் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். அங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் முதலில் அனைத்து மொழி சார்ந்த பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிததார். பின்னர் அவர் தனது உரையைத் தொடர்ந்தார்.
” நாம் பல்வேறு சவால்களைக் கடந்து சென்றுதான் இன்று எமது மாகாணத்தின் பாடசாலைகள் அ னைத்தையும் மீண்டும் திறந்துள்ளோம். எமது மாணவர்களை பாதுகாத்த வண்ணம் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டிய கடமையையும் பொறுப்பும் எமக்கு உண்டு என்பதை நாம் உணருகின்றோம். மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நாம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அதில் ஆசியர்கள் மற்றும் பாடசாலைகளில் பணியாற்றும் பொதுப் பணியாளர்கள் அனைவரும் தேவையான தடுப்பூசிகளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். அததுடன் பாடசாலைகளில் கடமைக்கு வரும் போதும் வாரத்திற்கு இரண்டு தடவைகள் தங்கள் நோய்த் தொற்று பரிசோதனைகளை மேற்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.இதைக் கண்காணிப்பதற்கு மருத்துவத்துறை சார்ந்தவர்கள் பணியாற்றுகின்றார்கள்.” என்றார்.
பின்னர் பாடசாலைகளில் வகுப்பறைக் கல்வியைத் தொடர விரும்பாதவர்களுக்கு எந்த வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற கேள்வியை ஒரு சீன மொழிப் பத்திரிகை ஆசிரியர் முன் வைத்த போது பதிலளித்த அமைச்சர் ” பாடசாலைகளில் வகுப்பறைக் கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது, ரிவிஓ மற்றும் பெயர் சைல்ட் ரிவி ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊடாக இணையவழிக் கல்வி பயிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்குரிய விபரங்களை பாடசாலைகளிலிருந்து பெற்று அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொலைக் காட்சி கல்வி கற்பிக்கும் ஏற்பாட்டின் படி ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பாடங்கள் அங்கு ஓளிபரப்பாகின்றன’ என்றார்.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற கேள்வியை முன்வைத்த ஒரு பத்திரிகையாளருக்கு அமைச்சர் பதிலளிக்கும் போது,
“பாடசாலைகளில் கல்வி கற்க வரும் மாணவர்களின் உடல் நலம் பற்றி முன்னேற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அல்லது அவர்களுக்கு உடல் வெப்பநிலை மாற்றம் ஏதாவது ஏற்பட்டால் அவர்களைக் கவனிக்க தாதியர்கள் உடனடியாக பணிக்கு அழைக்கப்படுவார்கள். அவ்வாறு இருந்தும் மாணவர் எவராவது மோசமான வகையில் உடல் நலம் குன்றியிருந்தால் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு தொடர்ந்து அவர்களின் பொறுப்பில் கையளிக்கப்படுவார்கள்’ என்றார்
இன்றைய தினம் பாடசாலைகளின் மாணவர்கள் வருகை தொடர்பாக அமைச்சர் என்ற வகையில் கனடா உதயன் பத்திரிகையின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் தெரிவிக்கையில் ‘இன்று சில பாடசாலைக்கு நானும் என அமைச்சின் அதிகாரிகளும் சென்றிருந்தோம். அங்கு மாணவர்களோடு உரையாடுகையில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார்கள். ஆசிரியர்களின் வேண்டுகோளின் படி அவர்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். எங்கள் முயற்சி வீணாகவில்லை என்றே கருதுகின்றேன்” என்றார் அமைச்சர்